சிரிக்க சிரிக்க பதட்டத்தோடு த்ரில்லரை சொல்லியிருக்கோம்!



ஆயிரம் ஜென்மங்கள் சீக்ரெட்ஸ்

‘‘‘ஆயிரம் ஜென்மங்கள்’ டைட்டிலை புரடியூசர் ரமேஷ் பிள்ளை கொண்டு வந்து சேர்த்தார். ரஜினி பட டைட்டில்னு ஒரே சந்தோஷமாகிடுச்சு. படத்திற்கு ரொம்பப் பொருத்தமான தலைப்பு. நான் இதுவரைக்கும் அதிகமா காமெடிப் படங்கள் செய்திட்டு வந்திருக்கேன். பேய்ப் படங்கள்னா சற்று தள்ளிப்போய்க் கூட இருந்தேன். அப்படிப்பட்டவன் இந்தப் படத்துல பேய்க்கதைன்னா அலறித் துடிக்காம, வாய்விட்டு சிரிக்க வைக்க முடியும்னு காண்பிச்சிருக்கேன்.

இந்த மாதிரி படங்களில் சவுண்ட், ஸ்பீடு, டெம்போ எல்லாம் சரிகலவையாக இருக்கணும். காமெடியும் இதில் வகையாக சேர்ந்து அமைஞ்ச கதையாக வந்தது. காமெடி ரொம்பவும் இருந்தால் பயம் கெட்டுப் போகும். அதனால காமெடி மாதிரியே ஒரு மூட் செட் பண்ணி செய்திருக்கேன். இப்போ என் உடம்புக்குள்ளே உட்கார்ந்து இருக்கிறது ‘ஆயிரம் ஜென்மங்கள்’தான்.

சிரிப்பு, பயம், த்ரில், திகில், ரொமான்ஸ், இசைனு இப்படி ஒரு கலவை இருக்க முடியுமானு உங்களுக்கே ஆச்சர்யம் தாங்க முடியாது. எப்பவும் எனக்கு இருக்கிற அங்கீகாரத்தை தக்க வைக்கணும்னு ஆசை. சளைக்காம, மலைக்காம உழைச்சுக்கிட்டு இருக்கோம்...’’ எளிமையாகப் பேசுகிறார் இயக்குநர் எஸ்.எழில். ‘துள்ளாத மனமும் துள்ளும்’ தொடங்கி இப்போது வரை நிதானமான வெற்றிகளைத் தொட்டவருக்கு இப்போது ‘ஆயிரம் ஜென்மங்கள்’ வரப்போகிற உற்சாகம்.

உங்களுக்கு இந்த ஜானர் புதுசு இல்லையா?
எவ்வளவு காமெடி, சென்டிமென்ட், ஆக்‌ஷன் வந்தாலும் த்ரில்லருக்கு எப்பவும் ஒரு மரியாதை உண்டு. சீட் நுனியில் உட்கார்ந்து நகம் கடிச்சுக்கிட்டே படம் பார்க்கிறதில் மக்களுக்கு எப்பவும் ஒரு ஆசை. ஜாலியாகவும் சிரிக்க வைச்சு, கொஞ்சம் பதட்டமா இருக்குற மாதிரியும் படம் இருந்தால் நல்லாயிருக்கும்னு நினைச்சோம். ஆங்கிலப் படங்களை 100 நிமிஷத்தில் நடுங்குற மாதிரி எடுத்து முடித்துவிடுகிறார்கள். ஆனால், இங்கே நமக்கு பாட்டு வேணும். சதா டென்ஷனோடும் இருக்க முடியாது.

கதையோடு அமைஞ்சு காமெடியும் வந்தால் நல்லதுதான். எனக்கு இதில் எல்லாம் அமைஞ்சது. என் நம்பிக்கையில் படம் நன்றாக வந்திருக்கிறது. படத்தில் உங்களை சந்தோஷப்படுத்துறதை மட்டுமே பொறுப்பாக எடுத்துக்கிறேன். அதை நீங்கள் கண்டிப்பாக உணர முடியும்.
உங்க டைரக்‌ஷனில் முதல் தடவையாக ஜி.வி. பிரகாஷ்…

அருமையானவர் பிரகாஷ். முதல் நாளிலேயே செட்டாகிட்டோம். பல்துறை வித்தகரா இருக்கார். ஷூட்டிங் இடைவேளையில் ‘அசுரன்’ படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்தார். அனாயாசமாக பாடல்களுக்கு ட்யூன் ரெடி பண்றார். சின்ன வயது. பிரபலமான மியூசிக் டைரக்டராக இருக்கார். நடிகராக வெற்றிகள் கொடுத்து நல்ல தூரம் வந்திட்டார். சினிமாவில் ஹீரோவாக அவர் முதல் என்ட்ரி கொடுத்த ‘டார்லிங்’ கூட த்ரில்லர்தான்.
எல்லாத்துக்கும் சரி சொல்றார். கனல் கண்ணன் மாஸ்டர் கயிறு கட்டி மூணு தடவை மேலே சுத்தி விட்டார். ரொம்ப ரிஸ்க் ஷாட். ஃபைட் போட்ட நேரம் தவிர அழகாக சிரிச்சுக்கிட்டு இருக்கார்.

நாம் என்ன நினைக்கிறோமோ அதை மக்களுக்குக் கடத்திட்டாலே போதும்னு நினைக்கிறேன். எழுதுறதுக்கும் காட்சி வடிவமாவதற்கும் நடுவில் ஒரு பெரிய கெமிஸ்ட்ரி இருக்கு. அதற்கு கொஞ்சம் கூடுதலான உழைப்பும், கவனமும் தேவைப்படுது. அதற்கு உறுதுணையாக இருந்தார் ஜி.வி.
ஏகப்பட்ட பெண்கள் இருக்காங்க…

ஐடி பெண்களுக்கு சமைச்சுப்போட வந்த சதீஷின் சமையல் எல்லோருக்கும் பிடிச்சுப் போயிடுது. அங்கேயே மாடி மேலே தங்கி வேலை செய்துக்கிட்டு இருக்கும் போது, அங்கே வேலையில்லாமல் வந்து சேர்கிறார் ஜி.வி. அவங்க முதலாளிக்கு ஒரு பிரச்னை. அதை சரி செய்யப்போய் ஒரு வம்பில் மாட்டுறாங்க. அது விஷயமாக பாங்காக் போக வேண்டியிருக்கு. அங்க ஒரு சைக்கோ. அதிலும் மீண்டு இங்கே வந்தா வேறு உருவத்தில் மிரட்ட இங்கேயும் அது முன்னாடி வந்து காத்திருக்கு!

வாய்விட்டு சிரிச்சு, பயமும் உண்டாக்குகிற இடங்கள். ஈஷா, வெண்பா, சாக்‌ஷி அகர்வால், நிகிஷா படேல்னு பொண்ணுங்க. குட்டி குட்டியாக சுவாரஸ்யங்கள் அவங்க கூட இருக்கு. கிளாமர் ரொம்ப அளவாகத்தான் இருக்கும். பாங்காக் வரைக்கும் போய் கலகலன்னு ஷூட் பண்ணிட்டு வந்திருக்கோம்.

கேமராமேன் யு.கே.செந்தில்குமார் உழைப்பைக் கொட்டியிருக்கார். சி.சத்யாதான் மியூசிக். பாட்டெல்லாம் பிரமாதமாக இருக்கு. ஆனால், பேய்ப்
படங்களுக்கு பின்னணி இசைதானே முக்கியம். அதையும் அருமையாக செய்து கொடுத்திட்டார். கண்டிப்பாக அந்த ஏரியா எல்லாம், அவர் ஸ்டைலில் எகிறும். நண்பன் மாதிரியிருந்து, தயாரித்திருக்கும் ரமேஷ் பிள்ளையை மறக்கவே முடியாது.

ஆரம்ப விஜய் படங்கள்… அவர் மேலேறி வந்ததில் உங்களை மாதிரியானவர்களுக்கு பங்கு இருக்கு. அவரைச் சந்திப்பீர்களா?
மூணு வருஷத்திற்கு முன்னாடி பார்த்தேன். ‘ஜில்லா’ ஷூட்டிங். அன்னிக்குப் பார்த்த அதே விஜய்தான். ஆனால், அவர் மார்க்கெட், படம் செய்கிற தினுசு எல்லாம் மாறி எங்கேயோ போய் நிக்குது. ரொம்ப சந்தோஷமா இருக்கு.

அவருக்கு இப்ப படம் செய்யணும்னா, வேற ஒரு டைப்பில் உட்கார்ந்து செய்யணும். குறைந்தது ஒரு வருஷம் உட்காரணும். அவருக்கான கதையே என் கைவசம் இல்லை. அப்புறம்தானே மத்த விஷயம் எல்லாம். இத்தனை வருட சினிமா அனுபவத்தில் கிடைச்சதை சொல்லுங்க…

இப்ப வர்றவங்க தெளிவாக வர்றாங்க. என்ன மாதிரி படம் பண்ணணும்னு திட்டம் வைச்சிருக்காங்க. எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல்னு பார்த்திட்டு, நானெல்லாம் ஓடியாந்திட்டேன். இளையராஜா பாட்டு கேட்டுட்டு வீட்டில் உட்காரமுடியலை. இங்கே வந்து உலக சினிமா எல்லாம் பார்த்தால், இங்கே இருக்க நியாயமே இல்லைனுபடுது.

சினிமாவைத் தெரிஞ்சுக்கிட்டது, புரிஞ்சுக்கிட்டது எல்லாமே இதற்குள்ளே வந்து சேர்ந்த பிறகுதான். என்ன படம் நாம எடுத்து செய்றதுனு ஆரம்பத்தில் புரியவே இல்லை.

நமக்கு இருக்கும் கஷ்டம், துக்கம், வறுமை, ஏழ்மை, சோகம்னு எதுவும் எனக்குப் பிடிக்கலை. ஆனால், அத்தனைக்கும் நடுவில் எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை இருக்கு. அது எனக்குப் பிடிச்சிருக்கு. அப்படி எல்லா துயரத்தையும் மறந்து சிரிச்சு, சந்தோஷமா பொழுது போக்க கொஞ்சம் நகைச்சுவையை சேர்த்துக்கிட்டேன்.

உலகத்திலேயே யாரும் காணாத கதைனு எதையும் நான் சொல்லலை. சிரிக்க வைச்சிருக்கேன். இனிமேலும் சினிமாவில் மெசேஜ் சொன்னா தாங்குமான்னு தெரியலை. ஆனால், சினிமாவில் வித்தியாசமா சொல்றோம்னு, தப்பாகச் சொல்லிடக்கூடாதுனு புரிஞ்சு வைச்சிருக்கேன். ஏன்னா, நம்ம குழந்தைகளே வளர்ந்து நின்னு காலேஜுக்கு போற காலம் வந்திருச்சு.

போன பாதையில் இப்ப நின்னு, ‘இப்படிப் பண்ணியிருக்க வேண்டாம்’னு நினைச்சு பயனில்லை. நடந்தது எல்லாமே பாடம்தான். உண்மையா, குறைந்த
பட்ச நேர்மையா இங்கே இருந்தால் தைரியமா, பயமில்லாமல் இருக்கலாம். எல்லாத்துக்கும் இறைவனின் அருளும் வேணும். இதுவரை கடந்து வந்த பாதை கொடுத்திருக்கிற தெளிவு இதுதான்!

நா.கதிர்வேலன்