ஏழைத் தாயின் ரேசிங் மகன்!ஊட்டியில் மூதொரை பாலடா கிராமம். அப்பா, காய்கறி மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி. சில வருடங்களுக்கு முன்பு அவரும் இதயப் பிரச்னையால் இறந்துவிட்டார். ஆனால் மகன் ஆர்.அருண்குமார் ஃபார்முலா 1 ரேஸ் கார் உருவாக்கும் குழுவுக்குத் தலைவராக இன்று கம்பீரமாக உயர்ந்திருக்கிறார்!எப்படி சாத்தியமானது?

‘‘சொந்த ஊரு மூதொரை பாலடா. அங்கதான் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளில படிச்சேன். அப்பா ரமேஷ், அம்மா பெயர் பார்வதி. அப்பா கூலித் தொழிலாளி. இதயத்துல அவருக்கு அடைப்பு. ஆபரேஷன் செஞ்சும் சரியாகலை. சமீபத்துல அவர் காலமாகிட்டார்...’’ என்று சொல்லும் அருண், பத்தாம் வகுப்பில் 480 மதிப்பெண்களை எடுத்திருக்கிறார்!

‘‘எழுத்தாளர் கார்த்திகா ராஜ்குமார் நடத்தற சிமிர்னா அமைப்பு மேற்கொண்டு நான் படிக்க ஸ்காலர்ஷிப் கொடுத்தது. ஸ்ரீரங்கா வித்யாலயா பள்ளில +1, +2 படிச்சேன். பயாலஜியைத்தான் விருப்பப் பாடமா எடுத்தேன்.

+2ல 1130 மார்க் எடுத்தேன். மகிழ்ச்சியோட ஸ்காலர்ஷிப் கொடுப்பதை தொடர்ந்தாங்கஆட்டோமொபைல் இன்ஜினியரிங் மேல எனக்கு தணியாத ஆர்வம். அதனாலயே கோவை குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜில ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் எடுத்தேன்...’’ உற்சாகத்துடன் சொல்லும் அருண், கல்லூரியில் சேர்ந்ததும் நண்பர்கள் மூலமாக ஒரு தகவலை அறிந்து ஆனந்தப்பட்டிருக்கிறார்.

‘‘நம்ம காலேஜுல கார் ரேஸ் டீம் இருக்கு... நாமும் அவங்க கூட சேரலாம்னு நண்பர்கள் சொன்னாங்க. உடனே எங்களுக்குள்ள ஒரு டீம் ஆரம்பிச்சு சீனியர்கள் கூட சேர்ந்து கத்துக்க ஆரம்பிச்சோம். எங்க உற்சாகத்தை பாத்து சீனியர் தங்களால முடிஞ்ச அளவுக்கு உதவினாங்க.

ஒரு ரேஸ் காரை நாங்க 25 பேர் சேர்ந்து ஒரு குழுவா உருவாக்கினோம். அந்த ரேஸ் காரைக் கொண்டு தில்லி புத் சர்வதேச சர்க்கியூட்டில் நடந்த போட்டில கலந்துக்கிட்டோம். அந்தக் குழுவுக்கு நான் தலைமையேற்றேன். அங்க தேசிய அளவுல 8வது இடம் பிடிச்சோம்...’’ என்ற அருண், தமிழக சாதனை குறித்தும் பேசினார்.

‘‘ஃபார்முலா ஸ்டூடண்ட் போட்டிகள் - எஃப்.எஃப்.எஸ். - 2019. இது ஆட்டோமோட்டிவ் இன்ஜினியர்களால் நடத்தப்படும் போட்டி. மொத்தம் 600க்கும் மேலான உறுப்பினர்கள் கொண்ட 20க்கும் மேலான குழுக்கள் கலந்துக்கிட்டாங்க. இதுலயும் நாங்க பங்கேற்று 8வது இடம் பிடிச்சோம்.

குமரகுரு கல்லூரிலயே கேம்பஸ் ரேஸ் சர்க்கியூட்டில் ரேஸ் நடத்தினாங்க. அதுல எங்களுடைய டீம் சேம்பியன்ஷிப் பெற்றது. ஆட்டோ கிராஸ், எண்டியூரன்ஸ், ஸ்கிட் பேட்னு ஐந்துக்கும் மேலான  பரிசுகளை வாங்கினோம்.

தமிழகத்திலேயே எங்க குழு வடிவமைச்ச காருக்கு இரண்டாவது இடம் கிடைச்சது. என் அப்பா இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தார்னா இதையெல்லாம் பார்த்து சந்தோஷப்பட்டிருப்பார்...’’ தழுதழுத்தபடி சொல்லும் அருண்குமார் நொடியில் சமாளித்துக் கொண்டார்.

‘‘அடுத்தடுத்து நிறைய நிகழ்ச்சிகள்ல கலந்துக்க தயாராகிட்டு இருக்கோம். எங்களுடைய சீனியர்கள் எப்படி எங்களுக்கு வழிகாட்டினாங்களோ அப்படி எங்க ஜூனியர்ஸுக்கு நாங்க வழிகாட்டி ஊக்குவிப்போம்...’’ அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார் இந்த ஏழைத் தாயின் ரேசிங் மகன்!

ஷாலினி நியூட்டன்