மனிதர்களை விட ஓநாய்கள் அதிகமாக வாழும் கிராமம்!



ஐரோப்பாவின் பல கிராமங்கள் இளைஞர்களும் குழந்தைகளும் இல்லாமல் காலியாகக் காட்சியளிக்கின்றன. அரிதாக வயதானவர்கள் மட்டுமே தென்படுகிறார்கள். அதனால், பிரசித்தி பெற்ற பல கிராமங்கள் காணாமல் போகும் அவல நிலை உருவாகியுள்ளது. தவிர, பிறப்பு
விகிதக்குறைவும் ஐரோப்பாவை ஆட்டிப்படைக்கிறது.

இந்நிலையில் யெர்னஸ் ஒய் டமீஸா என்ற கிராமம் ஐரோப்பியர்களின் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. ஸ்பெயின் நாட்டில் இருக்கும் தொலைதூர கிராமம் இது. இயற்கை எழில் கொஞ்சும் இந்தக் கிராமத்தில் வெறும் 46 பேர் மட்டுமே வசிக்கின்றனர். ஆனால், இந்தக் கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 135. மற்றவர்கள் எப்போதாவது வருவதும் போவதுமாக இருக்கின்றனர். அந்த 46 பேரில் 40 பேர் வயது முதியவர்கள். மற்ற 6 பேர் இருபது வயதுக்கும் குறைவானவர்கள்.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒன்றுகூட அங்கே இல்லை. ஐரோப்பாவிலேயே பிறப்பு விகிதம் குறைவாக உள்ள இடம் இதுதான். இளைஞர்கள் குறிப்பிட்ட வயதை அடைந்ததும் நகரத்துக்குச் சென்று அங்கேயே செட்டில் ஆகிவிடுகின்றனர்.இன்னும் கொஞ்ச நாட்களில் வயதானவர்கள் மட்டுமே கிராமத்தில் மிஞ்சியிருப்பார்கள். ‘‘நான் வளர்ந்தபோது இருந்த எந்த ஒன்றும் இப்போது இங்கே இல்லை. யெர்னஸ் ஒய் டமீஸா மெல்ல மெல்ல இறந்துவருகிறது...’’ என்கிறார் யெர்னஸ்வாசி ஒருவர்.

இத்தனைக்கும் எந்தவித பிரச்னையுமற்ற அமைதியான ஓர் இடம் யெர்னஸ். இயற்கையை நேசிக்கிற யாராலும் இந்த இடத்தை விட்டு வேறு இடத்துக்குப் போக முடியாது.மனிதர்கள் கிராமத்தை விட்டு வெளியேறுவது அதிகரிக்கத் தொடங்கியவுடன் விலங்குகளும் பறவைகளும் கிராமத்தை தங்களின் வாழ்விடங்களாக மாற்றத் தொடங்கிவிட்டன.

இப்போது யெர்னஸில் உள்ள மனிதர்களை விட ஓநாய்களின் எண்ணிக்கை மிக அதிகம். அதனால் சிலர் இக்கிராமத்தை ஓநாய் கிராமம் என்று கூட அழைக்கின்றனர்.‘‘இன்னும் முப்பது வருடங்களில் 80 சதவீத ஐரோப்பிய கிராமங்கள் அழிந்துவிடும்...’’ என்கிறார் இயற்கை விஞ்ஞானி எட்வர்ட். இது இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஒரு பாடம்.

த.சக்திவேல்