பெய்ய வேண்டிய மழை இன்னமும் வானில் மிச்சம் இருக்கிறது !



டிராட்ஸ்கி மருதுவின் இத்தாலி அனுபவங்கள்

புகழ் பெற்ற ஓவியக்கலைஞர் டிராட்ஸ்கி மருது எப்போதும் பயணங்களோடு நெருக்கமாக வாழ்பவர். தன் கோடுகளோடு வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தேடும் முயற்சியுடன் இவரது எல்லைகள் விரிந்து இருக்கின்றன. எல்லாச் சாலைகளும் ரோமை நோக்கி என்பார்கள். இப்போது இத்தாலியிலிருந்து ஓவியப் பபயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியிருக்கிறார்.

எந்த நாட்டுக்குப் போனாலும் நான் அங்கேயிருக்கிற ஓவியங்களை, மியூசியத்தை பார்க்க செலவிடும் நேரத்தையே முக்கியமாகக் கருதுவேன். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதான பழமையும், ஒழுங்கும் காலம் உறைந்து இருக்கும் அற்புதங்களும் கொண்ட இடங்களுக்கு தேடித் தேடிப் போகிறேன். நான் செல்வது டூரிஸ்ட் ஸ்பாட்கள் அல்ல. ஒவ்வொரு இடத்தையும் முழுக்க தெரிந்து கொண்டுதான் செல்கிறேன்.

ஐரோப்பாவில் ஜெர்மனி, பாரீஸ், லண்டன், சிசிலி மற்றும் ஜப்பான், கனடா, நியூயார்க் என தேடிக் கண்டடைந்த தரிசனங்களைச் சொல்லி மாளாது. பள்ளிக்கூடங்களில், பின்பு ஓவியம் பயிலும்போதான இடங்களில் கற்றவை, பார்த்தறிந்தவைகளை நேரில் பார்த்து தரிசனம் பெறும்போது பெற்ற உணர்வுத் ததும்பல்களை வார்த்தைகளில் அப்படியே சொல்வது கடினம்.

உண்மையான பயணிக்குத்தான், தான் எங்கு செல்கிறோமென்று தெரியாது என்பார்கள். தன்னுடைய கலையின் மூலம் தன்னுடைய குரலை மற்றவர்களுக்கு கேட்கும் வண்ணம் நமது முந்தைய ஓவியர்கள் செய்திருக்கிறார்கள். இப்படியான பயணங்களில் முகம் தெரியாத மனிதர்களுடன் கடந்துபோயிருக்கிறேன். பார்த்த  எல்லா ஓவியங்களுக்கும் தனியாக சரித்திரமிருக்கிறது.

அதுவும் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என காலங்களுக்குள் பயணம் போகும். அவற்றின் மகத்துவத்தை நீங்கள் நேரில் பார்த்தே அறிய வேண்டும். இந்த இத்தாலி ரோம் பயணத்தின் வாயிலாக நானே என்னை திரும்பிப் பார்த்துக்கொண்டேன். ஓவியர்கள் யார் யாரெல்லாம் அங்கே அரூபமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என நினைக்கையில் ஆச்சரியமாயிருக்கிறது.

இந்தமுறை இத்தாலி ரோமை நோக்கி என் ஓவியப் பயணமென ஆக்கிக்கொண்டேன். மகாபலிபுரத்தைச் சேர்ந்த சிற்பிகள் ரமேஷ், பாஸ்கர், மற்றும் இத்தாலியைப் பிறந்த இடமாகக் கொண்ட சிற்பி ஸ்டிஃபனோவும் என்னுடன் வந்தார்கள். இந்த இத்தாலிய சிற்பி பல காலமாக இந்தியாவுக்கு வந்து போய்க்கொண்டு இருக்கிறார். ஸ்வீடனில் வாழ்ந்திருக்கும் அவர், இத்தாலி போய்ச் சேர்ந்து எங்களுக்காகக் காத்திருந்தார்.

இருந்த நாட்கள் முழுவதும் இத்தாலியின் பரப்புகளை காரிலேயே பயணம் செய்து காண நேர்வது எனது வாழ்க்கையின் நற்பலன்தான். ஆர்விதோ, பெருசியா, சியன்னா, ஃப்ளோரன்ஸ், பைசா நகரங்கள் வழியாக வந்து சேர்ந்த ரோம் நகரில் அதிக நாட்களைக் கழித்தோம். என் அனு பவங்கள் விரிய விரிய தொலைவிலிருந்து அழைத்துக் கொண்டிருந்த அந்த நகரங்களோடு நான் உள்ளூரக் கலந்தேன்.

அங்கே மக்கள் அவர்களின் கலை வடிவங்களை தங்கள் சொத்துபோல் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். தன்னைப்போலவே அவைகளை எண்ணிக் கொள்கிறார்கள். கட்டடக்கலை நுணுக்கங்களோடு பரந்துபட்டு நிறுவிக்கொண்டு இருக்கிறார்கள்.

லியானார்டோ டாவின்சி, மைக்கேல் ஆஞ்சலோ என ஓவியர்கள், சிற்பிகள் மீதான அக்கறையும், பெருமதிப்பும் அவர்களிடம் பொங்கி வழிகிறது. டாவின்சியின் பெயர் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களிலிருந்து, சூப்பர் மார்க்கெட், சாதாரண டீக்கடை வரைக்கும் வைக்கப்பட்டிருக்கிறது.

பெயர் குழப்பத்திற்கு நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் ஓவியர்களையும்,சிற்பி களையும் அவ்விதமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். டாவின்சியும், மைக்கேல் ஆஞ்சலோவும் தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை உன்னதமான ஓவிய நிலைகளில் கரைத்துக் கொண்டு வாழ்வை கழித்திருக்கிறார்கள்.

அவற்றை நேர் கொண்டு பார்க்கிறபோது ஒவ்வொரு ஓவியத்திலும் இறுதியாக மறைந்து கிடக்கும் எஞ்சிய மெய்த்துளியை நான் பருகிக்கொண்டே இருந்தேன். கலையின் போக்கும் பொருளுமே அதுதான். கலை மட்டும் கலையின் இலக்கு அல்ல. நம்மை வேறு ஒரு பயணத்திற்கு இட்டுச்செல்லும் பயணம்தான் கலை.

கலையின் ஆழத்தை புரிந்து கொள்ளுதலும், அறிந்து கொள்ளுதலும் கடினம் எனப்புரிந்தது. என்றென்றைக்குமான உண்மை என ஒன்றில்லை என்பது பயணங்களில் தெளிவாகிறது.ரோமில் எத்தனையோ ஓவியர்கள், சிற்பிகள் இருந்திருக்கிறார்கள்.

இதன் ஓவிய மரபு நீண்டது. மனிதத் துயரத்தில் மிக முக்கியமானது தன் நினைவுகளைத் துறப்பது. ஆனால், எல்லாம் இழந்து இந்த ஓவியர்கள் தங்களை நிறுவிக் கொண்டே இருக்கிறார்கள். நாம் இவர்களை நினைத்துக் கொள்ளவும், நம்மையே அறிந்து கொள்ளவும்தான் இந்தப் பயணங்கள்.

என்னை ஒரு ஓவியனாக உருவாக்க மானசீகமாகக் காரணமாக இருந்தவர்களுக்காக இந்தப் பயணங்களைத் தொடர்கின்றேன்.
மெதுவாக நடந்து சென்றால் கூட நம்மால் இந்த உலகைச் சுற்றி வரமுடியும். ஒவ்வொரு மனிதனுக்கும் இத்தகைய பயணங்கள் அவசியமானது. பெய்ய
வேண்டிய மழை இன்னமும் வானில் மிச்சம் இருக்கிறது. அடிக்க வேண்டிய காற்றும் மரங்களில் மீதமிருக்கிறது. இது புரிந்தால் நமக்குப் போதுமென்பேன்.

நா.கதிர்வேலன்