Face to Face குஷ்பூ பதில்கள்



சாதி இருக்கக் கூடாதுனு சொல்ல மாட்டேன்!

சாதியை ஒழிக்க முடியுமா?
- கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு.

சாதி இருக்கட்டும். அது இருக்கக்கூடாதுனு நான் சொல்லமாட்டேன். ஆனா, சாதியினால நமக்குள்ள வேறுபாடு, இடைவெளிகள் வந்துடக்

கூடாது. அதுக்காக கருத்து சுதந்திரம் இல்லாமலும் போயிடக்கூடாது. சாதி என்பதே நம்மால உருவாக்கப்பட்டதுதானே!
ஒரு சம்பவம் நினைவுக்கு வருது. ஒரு ஊர்ல ஒருத்தர் இறந்துட்டார். அவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்னு காரணம் சொல்லி, அவரோட டெட் பாடியை இடுகாட்டுக்குக் கொண்டுபோற வழக்கமான பாதைல எடுத்துட்டு போக விடாம தடுத்துட்டாங்க.

அப்புறம், வேறொரு வழியா ஆத்துப் பாலம் எல்லாம் கடந்து டெட் பாடியை கொண்டு போயிருக்காங்க. தமிழ்நாட்டுலயே இப்படி அக்கிரமங்கள் நடக்குது. செய்தித்தாள்ல இதைப் படிச்சதும் வருத்தமாகிடுச்சு. சாதியை ஒழிக்கணும். ஆனா, மதம் இருக்கறவரை சாதிகள் இருக்கும். மதத்தை நம்மால ஒழிக்க முடியுமா?

இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் எது?
- பழனிமாணிக்கம், பொள்ளாச்சி.

வேலை இல்லா திண்டாட்டம்தான். இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னையே அதான். அப்படி இல்லைனு யாராலும் மறுக்கவும் முடியாது.
இன்னிக்கு நல்லாப் படிச்ச மாணவ மாணவிகள் வேலை கிடைக்காம அல்லாடறாங்க. இந்த இளைஞர் சமுதாயம் நல்ல வேலைல இருந்தாதான் நாடும் முன்னேறும்.

அடுத்த பெரிய சவாலா, பொருளாதார நிலைமை இருக்கு. வெளிநாட்டு ரூபாயோட மதிப்பு எகிறிக்கிட்டே போகுது. ஒரு டாலருக்கான இந்திய மதிப்பு என்னனு பார்த்தா பகீர்னு இருக்கு! இன்னிக்கு யார் கையிலும் பணம் இல்லை. வேலை கிடைக்கலை. பணப்புழக்கமே இல்லை. வேலை கிடைச்சாதானே வருமானம் இருக்கும்? இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி ஐந்து டிரில்லியன்னு சொல்றோம். ஆனா, அப்படியா இருக்கு? இப்ப ஜிடிபி வளர்ச்சி வெறும் அஞ்சு பர்சன்ட்தான் இருக்காம்.

நீங்க அஞ்சு வருஷம் ஆட்சியில் இருந்திருக்கீங்க. ஒரு நல்ல வளர்ச்சியை உங்களால கொண்டு வரமுடியல. மீண்டும் அரசமைச்சு நூறு நாட்களுக்கு மேல ஆகிடுச்சு.இத்தனை நாட்கள்ல தவறுகளை சரி செய்திருக்கலாம். ஆனா, எதையும் பண்ணலை. ‘மன்மோகன்சிங் பிரதமரா இருந்தப்ப இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருந்தது’னு எல்லாரும் சொல்றாங்க.

இப்ப பல இடங்கள்ல தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருது. மக்கள் என்னதான் பண்ணுவாங்க?!

சிடு மூஞ்சியை சிரிக்க வைப்பது... அறிவாளியை சிந்திக்க வைப்பது... எது கஷ்டம்?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

அறிவாளியை சிந்திக்க வைக்கறதுதான்! ஏன்னா, ‘எனக்குத்தான் அறிவு இருக்கே... நான் ஏன் சிந்திக்கணும்’னுதான் அவங்க நினைப்பாங்க. எப்பவும் ஒரே பார்வையில்தான் யோசனையும் பண்ணுவாங்க. மத்தவங்க பாயிண்ட் ஆஃப் வியூவைப் பத்தி கொஞ்சமும் கவலையே படமாட்டாங்க.
இன்னொரு விஷயம். அறிவாளினு அவங்களே முடிவும் பண்ணிக்குவாங்க!

அரசியலில் வெற்றி கண்ட ஜெயலலிதா, தன் சொந்த வாழ்க்கையில் தோல்வியடைந்தது ஏன்?
- மு.ரா.பாலாஜி, சொர்ணகுப்பம்.

பேராசை. தன்னைவிட அதிகமா எப்பவும் அடுத்தவங்களை நம்பினது. இன்னொரு விஷயம்... power hungry. ஒரு பொசிஷன் நமக்கு எப்பவும் இருக்கணும்கற எண்ணம். அப்புறம், பழிவாங்கும் உணர்வு. இதெல்லாம்தான் காரணமா இருக்கும்!

தாங்கள் கண்ட கனவு, லட்சியம் நிறைவேறியுள்ளதா?
- பி.சாந்தா, மதுரை; ரமேஷ், சேலம்.

ஒரு வகையில் நிச்சயமா நிறைவேறியிருக்கு. ஒரு அழகான குடும்பம் அமையணும்னு ஆசைப்பட்டேன். நினைச்சதை விட ரொம்பவே அழகான, அன்பான ஃபேமிலி அமைஞ்சிருக்கு. அதைத் தாண்டி வாழ்க்கையில வேற எதுக்கும் நான் ஆசைப்பட்டது கிடையாது.

போக்குவரத்து விதிமீறலுக்கு அதிக தொகை வசூலிப்பதால் நடுத்தர, ஏழை மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்களே..?
- வீ.இராமச்சந்திரன், தர்மபுரி; நூர்ஜகான், திண்டுக்கல்;
முருகானந்தம், பாளையங்கோட்டை.

இந்த அபராதத் தொகையை பல மாநிலங்களில் பெருமளவில் குறைச்சிருக்காங்க. குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூட இந்தத் தொகையை குறைச்சிருக்கார். இத்தனைக்கும் அங்க பாஜக ஆட்சிதான் நடக்குது.

மக்கள் மீது இந்தளவு ஒரு தொகை வசூலிக்கணும்னு சொல்றீங்க... சரி... மொதல்ல, இந்த ரோடை எல்லாம் சரிபண்ணணும் இல்லையா? எங்க பார்த்தாலும் குண்டும் குழியுமா இருக்கு. அப்புறம், நிறைய இடங்கள்ல ரூல்ஸை மீறுறாங்க. சிக்னலையே மதிக்காம அரசு பேருந்தை ஓட்டறாங்க.

இதை தடுக்க வேண்டிய போலீஸ்காரங்க, கையைக் கட்டிக்கிட்டு சும்மா வேடிக்கைதான் பார்க்கறாங்க. இதையே ஒரு பைக் ஓட்டுறவர் பண்ணினா, பட்னு பிடிச்சு அபராதம் விதிச்சு வசூலிக்கறாங்க. குறிப்பிட்ட இடத்துல யூ டர்ன் எடுக்கக் கூடாதுனு ரூல்ஸ் இருந்தா... ஒரு தனியார் வாகனம் அங்க யூ டர்ன் பண்ணினா... உடனே அதைப் பிடிச்சு அபராதம் விதிக்கறாங்க. ஆனா, அதே இடத்துல ஒரு அரசு பஸ்ஸோ, அரசியல் கட்சி வாகனமோ யூ டர்ன் பண்ணினா கண்டுக்க மாட்டேங்கறாங்க!

ரூல்ஸ்னா எல்லாருக்கும் ஒரே மாதிரிதான் இருக்கணும். மொதல்ல சட்டத்தை சரிபண்ணுங்க. ரோடை சரிபண்ணிக்குடுங்க. இதையெல்லாம் செய்யாம ஆயிரக்கணக்கான தொகையை அபராதமா விதிக்கறது எந்த விதத்துல நியாயம்னு எனக்குத் தெரியலை!

நீங்கள் சந்திக்க விரும்பும் அரசியல் தலைவர் யார்?
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

அவங்க இப்ப உயிரோட இல்ல. யெஸ். நான் சந்திக்க விரும்பியது இந்திராகாந்தி அவர்களைத்தான். நான் வளர்ந்து வரும் டைம்லயே - அதாவது 1984லயே அவங்க படுகொலை செய்யப்பட்டு இறந்துட்டாங்க.

சின்ன வயசுல எங்களுக்கு இந்திரா காந்தியை மட்டும்தான் தெரியும். இந்தியாவையே கட்டுக்கோப்பா வச்சிருந்த ஒரு தலைவரா, ஒரு இன்ஸ்பிரேஷனா அவங்க தெரிஞ்சாங்க. அவங்களுக்கு அடுத்து ராஜீவ்காந்தி. இப்பக் கூட இந்திரா அம்மையார் இருந்திருந்தால், நிச்சயம் அவங்கள நான் சந்திச்சிருப்பேன்.

காதல்..?
- சங்கீதசரவணன், மயிலாடுதுறை.

உலகத்துல மிக மிக அழகான ஒரு ஃபீலிங்னா அது காதல்தான். காதல், அன்பு எல்லாம் ஆண் - பெண்ணுக்கு இடையே மட்டும்னு சொல்லிட முடியாது. காதல் யார் மீதும் எதன் மீதும் வரலாம். வீட்ல இருக்கற நாய்க்குட்டி மீது கூட வரலாம். இது அன்பால் நிறைந்த உலகம். காதல் புனிதமானது. அதை அசிங்கப்படுத்தியது நாமதான். அதாவது, மனிதர்கள்தான்!

(பதில்கள் தொடரும்)