இன்ஸ்பெக்டர் பாலாஜி சக்திவேல்!



நடிகராக புது அவதாரம் எடுத்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். ‘காதல்’, ‘வழக்கு எண்’ என டைரக்‌ஷனில் முத்திரை பதித்தவர் ‘அசுரன்’ படத்தில் முரட்டு மீசையும், மிரட்டல் பார்வையுமாக இன்ஸ்பெக்டராக அதகளம் செய்திருக்கிறார். அதுவும் க்ளைமாக்ஸ் கோர்ட் சீனில் கையில் வெற்றிலைப் பெட்டியுடன் அவர் நிற்கும் தோரணை அக்மார்க் ரகம்.

‘‘சந்தோஷமா இருக்கு. ‘அசுரன்’ நல்லா ரீச் ஆகியிருக்கு. பெரும் தாக்கத்தை அந்தப் படம் எல்லார்கிட்டயும் ஏற்படுத்தி இருக்கு. இந்த சக்சஸை ஆரோக்கியமானதா பாக்கறேன். ஒரு பீரியட் ஃபிலிமை அதன் வலியை உணர்ந்து எல்லாருமே உள்வாங்கினது மகிழ்ச்சியா இருக்கு.

இப்படி ஒரு தீவிரமான விஷயத்தைப் போல இன்னும் பல விஷயங்களைச் சொல்ல விரும்பறவங்களுக்கு இந்தப் படம் ஒரு சத்து டானிக்கா அமைஞ்சிருக்கு.

படத்துல அவர் நல்லா நடிச்சிருக்கார்... இவர் நல்லா நடிச்சிருக்கார்னு பிரிச்சு மேய்ஞ்சு தனித்தனியா சொல்றதை விட மொத்த படமுமே நிறைவா திருப்தியா இருக்கு. வெற்றிமாறனோட ‘வெற்றி’ல ஓர் ஓரமா நானும் இருக்கேன்... இதைவிட வேறென்ன வேணும்...’’ உற்சாகத்துடன் கேட்கிறார் பாலாஜி சக்திவேல்.

‘‘ஆமா. எனக்கு ரொம்ப பிடிச்ச இயக்குநர்கள்ல வெற்றிமாறனும் ஒருத்தர். சென்ஸிபிளானவர். அவர் என்னை நடிக்க கூப்பிட்டதும் அந்த வாய்ப்பை மறுக்கத்தான் அவர் ஆபீசுக்கு போனேன். ஆனா, வெற்றி என்னைப் பார்த்ததும், என் காஸ்ட்யூமுக்கான அளவுகளைக் குறிக்க ஆரம்பிச்சிட்டார்! எதுவும் பேச முடியலை!

ஸ்பாட்டுல வெற்றி சார் சொன்னதை மட்டும்தான் பண்ணிட்டு வந்தேன். படம் பார்த்தபிறகு எனக்கே கொஞ்சம் பெருமையா இருக்கு! ‘கேரக்டராவே வாழ்ந்திருக்கீங்க’னு படம் பார்த்துட்டு எல்லாரும் சொல்றாங்கனா அந்த க்ரெடிட் வெற்றிமாறனுக்குத்தான் போய்ச் சேரணும். மொத்த படத்தையும் தனுஷ் தன் தோள்ல சர்வ சாதாரணமா சுமந்திருக்கார்.

ஸ்பாட்டுல அவர் உழைப்பை நேர்ல பார்த்து மிரண்டுட்டேன். ஒரு சீன்ல காட்டுக்குள்ள சிதம்பரமா நடிச்ச தன் மகன் கென்னை சுமந்துக்கிட்டு, தளர்வா நடந்து போகணும். அந்த சீன் ஷூட் பண்றப்ப நான் அங்கதான் இருந்தேன். பர்ஃபாமென்ஸ்ல மிரட்டறார் மனுஷன். ஆனா, நடிப்புல திருப்தியே அடைய மாட்டேங்கறார். ‘இல்ல சார்... இன்னும் பெட்டரா பண்ணிருக்கலாம்’னு தன்மையா சொல்றார். என்ன மனுஷன்...

தனுஷ் ஒரு சிறந்த நடிகர்னு நிரூபிச்சிட்டே இருக்கார். அவரையும், வெற்றிமாறனையும் எவ்ளோ பாராட்டினாலும் பத்தாது.இப்ப நடிக்க கேட்டு நிறைய ஆஃபர்ஸ் வருது.

‘வானம் கொட்டட்டும்’ல நடிச்சு முடிச்சாச்சு. அடுத்து நான் இயக்கிட்டிருக்கற படத்தோட பேலன்ஸ் ஷூட் கேரளால எடுக்க வேண்டியிருக்கு. இந்தப் படம் இயக்கி முடிச்சதும்தான் அடுத்து நடிக்கறதைப் பத்தி யோசிக்கணும்.
ஓர் உணர்வு பூர்வமான படத்துல என்னை நடிக்க வச்சு அழகு பார்த்த வெற்றிக்கு ஒரு பெரிய தேங்க்ஸ்!’’ நெகிழ்கிறார் பாலாஜி சக்திவேல்.

மை.பாரதிராஜா