இ- சிகரெட்டை தடை செய்தது சரியா?



இந்தியாவில் கடந்த வருடம் மட்டும் புகைப்பழக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சம். அதிலும் புகையிலை பயன்பாட்டினால் இதய நோய் ஏற்பட்டு இறந்தவர்கள் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர். இதய நோய், சுவாச நோய், நுரையீரல் புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் புகைப்பழக்கத்தால்தான் ஏற்படுகின்றன. இந்நிலையில் சிகரெட்டுக்கு மாற்று வழியாக உள்ளே நுழைந்ததுதான் எலக்ட்ரானிக் சிகரெட் என்னும் இ - சிகரெட். இதற்கும் இப்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘‘சிகரெட்டில் நிகோடின் உட்பட நாலாயிரத்துக்கும் மேற்பட்ட ரசாயனங்கள் உண்டு. அவை தீங்கானவை. ஆனால், இ - சிகரெட்டில் நிகோடின் மாத்திரமே உள்ளது. இது சிகரெட்டுக்கு அடிமையானவர்களை மெல்ல மெல்ல விடுவிக்கும். இதனால் பெரிய தீங்கு ஒன்றும் ஏற்படாது...’’ என்று இ - சிகரெட்டுக்கான விளம்பரங்கள் வந்தன. அத்துடன் சிகரெட்டில் உள்ள ‘டார்’ எனும் ரசாயனம்தான் நோய்களுக்குக் காரணம்; நிகோடின் அல்ல என்பது போன்ற பிரசாரங்களும் வலுத்தன.

ஆகவே ‘‘இ - சிகரெட் தடை எல்லாம் சிகரெட் கம்பெனிகளுக்கான விளம்பரம். இது அரசின் மெத்தனத்தைத்தான் காட்டுகிறது...’’ என ஒரு சாரர் சொன்னாலும் ‘‘இ - சிகரெட் ஒன்றும் பரிசுத்தமானது அல்ல; இந்தத் தடையால் இந்தியாவின் எதிர்கால சந்ததியே காப்பாற்றப்பட்டுள்ளது...’’ என வாதிடுகிறார்கள் புகையிலைக்கு எதிரான ஆர்வலர்கள்.

இச்சூழலில் புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழ்நாடு மக்கள் முன்னணியின் தலைவரான சிரில் அலெக்சாண்டரிடம் பேசினோம்.
‘‘இ - சிகரெட்டில் நிகோடின் மட்டுமா இருக்கு...’’ என்று ஆக்ரோஷமாக ஆரம்பித்தார் அவர். ‘‘ஐநூறுக்கும் அதிகமான ஃபிளேவர்களில் இ - சிகரெட் கிடைக்கின்றன. இவையெல்லாமே ரசாயனங்கள்தான். அத்துடன் நிகோடின் எதுவுமே செய்யாது என்று சொல்வதற்கான எந்த ஆய்வும் இல்லை. அதுவும் விஷம்தான் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.

ஒரு காலத்தில் வெற்றிலை, பாக்கு மட்டுமே இருந்தன. பிறகு போதை ஏற்படுத்தும் பாக்குகள் வந்தன. இதே மாதிரி பீடி, சுருட்டு, சிகரெட் என மாறி இ-சிகரெட்டில் வந்து நிற்கிறது. இது சிகரெட்டிற்கு மாற்று என்று நாம் தவறாக புரிந்துகொள்ளக்கூடாது...’’ என்றவரிடம் ‘சிகரெட் கம்பெனிகளே இ - சிகரெட்டை விளம்பரப்படுத்துமா..?’ என்றோம்.

‘‘ஒவ்வொரு நிறுவனமும் அடுத்த கட்டத்தைப் பற்றித்தான் யோசிக்கும். அப்படி யோசித்தால்தான் லாபம் ஈட்ட முடியும். இந்த அடிப்படையில்தான் சிகரெட் நிறுவனங்களே இ - சிகரெட்டுக்கும் விளம்பரம் செய்கின்றன. இ - சிகரெட்டால் சாதாரண சிகரெட்டுக்கு ஒன்றும் பாதிப்பு வராது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

உதாரணமாக சிங்கப்பூரில் 30 சதவீதக் குழந்தைகள் பள்ளிக்கே இ - சிகரெட்டைக் கொண்டு வருகிறார்கள். பல நாடுகள் இ - சிகரெட்டைக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடுகின்றன. அப்படியிருக்கும்போது இங்கே தடை செய்யப்பட்டது நல்லது. எந்த வடிவில் வந்தாலும் புகையிலையைத் தடை பண்ண வேண்டும் என்பதுதான் எங்களைப் போன்ற அமைப்புகளின் முழு நோக்கம்.

கட்டுப்படுத்துங்கள்; தடை வேண்டாம் என்று சொல்வது எல்லாம் நடைமுறைக்கு சரிப்பட்டு வராது. சிகரெட்டின் விலை அதிகபட்சம் 20 ரூபாய் என்றால், ஒரு இ - சிகரெட்டின் குறைந்தபட்ச விலையே ஆயிரம் ரூபாய்க்கு மேல். சிகரெட்டில் வரும் லாபத்தை விட பல மடங்கு அதிகம்.

இந்தியர்களின் பணத்தையும் ஆரோக்கியத்தையும் சூறையாடுவதற்குத்தான் சிகரெட் முதலாளிகள் முயல்கிறார்கள். தவிர, சிகரெட்டை மறக்க நிகோடின் கலந்த சாக்லேட்டுகள், மாத்திரைகள் என்று இருக்கிறதே... அதை இந்த முதலாளிகள் சிபாரிசு செய்யட்டுமே; மாட்டார்கள். காரணம், அது தோல்வியில்தான் முடியும். லாபமும் பெரிதாக இருக்காது.

அதனால்தான் இ - சிகரெட்டுக்கு ஆதரவாக இவ்வளவு குரல்கள்...’’ என்று சிரில் அலெக்சாண்டர் முடிக்க, ராமச்சந்திரா மருத்துவமனையின் புற்றுநோய் சிறப்பு மருத்துவரான தமிழ்ச்செல்வன் தொடர்ந்தார்.

‘‘மதுவை சோடா ஊற்றிக் குடிக்கலாமா... வெறும் தண்ணீர் கலந்து குடிக்கலாமா... என்பதுபோல்தான் இந்தப் பிரச்னை. நிகோடின் ஒரு நச்சு என்பது நிரூபணமான உண்மை. அதேபோல சிகரெட்டில் வெளியாகும் ‘டார்’ என்னும் ரசாயனப் பொருளும் நச்சுதான்.  

இந்த இரண்டும் சேர்ந்தாலும், தனித்தனியே பிரிந்தாலும் கேடுகளில் கூடுதல் குறைவு இருக்குமே தவிர முற்றிலுமாக கேடுகளே இல்லை என்ற நிலை ஏற்படாது. நிகோடினும் சரி... டாரும் சரி... உடலுக்கு கெடுதல்தான்...’’ அழுத்தமாகச் சொல்கிறார் டாக்டர் தமிழ்ச்செல்வன்.         

டி.ரஞ்சித்