COFFEE TABLE



அனு பாலிசி

மற்ற நடிகைகளிலிருந்து கொஞ்சம் வித்தியாசமானவர் ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ ஹீரோயின் அனு இமானுவேல். இன்ஸ்டாவில் தன் புகைப்படங்களைப் பதிவிட்டால் அது எங்கு க்ளிக்கியது... எதற்காக க்ளிக்கியது... என எந்த விவரமும் இருக்காது. பதிலாக ஸ்மைலிகள் புன்னகைக்கும். சமீபத்தில் வொயிட் காஸ்ட்யூமில் போட்டோ ஒன்றை பதிவிட்டு ஒன்றரை லட்சம் லைக்குகளையும், ஹார்ட்டீன் கமென்ட்களையும் குவித்திருக்கிறார்.

சுருங்கும் பூமி!

‘‘மக்கள் தொகை அதிகரிப்பு, காலநிலை மாற்றம், நிலங்களைச் சீர்கேடாக்குவது போன்றவற்றால் உலகத்தின் நில மூலாதாரம் சுருங்கி வருகிறது...’’ என ஐ.நா.வின் ஆய்வு வெடிகுண்டை வீசியிருக்கிறது.  இதுபோக உணவு, எனர்ஜி மற்றும் மரம் சார்ந்த பொருட்களுக்காகவும் உற்பத்திக்காகவும் நில மூலாதாரங்கள் தொடர்ச்சியாக சுரண்டப்படுவது தனிக்கதை.

‘‘நிலம் இப்படி சுருங்கினால் சமூகங்களுக்கு இடையே போட்டியும் புகைச்சலும்தான் வரும். தவிர, காட்டு உயிரினங்களின் வாழ்க்கையும் அபாய நிலைக்குத் தள்ளப்படும்...’’ என்று எச்சரிக்கிறது இந்த ஆய்வு. அமேசான் காடு எரிந்துகொண்டிருக்கும் நிலையில் ஐ.நா.வின் இந்த ஆய்வு பெரும் பரபரப்பைக் கிளப்புகிறது.

அகதியின் பாடல்

பணவீக்கத்தால் பெரும் அவதிக்குள்ளாகிவிட்டது வெனிசுலா. முட்டை வாங்கவே பை நிறைய பணம் கொண்டுபோக வேண்டிய சூழல். வெனிசுலாவாசிகளில் பாதிப்பேர் அகதிகளாக வெவ்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். அப்படி பெரு நாட்டிற்கு அகதியாக வந்த வெனிசுலா பெண்தான் இணையத்தில் இப்போது ஹாட் டாக். பிழைப்புக்காக தன் குழந்தையைக் கையில் ஏந்தியபடி அவள் பாடும் காட்சியை வீடியோவாக்கி, சமூக வலைத்தளங்களில் தட்டிவிட கமென்ட்டுகள் கண்ணீரில் கரைகின்றன.  

இந்த போனில் சினிமாவே எடுக்கலாம்!

வாடிக்கையாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த ‘ரெட்மி நோட் 8 ப்ரோ’ கடந்த வாரம் சீனாவில் வெளியானது. கேமராவுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த போனை வடிவமைத்திருக்கின்றனர். 1080 பிக்ஸல் ரெசல்யூசனுடன் 6.53 இன்ச்சில் மெகா டிஸ்பிளே, கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம், 4500mAh பேட்டரி திறன், 64 எம்பியில் பிரமாண்ட பின்புற கேமரா, 20 எம்பியில் செல்ஃபி கேமரா என அசத்துகிறது இந்த போன். விலை ரூ.18,000 - ரூ.21,000.

கிளாமருக்கு நோ!

‘லிங்கா’ ஹீரோயின் சோனாக்‌ஷி சின்ஹாவிடம் புது மாற்றம். சோஷியல் மீடியாவில் கிளாமர் போஸ்களைத் தவிர்த்து வருகிறார். ஆரஞ்ச் டாலியாக பூத்துக்குலுங்கும் சோனாக்‌ஷியின் புது மாறுதலுக்கு வரவேற்பு அள்ளுது. இன்ஸ்டாவில் 17 லட்சம் ஃபாலோயர்களை நெருங்கும் பொண்ணின் ஒவ்வொரு பதிவிற்கும் குறைந்தது ஐந்து லட்சம் லைக்குகளாவது கன்பார்ம்.