GOOGLE எமனா..? கடவுளா..?



உலகிலேயே வேலை பார்க்க மிகச் சிறந்த நிறுவனங்களில் ஒன்று கூகுள். இலவச உணவு, அற்புதமான சுற்றுப்புறம், கை நிறைய சம்பளம், சமூகத்தில் அந்தஸ்து.  இவை எல்லாம் ஒவ்வொரு இன்ஜினியரின் கனவு.  ஆனால், ஒரு நாள் கூகுள் நிறுவனத்தில் வேலை பார்த்த சில ஊழியர்கள்  மிகவும் அதிருப்தியுடன் இருந்தார்கள். புதிதாக கூகுள் நிறுவனத்தின் ஒரு ப்ராஜெக்ட் அவர்களை அதிருப்தி அடையச் செய்தது. தங்கள் வேலையை  ராஜினாமா செய்யப் போவதாக போர்க்கொடி உயர்த்தினார்கள்.    

இதற்கு கூகுள் நிறுவனம் பணிந்தது.ஆனால், விஷயம் இதுவல்ல. ‘அந்த ப்ராஜெக்ட்டை செய்ய மாட்டோம்... மாறாக வேலையை ராஜினாமா  செய்கிறோம்...’ என்றார்களே கூகுள் நிறுவன ஊழியர்கள்... அதுதான் நியூஸ்.ஆம். தனிப்பட்ட தங்கள் நலன்களுக்காக அல்ல... சமூகத்துக்காகவே கூகுள்  நிறுவனத்தின் அந்த ப்ராஜெக்ட்டை செய்ய மாட்டோம் என போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள்! ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா..? ப்ராஜெக்ட்டை  குறித்து அறிந்தால் வியப்புக்கு பதில் அதிர்ச்சியே ஏற்படும்! யெஸ். தன் நிறுவனத்தின் சேவைகளையும் தகவல்களையும் பயன்படுத்தி நவீன  ஆளில்லா வெடி குண்டுகளை வீசும் சிறிய விமானங்களை மேம்படுத்தும் திட்டத்தையே கூகுள் புதிய ப்ராஜெக்ட்டாக முன் வைத்தது. அந்த  தானியங்கி சிறிய விமானங்கள், முழுக்க முழுக்க போரில் பயன்படுத்தப்படும். குறிப்பாக ஈராக் மற்றும் சிரியாவில். இதை drone என்று அழைப்பார்கள்.  இதை எதிர்த்துதான் கூகுள் நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்!

சரி. எதற்காக இப்படியொரு ப்ராஜெக்ட்டை கூகுள் கையில் எடுத்தது..?ஈராக் நாட்டை அமெரிக்கா ஆக்கிரமித்த நேரம். அப்போது அமெரிக்க  இராணுவத்துக்கு பல குழுக்கள் தண்ணீர் காட்டிக் கொண்டிருந்தன. இதற்கான திட்டங்களை சிறப்பாக வகுத்து அமெரிக்காவை திணறடித்தவர்  முஹம்மத்.அவரை எப்படியாவது கொல்ல வேண்டும்..? ஆனால், எப்படி..? விழித்தது அமெரிக்கா. ஏனெனில் பதுங்கு குழியில் அவர் மறைந்திருந்தார். அமெரிக்கா அசரவில்லை. மெல்ல மெல்ல தகவல்களைத் திரட்டி அவர் பயன்படுத்தும் செல்போன் நம்பரைக் கண்டுபிடித்தது. இதை வைத்து அவர்  இருக்கும் இடத்தை அறியலாம் என்றால்... பெரும்பாலும் தன் செல்போனை அவர் அணைத்தே வைத்திருந்தார்.அதை ஆன் செய்து அவர் ஆஃப்  செய்யும் குறுகிய காலத்துக்குள் அவரைக் கொல்வது இராணுவத்தால் முடியாத செயல். காரணம், அவர் இருக்கும் இடத்துக்கு அமெரிக்க இராணுவ  வீரர்கள் செல்வதற்குள் முஹம்மத் தப்பிவிடுவார். எனவே, அமெரிக்க இராணுவத்தினர் தொழில்நுட்பத்தின் உதவியை பயன்படுத்திக் கொண்டார்ள். ம்.  சிறிய இடத்துக்குள்ளும் ஊடுருவும் ட்ரோன்களைப் பயன்படுத்தினார்கள்.  

திட்டம் இதுதான். முஹம்மத் தன் செல்போனை பயன்படுத்தும் ஒருசில நிமிடங்களில், சிக்னலை உள்வாங்கி அவர் இருப்பிடத்தை அறிய வேண்டும்.  பின்னர் அந்த இடத்தின் புவியியல் புள்ளிகளை இராணுவத்திடம் கொடுக்க வேண்டும். இந்தப் புள்ளிகளின் உதவியுடன் குறிப்பிட்ட அந்த இடத்துக்கு  droneகளை ஏவி அங்கு விழ வைக்க வேண்டும். ட்ரோனில் இருக்கும் குண்டு வெடிக்கும்!காதில் பூ சுற்றுவது போல் இருக்கிறதல்லவா..? ஆனால்,  நவீன தொல்நுட்பத்தின் உதவியுடன் இப்படித்தான் முஹம்மத்தை அமெரிக்க இராணுவம் கொன்றது. இதற்கான கால அளவு வெறும் 45  நொடிகள்தான்!

இந்த அளவுக்கு அமெரிக்க இராணுவம் துல்லியமாக கணித்து செயல்பட வேண்டுமென்றால் நிச்சயம் கூகுளின் ஓர் அங்கமான கூகுள் மேப்  சேவையின் உதவி தேவை! அந்தச் சேவையை கூகுளும் அப்பொழுது செய்தது! அதனாலேயே முஹம்மத், ட்ரோனால் கொல்லப்பட்டார்.  இப்பொழுது  இந்த ‘மாடலை’ இன்னும் மேம்படுத்த அமெரிக்க இராணுவம் நினைக்கிறது. அதாவது செயற்கை அறிவுத்திறன் (artificial intelligence) மற்றும்  இயந்திர கற்றல் (Machine Learning) ஆகியவற்றையும் இம்முறையில் கலக்க நினைக்கிறது.

இதற்காக கூகுள் நிறுவனம் மிகப்பெரும் ஒப்பந்தத்துடன் உதவ முன்வந்தது. தங்களின் அறிவும் ஆற்றலும் முழுக்க முழுக்க போரில் மற்றவர்களைக்  கொல்வதற்காக பயன்படுத்தப்படுவதை கூகுளின் ஊழியர்கள் விரும்பவில்லை. எதிர்த்தார்கள். ராஜினாமா செய்வதாக மிரட்டினார்கள். இதனை  அடுத்தே அந்தத் திட்டத்தைக் கைவிடுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது.இது நல்ல விஷயம்தானே என்று கேட்கலாம்.பொறுங்கள். இன்னமும் சில  உண்மைகள் இருக்கின்றன!பல ஆண்டுகளாக அமெரிக்க இராணுவத்துக்கும் அந்நாட்டின் உள்நாட்டு - வெளிநாட்டு உளவு நிறுவனங்களான எஃப்பிஐ,  சிஐஏ ஆகியவற்றுக்கும் கூகுள் உதவித்தான் வருகிறது. இதற்காக பல பில்லியன் டாலர்களை பெறவும் செய்கிறது.

கூகுள் மட்டுமல்ல; ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட், ibm, அமேசான், ஆப்பிள் நிறுவனங்களும் தங்கள் பங்குக்கு அமெரிக்க இராணுவம் மற்றும் எஃப்பிஐ,  சிஐஏவுக்கு உதவவே செய்கின்றன.அதற்காக மற்ற நாடுகளுக்கு இவை சேவை செய்வதில்லை என்று அர்த்தமில்லை! எல்லா நாட்டு  இராணுவத்துக்கும் உளவு அமைப்புக்கும் மேலே சொல்லப்பட்ட சமூக வலைத்தளங்கள் ‘பணத்துக்குத் தகுந்த அளவில்’ பாரபட்சம் இல்லாமல்  உதவுகின்றன; தகவல்களைத் தருகின்றன. இதன் வழியாக கோடிக்கணக்கான டாலர்களைப் பெறுகின்றன.ஒன்று தெரியுமா..? கால் டாக்சி டிரைவர்  முதல் ஆட்டோ ஓட்டுநர் வரை இன்று அனைவரும் கூகுள் மேப்பை பயன்படுத்துகிறார்கள் அல்லவா..? இந்த சாஃப்ட்வேரை கூகுளும் சிஐஏவும்  இணைந்துதான் முதன்முதலில் உருவாக்கியது! பின்னர் அனைத்து நாடுகளுடன் கைகோர்த்து கூகுள் எர்த் செயலியை மக்களுக்கு  அறிமுகப்படுத்தியது!

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட். நம் நாட்டில் இருப்பதைப் போலவே அமெரிக்காவிலும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் உண்டு. ஆனால், இந்தச் சட்டத்தின்  மூலம் கூகுளின் சேவைகளை அந்நாட்டு மக்கள் அறிய முடியாது. யெஸ். அமெரிக்க நாட்டின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து கூகுளின்  பல சேவைகளைப் பற்றிய தகவலைப் பெற விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது!         

வினோத் ஆறுமுகம்