சூர்யா, மோகன்லால், ஆர்யா… காப்பான் சுவாரஸ்யங்கள்



‘‘ஓகே.இப்ப கொஞ்சம் பேசிடலாம். சூர்யா, மோகன்லால், ஆர்யானு மூன்று கேரக்டர்ஸை வைத்து யோசித்து, அதில் சூர்யாவை ஹீரோவாக சுவாரஸ்யமான சம்பவங்களோடு இணைச்சு உட்கார வச்சு பார்த்தால் ஒரு நல்ல கதை பளிச்சுனு வந்து நின்னது.

நினைச்ச மாதிரியே ‘காப்பான்’ பண்ணிட்டு வந்திட்டு உங்ககிட்டே சந்தோஷமா, தைரியமாப் பேசுறேன்!’’ கண்களில் ரியாக்‌ஷன் பார்க்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த். ‘காப்பான்’ படத்துக்காக பிரமாண்ட உழைப்பு கொட்டிய அயர்ச்சியைத் தாண்டியும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது குதூகலம்.

எப்படி வந்தது இந்த ஐடியா ?

‘கவண்’ முடிச்ச பிறகு சூர்யா கூப்பிட்டுகிட்டே இருந்தார். அவருக்கு லைன் ஒண்ணு சொல்லியிருந்தேன். இந்த மூன்று கேரக்டர்களைப் பத்திச் சொன்னதும் மூன்றும் சேர்ந்திருக்கே, எங்கே ஃபோக்கஸ் பண்ணுவீங்கனு கேட்டார். இந்த மூன்று கேரக்டரும் இணைந்து இருப்பதையும், அதை மையம் கொண்டு நீங்க ஹீரோவாக இருக்கீங்கன்னும் தெளிவுபடுத்தினேன்.

‘கதை நல்லாயிருக்கு,அமைப்பு நல்லா வந்திருக்கு’ன்னு யோசித்துவிட்டு ஓகே சொல்லிட்டார். பெரியவரா யார் சரியா இருப்பாங்கன்னு அடுத்த தேடுதல் வேட்டை. கம்பீரம், சும்மா வந்தாலே அந்த இடத்தை அமைதிக்கு கொண்டு வந்து வைக்கிற மாதிரி ஒரு தேஜஸ் உள்ளவர் வேண்டும்.

முதலில் அமிதாப் பேச்சு வந்து, மம்முட்டி வரைக்கும் பேச்சு திரும்பி கடைசியில் ேமாகன்லால்தான் காட்சிக்கு வந்தார். ‘தேன்மாவின் ெகாம்பத்து’ முதல் எனது முதலிரண்டு படங்களுக்கு அவர்தான் ஹீரோ.

நான் ஒளிப்பதிவு செய்யாத பெரிய நடிகர்களே இல்லை. ஒரு ப்ரேமிற்கு எதிரே ஒரு கேமிரா இல்ைலனு நடிக்கிற ஒரே ஆளாக நான் பார்த்தது மோகன்லாலைத்தான். தமிழில் தனுஷ் அப்படிஇருக்கார். ஒரு கேமிராமேனாக மோகன்லாலில் தொடங்கி, பிறகு ‘முதல்வன்’ செய்து, ‘சிவாஜி’
 வந்து, பிறகு ‘அயன்’னு டைரக்டர் ஆகி... என் வளர்ச்சி அவருக்குப் பிடித்திருந்தது.

நான் போகும் போதே ‘கே.வி. படம் பண்றோம்’னு அவர் முடிவு பண்ணிட்டார். என்ன லைன்னு தெரியும். கதையைக் கூட கேட்கலை. அதுதான் என்மேல் வைச்ச நம்பிக்கை. ஒரு மாபெரும் நடிகன் வைச்சிருக்கிற அந்த அன்பு என்னை நெகிழ்த்திப்போட்டது உண்மை.
இதில் ஆர்யா வந்தது எப்படி ?

அது ஒரு தனிக்கதை. இதில் அல்லு சிரிஷ்தான் நடிப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவரது விசா கேன்சல் ஆகிவிட்டது. எங்களுக்கோ ஷூட்டிங் ஆரம்பிக்கணும். சூர்யா, மோகன்லால் ரெடியாக இருக்காங்க. அந்த இடத்துக்கு ஒரு நாளைக்கு எட்டு லட்சம் ரூபாய் வாடகை. 500 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்ஸ் ரெடி.

அப்போதான் ஆர்யாகிட்டே 5 வருஷ விசா இருக்குனு சொன்னாங்க. அவரிடம் கதை சொல்ல ஆரம்பித்தால் ‘நான் செய்தால் நல்லாயிருக்குமா பிரதர். அதை மட்டும் சொல்லுங்க’னு கேட்டுட்டு வந்துட்டார். எங்களோட பிரச்னை களைய அவர் எடுத்த அருமையான முடிவு. அவருக்கான சிறப்பான இடத்தை இந்தச் சினிமாவில் கொடுத்திருக்கேன்.சூர்யாவோட இது மூணாவது படம்…

இரண்டு பேருக்கும் எப்பவும் நல்ல அலைவரிசை இருக்கும். அவரை மாதிரி கேரக்டர் டெவலப் பண்ண யோசிக்கிறவர் வேற யாரும் இல்லை. ரிஸ்க் ஷாட், ஒன்மோர் டேக்குக்கு அஞ்சவே மாட்டார். கடைசி வரைக்கும் ஃபைன் ட்யூன் பண்ணணும்னு எப்பவும் அவருக்கு ஆசை இருக்கும்.

ஸ்பாட்ல கதையைப் பற்றி மட்டுமே யோசிப்பார். சீனுக்கு என்ன சூழ்நிலையோ, அதுமாதிரியே இருப்பார். யாரும் அந்த சமயம் அவரிடம் அநாவசியமாக பேச முடியாது. பேக்கப் ஆன பின்னாடிதான் போனையே எடுப்பார். தனியா சுதந்திரம், வசதி அனுபவிக்கணும்னு நினைக்கவே மாட்டார்.

நான் பார்த்ததில விஜய் சேதுபதிதான் பயங்கரம். ஒரே நேரத்தில் அஞ்சு வேலை பார்ப்பார். அவர் பையன் போன் பண்ணுவான். அவர் மனைவி பேசிட்டு இருப்பாங்க. புரடியூசர்ஸ், ஃப்ரண்ட்ஸ் இடைவேளையில் வந்திடுவாங்க. ஆபீஸ் மாதிரியே வேலை பார்ப்பார். இடையில் ‘ஷாட்’டுக்கும் வந்து நியாயம் செய்வார். சாமி... அவரை மாதிரி நான் யாரையும் பார்த்ததில்லை.

சூர்யா, சமுத்திரக்கனி, மோகன்லால், ஆர்யானு கலகலப்புக்குப் பஞ்சமிருக்காதே!சமுத்திரக்கனியும், லாலும் பெரிய கேங். என்கிட்ட வந்து ‘கேர்ள் ஃப்ரண்ட் இல்லையா ஆனந்த்’னு கலாட்டா பண்ணுவார். லால் ஜாலியா இருக்கிறமாதிரியே தெரியும். ஆனால், எனக்குத் தெரியும். நடிப்பு என்பது ஒரு ஷாட் அல்ல. மொத்தமாக ஒரு பிஹேவியர் கொண்டதுனு அவர் புரிந்து வைத்தவர்.

ஆர்யா ஜாலி. கேரக்டரே அதுதான். சூர்யாவிற்கு நிறைய டைலாக்கா, நமக்கான்னு எந்தக் கவலையும் படாத ஜீவன். ஆனால், இவ்வளவு களேபரத்திலும் சாயிஷாவை காதலிச்சிட்டு இருந்திருக்கார். கண்ணைக்கட்டி விட்டமாதிரி, எனக்குக் கொஞ்சம்கூட தெரியாமல் போச்சு. அட, யாருக்குமே தெரியலைங்க. ஆனால், நல்ல ஆத்மா!சாயிஷா எப்படி?

அருமையான பொண்ணு. திறமைக்கு குறைவாகத்தான் அவரை நாம் மதிப்பிட்டு இருக்கோம். டான்ஸில் புலி. குழந்தை நட்சத்திரமாக இருந்து வந்ததால் ஒரு  விஷயம் சொன்னதும் உடனே புரிஞ்சுப்பாங்க. இந்தப்படத்தில் அவங்க பெரிய அட்ராக்‌ஷன்.
ஹாரிஸ் மறுபடியும் உங்க லைனுக்கு வந்திட்டார்...

எனக்கு அவர் கூட நல்லா செட்டாகும். ஒரு சின்ன இடத்திற்குக்கூட கீ போர்டில் கை வைச்சு ஓர் அழகைக் கொடுப்பார். இதில் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் என்னோட இணைஞ்சிருக்கார்.

நான் எப்பவும் எழுத்தாளருக்கு முழு மரியாதை கொடுப்பேன். மியூசிக் டைரக்டருக்கு அடுத்தபடியாக நான் எழுத்தாளர் பெயர்தான் போடுவேன். எந்தப் பொருளை யாருக்குக் கொடுக்கணும் என்பதில் தெளிவா இருக்கேன். அதே சமயம் இலக்கியம், இலக்கணம் எல்லாம் தாண்டி சினிமா பணம் பண்ணுகிற விஷயம். அதிலும் நான் தெளிவா இருக்கேன்.  
   
நான் எப்பவும் Film by K.V.Anandனு போட்டதே இல்லை. நீங்க ஒரு நாவல் எழுதினால் ஏ நாவல் பை இன்னார்னு போட்டுக்கலாம். புரடியூசர் பணம் போடாமல், மியூசிக் டைரக்டர் நல்ல பாடல் கொடுக்காமல், எடிட்டர் அருமையாக எடிட் பண்ணாமல் ஒரு படம் கிடையாது. ஹீரோ கூட இது என்னால் ஓடுகிறதுனு சொல்ல முடியாது.

நம்ம எண்ணத்தை படம் பிடிக்கிற ஒளிப்பதிவாளரும் வேணும். இவ்வளவு பேர் புழங்குகிற ஏரியாவில் Film by K.V.Anandனு போடுவது சுயநலத்தின் உச்சம். நான் அப்படிச் செய்வதில்லை!  
                
நா.கதிர்வேலன்