1.5 லட்சம்...நாடு முழுவதும் நிலுவையில் இருக்கும் சிறார் பலாத்கார வழக்குகள்...



இப்படிப்பட்ட சமூகத்தில் வாழப் பழகியிருக்கிறோம் என்பது கொடுமையா வேதனையா அவமானமா?

காவல்நிலையத்தில் அப்பாவிப் பெண்ணின் பிறப்புறுப்பில் லத்திைய செருகிய போலீஸ்... கர்ப்பிணிப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அந்தப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவை ரோட்டில் வீசிவிட்டுச் சென்றவன்... வழிபாட்டுத் தலங்களில் வல்லுறவு செய்யும் மதவெறியர்கள்... ஒடுக்கப்பட்ட பெண்களைச் சூறையாடும் ஆதிக்க சக்திகள்...

எவ்வித புரிதலும் இல்லாத சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிவிட்டு ஓடியவன்... வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பலாத்காரம் செய்து கொன்று சடலத்தை பையில் போட்டு சாலையோரத்தில் தீயிட்டு எரித்தவன்... சிறுமியை பலாத்காரம் செய்தபின் அவளது தம்பியையும் சேர்ந்து தண்ணீரில் தள்ளிக் கொன்றவன்... ஓடும் பஸ்சில் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்...

இப்படிப்பட்ட சமூகத்தில் வாழப் பழகியிருக்கிறோம் என்பது கொடுமையா வேதனையா அவமானமா?

பாலியல் வன்முறைகள் நடக்கும்போதெல்லாம் அதற்கு சாதி, மதம், மொழி, இன அடையாளங்களைச் சுமத்தி பேசும் சமூகம், தனிமனித ஒழுக்கங்களைக் குறித்து உரையாடுவதில்லை. அதற்கான பயிற்சியும் நம் கல்விமுறையில் இல்லை.பலாத்காரப் பிரச்னைகளில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஊடகம், போலீஸ், மருத்துவப் பரிசோதனை, பிரேத அறிக்கை, நீதிமன்றம், சாட்சி விசாரணை, குற்றப்பத்திரிகை, தீர்ப்பு என பல கட்டங்களைத் தாண்டி வந்த பின்னரே நீதி கிடைக்கிறது.

இதற்காக அவர்கள் அவமானம், அலைக்கழிப்பு, நீதிக்காக நீண்ட நெடிய பயணம், நிவாரணம் பெற முடியாமல் தவிப்பு, எதிர்காலம் குறித்த கேள்வி, இருண்ட வாழ்க்கை, சமூகம் தன் மீது கொண்டுள்ள பார்வை... இவற்றையெல்லாம் கடக்க வேண்டியிருக்கிறது. பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக குற்றம் இழைக்கும் குற்றவாளிகள் பெரும்பாலும் போதைக்கு அடிமையாகி இருப்பதும், மது அருந்தி இருப்பதும், பல வழக்குகளில் காண முடிகிறது.

வீதிக்கு வீதி திறந்து வைக்கப்பட்டுள்ள மதுபானக் கடைகள் ஆண்களின் உயிரை மட்டும் கொல்வதில்லை; பெண்களுக்கு எதிராகவும் செயல்படுகிறன்றன. ஆக, அரசும் மறைமுகமாக பெண்களின் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு துணை போகிறது என்பதே உண்மை.
சமீபத்தில் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து சிறார்களைப் பாதுகாக்கும் சட்டத்தில் (போக்சோ) திருத்தங்கள் மேற்கொள்வதற்கான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்துவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அப்போது பேசிய சில எம்பிக்கள், ‘சட்டங்களை உருவாக்குவதும், அதில் திருத்தங்களை மேற்கொள்வதும் மட்டும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக அமையாது. பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகப் பதிவு செய்யப்படும் வழக்குகளை விரைவில் விசாரித்து உடனுக்குடன் தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும்...’ என்றனர்.

மேலும், ‘தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்குத் தகுந்த அதிகாரங்கள் வழங்கவில்லை. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க சுதந்திரமான தீர்ப்பாயங்களை மத்திய அரசு அமைக்க வேண்டும். பாலியல் குற்றங்களை இழைப்பவர்களின் வயதைக் கருத்தில் கொள்ளாமல், அனைவருக்கும் ஒரேமாதிரியான தண்டனை வழங்க வேண்டும். கலப்புத் திருமணம் உள்ளிட்ட விவகாரங்களில் போக்சோ சட்டத்தை சிலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர்...’ என்றும் எம்பிக்கள் குறிப்பிட்டனர்.

இதற்கிடையே, போக்சோ வழக்குகளை விசாரிப்பதற்கு நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய அரசின் நிதியுதவியுடன் தனி நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த தனி நீதிமன்றங்களை மத்திய அரசு தனது சொந்த நிதியில் 60 நாட்களில் அமைக்கவும், அந்த நீதிமன்றங்களில் போக்சோ வழக்கு விசாரணையில் நிபுணத்துவம் பெற்றவர்களை அரசுத் தரப்பு வழக்கறிஞர்களாக நியமிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், போக்சோ வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண, நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தடயவியல் ஆய்வகம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி, ‘‘கடந்த 2013ல் அமைக்கப்பட்ட நிர்பயா நிதியம் மூலம், 29 வகையான பெண்கள் பாதுகாப்பு திட்டங்களை அமல்
படுத்த மாநிலங்களுக்கு ரூ.2,250 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

தனி நீதிமன்றங்கள் அமைப்பது மாநில அரசுகள் மற்றும் உயர்நீதிமன்றங்களின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இருப்பினும், தேசிய பெண்கள் பாதுகாப்பு திட்டப்படி, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் ஆகியவற்றை விரைந்து விசாரிக்க வசதியாக 1,023 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான மொத்த செலவு ரூ.767.25 கோடி...’’ என்றார்.

சமீபத்தில் உச்சநீதிமன்றம் வெளியிட்ட ஒரு புள்ளி விவரத்தில், நாடு முழுவதும் 1,50,331 சிறார் (சிறுமிகள்) பலாத்கார வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது. இந்த வழக்குகளால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காகக்காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேற்கண்ட வழக்குகள் போக்சோ சட்டத்தில் தொடரப்பட்ட வழக்குகள் என்பதால், அவற்றை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வசதியாக சிறப்பு நீதிமன்றங்களை உடனடியாக அமைக்க உத்தரவிட்டது. அப்போது, நாட்டில் நீதிபதிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும், போக்சோ சட்ட வழக்குகள் அதிகமாக இருப்பதாக, நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.

கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை சிறார் பலாத்காரப் புகார்கள் தொடர்பாக, நாடு முழுவதும் 24,212 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனில், பதிவாகாமல் இருப்பவை எத்தனை... எத்தனை... குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடக்கப் போவதாகத் தெரியவந்தாலோ அல்லது பாலியல் வன்கொடுமை நடந்ததாக அறிந்திருந்தாலோ, சிறப்பு சிறார் காவல் அலகு அல்லது உள்ளூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க விழிப்புணர்வு பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நடத்தப்படுகிறது.

அதேபோல், கருக்கலைப்பு, சிசுக்கொலை, குழந்தைத் தொழிலாளர், குழந்தை கடத்தல், குழந்தை பாலியல் கொடுமை, குழந்தைத் திருமணம் உள்ளிட்ட வன்முறைகளைத் தடுக்க அவசர உதவி எண் 1098ஐ தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இவை அனைத்தும் சட்டங்களின் வழியே தீர்வு காண முற்படும் நடவடிக்கைகள்.

ஆனால், தண்டவாளத்தின் இன்னொரு பகுதிபோல் தனிமனித ஒழுக்கத்தைக் கற்பிக்காத, வலியுறுத்தாத, பின்பற்றாத சமூகத்தில் சட்டங்கள் வெறும் எழுத்துகளாகத்தான் இருக்கும் என்பதையே இதுவரையிலான வரலாறு உணர்த்தியிருக்கிறது!
            
செ.அமிர்தலிங்கம்