62 வயது நாடோடி!சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஃபிராங்கோ விட்டாலி கொஞ்சம் விநோதமான மனிதர். கடந்த 40 வருடங்களாக ஆயிரக்கணக்கான செம்மறி ஆடுகளுடன் வசித்து வருகிறார். இதுவரை திருமணமே செய்துகொள்ளவில்லை. யாரோ ஒரு நிருபர் இவரைப் பற்றிய செய்தியை இணையத்தில் வெளியிட... உலகத்துக்கு அறிமுகமானார் விட்டாலி.

ஓர் இடத்தில் நிரந்தரமாகத் தங்கமாட்டார். அப்படி தங்குவதற்கு வீடு என்று எந்த இருப்பிடமும் அவருக்கு இல்லை. ஒரு டிரக் வண்டிதான் வீடு. நாடோடியைப் போல அலைந்து கொண்டேயிருக்கிறார்.  அதிகபட்சமாக ஓர் இடத்தில் ஒன்பது மாதங்கள் தங்கியிருக்கிறார்.

விட்டாலி இடம் பெயரும்போது செம்மறி ஆடுகளையும் தன்னுடன் அழைத்துச்செல்வதுதான் இதில் ஹைலைட். அவ்வளவு சுலபத்தில் மனிதர்களால் நுழைந்து விட முடியாத இடங்களுக்கே விட்டாலி பயணிக்கிறார்.இப்போது அவர் தனது 800 செம்மறி ஆடுகளுடன் சுவிட்சர்லாந்தின் தென்பகுதியில் உள்ள உபர்ப்யூரான் என்ற மலைப்பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார். அதுவும் 62 வயதில் கால்நடையாக!