யார் இந்த மஹுவா மொய்த்ரா..?



கடந்த சில நாட்களாகவே மேற்கு வங்க இளம் பெண் எம்.பியான மஹுவா மொய்த்ராவின் பேச்சுதான் நாடு முழுக்கவே வைரல். இளம் உறுப்பினர்கள் முதன் முதலாக சட்டசபை, நாடாளுமன்றத்தில் பேசுவதை கன்னிப் பேச்சு என்பார்கள். மொய்த்ராவுக்கும் இதுதான் கன்னிப் பேச்சு. ஆனால், அதிலேயே அதிரடி சரவெடியாக பட்டையைக் கிளப்பியிருக்கிறார். மேற்குவங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், பிரதமர் மோடியையும் ஆளும் பாஜக அரசையும் ஒரு பிடி பிடித்தார்.

நாடு எங்கு சென்றுகொண்டிருக்கிறது என்று அச்சம் தெரிவித்தவர், இந்தியா பாசிசப் பாதையில் சென்று கொண்டிருப்பதற்கான ஏழு அறிகுறிகள் என்னென்ன என்று பட்டியலிட்டார். தேசப்பற்று என்ற பெயரில் அரசு வன்முறைக்கு துணைபோதல், மனித உரிமை மீறல்கள், வெகுஜன ஊடகங்களை அரசு தன்வயப்படுத்துதல், தேசப் பாதுகாப்பு என்ற பொய்யான நெருக்கடியை சித்தரித்தல், அரசு மற்றும் மதம் ஆகியவற்றின் அரசியல் தலையீடு, கலை மற்றும் கலைஞர்கள் மீதான நெருக்கடி, மிரட்டல், தேர்தல் ஆணையத்தை சுயாதீனமாக இயங்கவிடாமல் முடக்குதல் ஆகிய ஏழும்தான் இன்று இந்தியா பாசிசப் பாதையை நோக்கிப் போகிறதோ என்ற ஐயத்தை உருவாக்கியுள்ளது என்று முழங்கியுள்ளார் மொய்த்ரா.

மஹுவா மொய்த்ராவின் இந்தப் பேச்சுக்கு ஜனநாயக சக்திகள், தாராளவாதிகள் உட்பட பலரும் தமது பாராட்டைத் தெரிவித்துள்ளனர். யூ டியூப்பில் மொய்த்ராவின் பேச்சு லட்சக்கணக்கானவர்களால் தினமும் பார்க்கப்பட்டு வருகிறது. ஒரே பேச்சில் மொத்த இந்தியாவின் கவனத்தையும் தன் மீது திருப்பியுள்ளார் இந்த அழகான இளம் எம்.பி.மஹுவா மொய்த்ரா மேற்கு வங்காளத்தில் உள்ள கரீம்பூர் மாவட்டத்தின் விதான் சபா தொகுதியி
லிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மசாசூசெட்ஸ் நகரில் உள்ள பல்கலையில் கணிதமும் பொருளாதாரமும் படித்த மஹுவா, ஜே.பி.மோர்கன் என்ற புகழ்பெற்ற சர்வதேச முதலீட்டு வங்கியின் துணைத் தலைவராக இருந்தவர்.

உலகின் பழம்பெரும் வங்கிகளில் ஒன்றான ஜே.பி.மோர்கனின் மிகப் பெரிய பதவி ஒன்றை விட்டுவிட்டு லண்டனிலிருந்து அவர் இந்தியா வந்தபோதே தொழில்துறை வட்டாரங்களில் பரபரப்பாய் பேசப்பட்டார்.வந்த வேகத்தில் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த அவருக்கு இந்த 17வது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது. அதை வென்றும் காட்டியிருக்கிறார் மொய்த்ரா.

இப்படியான சூழலில்தான் தனது கன்னிப் பேச்சு மூலம் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்திருக்கிறார். இவரின் பேச்சின் உஷ்ணத்தைத் தாங்க இயலாத இவரது அரசியல் எதிரிகள், அவதூறு பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். தேர்தலில் போட்டியிட்ட போது ஒரு எஸ்.யூ.வி கார், நகைகள், வங்கி இருப்பு உட்பட இரண்டரை கோடி ரூபாய் சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இதில் ஏதேனும் குற்றம் குறை கண்டுபிடிக்க முடியுமா என்பது உட்பட மொய்த்ராவை எப்படி பழி தீர்ப்பது என்று கணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறது ஆளும் தரப்பு.மறுபுறம் தற்பெருமைக்குப் பெயர் போன வங்காளிகள் சமூக வலைத்தளங்களில் வங்காளியாக இருப்பதற்குப் பெருமைகொள்கிறோம் என்று களத்தில் இறங்கி மொய்த்ராவுக்கு ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள்!

என்.யுவதி