களவாணி-2



கிராமத்தின் பெரிய தலைக்கட்டுகளை வீழ்த்தும் ஊரின் உதார் பார்ட்டி விமல், ஊர்த்தலைவர் வரைக்கும் உயர்வதே களவாணி - 2.பழைய ‘களவாணி’யில் இப்போது இன்னும் சில அடங்கல்கள் சேர்த்து இயக்குநர் சற்குணம் அடுத்த ரவுண்ட் வந்திருக்கிறார். ரொம்பக் கதையெல்லாம் வேண்டாம் என்ற எண்ணத்தில் விமலை வைத்துத் தொடுத்த ரகளை ராவடியே படம்.

ஒரு வேலையும் செய்யாமல் வெள்ளையும், சொள்ளையுமாக திரிகிறார் விமல். சிறு திருட்டு செய்து, தெரிந்தவர்களை ஏமாற்றி, உரத்துப்பேசி, அடாவடியாக இருக்கிறார். ஓவியாவை காதலிக்க, அவரோ மிஸ்டர் பிரசிடெண்ட் என அழைத்து விட, தேர்தலில் குதிக்கிறார்.

நற்பெயர் இல்லாதவர் எப்படி அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று நாயகியை கரம்பிடிக்கிறார் என்பதே கதை. ஒரிஜினல் தஞ்சை வட்டார மொழியை ஏற்றிச் சொன்ன வகையிலும் கவனம் ஈர்க்கிறது படம்.களவாணித்தனத்தை லட்சியமாகவும், ஓவியாவை திருமணம் செய்வதையே கொள்கையாகவும் கொண்ட பாத்திரத்தில் விமல் அச்சு அசல் பொருந்துகிறார். ஜாலியும், சந்தோஷமுமாக மனுஷன் வெளுத்துக் கட்டியிருக்கிறார்.

எப்படியாவது கஞ்சா கருப்பை சரி செய்து, பணம் பெற சலம்புவதிலாகட்டும், தேர்தல் வெற்றிக்கு வழி தெரியாமல் சோகம் ததும்ப அமர்வதிலாகட்டும், பிறகு ஓவியாவை கண்டதும் தொடர்ந்து ஃபீலிங்ஸ் விடுவதாகட்டும்... அட்டகாசம்!

ஆனால், முதல் பாகத்தின் கட்டமைப்பு கிடைக்கவில்லை என்றாலும் தன் அளவில் விமல் ஓகே! அடிக்கடி தலை கோதி, சைடு பார்வையில் நூல் விட்டு ஒவ்வொன்றுக்கும் ரியாக்‌ஷன் எதிர்பார்க்கும் விடலை வேகத்தை ‘ஐஸ்ட் லைக் தட்’ ஸ்க்ரீனில் கொண்டு வருகிறார். பெரிய திருப்பங்கள் இல்லாத திரைக்கதையில், இன்னும் முடிச்சுகள் சேர்க்காத வகையில் படம் கொஞ்சம் களைப்பாறுவது உண்மை.

‘களவாணி’ ஓவியாவை எதிர்பார்த்துப் போனால் கொஞ்சம் ஏமாற்றம். பழைய பட்டாம்பூச்சி ரியாக்‌ஷன் குறைந்துபோய், அவரிடம் கவன ஈர்ப்பு குறைகிறது . விக்னேஷ்காந்த் படம் முழுவதும் வந்தாலும் ஏனோ வேண்டிய இடத்தை அடைய முடியவில்லை. மயில்சாமிக்கு தோசை என பெயர் வந்த காரணம் ரொம்பவும் புதியது.

பைசா பெறாத விஷயத்திற்கு ஊர் இரண்டுபட்டு அல்லாடுகிற விஷயம் எல்லாம் சுவாரஸ்யம்.‘ஆடி போய் ஆவணி வந்தா’ அம்மா சரண்யா இதில் அவ்வப்போது தலைகாட்டுகிறார். இளவரசுவிற்கு விளையாட இன்னும் களம் தந்திருக்கலாம்.

மசானியின் கேமிரா கிராமத்து கலகலப்பில் இடையறாது ஓடியாடி உழைக்கிறது. நடராஜன் சங்கரனின் இசையில் ‘ஒட்டாரம் பண்ணாதடி’ பாடலில் மேளம் வெடிக்கிறது.முதல் பாகத்தை கருத்தில் வைக்காமல் போனால் காமெடி ட்ரீட்மென்டில் ரசிக்கலாம் !

குங்குமம் விமர்சனக் குழு