நாய்களைக் காக்கும் மனிதர்களின் பேஸ்மேக்கர்!



நாய்களின் மீது பெருங்காதல் கொண்டவர் டெர்ரி மடூலா. இருபது வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள ஒரு நர்ஸிங் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது சக மாணவன் மீது அவருக்கு காதல் மலர்ந்தது. மடூலாவின் காதலை அந்த மாணவனும் ஏற்க... படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து கேடர் என்ற நாய்க்குட்டியை இந்தத் தம்பதி அன்புடன் வளர்க்கத் தொடங்கினர். ஒரு நாள் கேடரின் இதயத்தில் பாதிப்பு. பேஸ்மேக்கர் பொருத்தினால்தான் காப்பாற்றிவிட முடியும் என்ற நிலை. ஆனால், அதற்கு 3 ஆயிரம் டாலர் செலவாகும். அந்தளவுக்கு அவர்களிடம் பணமில்லை. சரியான சிகிச்சையளிக்க பணம் இல்லாததால் கேடர் இறந்தது.

இது மடூலாவின் மனதில் தீராத காயமாக பதிந்தது.மூன்று ஆண்டுகள் கழித்து, அதாவது 17 வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்ஸாக பணிக்குச் சேர்ந்தார் மடூலா. இதய நோயாளிகளைக் கவனித்துக் கொள்வது அவரது பணி.

மடூலாவின் கணவருக்கு திடீரென இதயம் சம்பந்தமான பிரச்னை ஏற்பட... இம்முறை அவர் பேஸ்மேக்கர் பொருத்திக் கொண்டார்.நாளடைவில் புதிது புதிதாக பேஸ்மேக்கர்கள் சந்தையில் இறங்கத் தொடங்கின. அதனால் மடூலாவின் கணவர் நவீன வசதியுடன் கூடிய பேஸ்மேக்கர் ஒன்றை வாங்கிவிட்டு பழையதை அகற்றினார்.

இதயம் சம்பந்தமான துறையில் பல வருடங்களாக பணிபுரிந்ததால் மடூலாவின் மனதில் ‘மனிதர்கள் பயன்படுத்திய பேஸ்மேக்கரை ஏன் நாய்களுக்குப் பயன்படுத்தக்கூடாது?’ என்ற கேள்வி எழுந்தது.உடனே கால்நடை மருத்துவர்களை அணுகி பரிசோதனையில் இறங்கினார். இதயம் பாதிப்படைந்த ஒரு நாய்க்குட்டிக்கு மடூலாவின் கணவர் பயன்படுத்திய பழைய பேஸ்மேக்கரைப் பொருத்தி மருத்துவர்கள் சிகிச்சையளித்தார்கள்.

அந்த நாய்க்குட்டி முழுமையாக குணம் அடைந்தது!அதிலிருந்து தனது சுற்றுவட்டாரத்தில் யாரெல்லாம் பேஸ்மேக்கர் பயன்படுத்துகிறார்களோ அவர்களையெல்லாம் சந்தித்து, ‘‘நீங்கள் பயன்படுத்தாமல் இருக்கும் பேஸ்மேக்கரை கொடையாகத் தாருங்கள். அது பல நாய்களைக் காப்பாற்றும்...’’ என்று வேண்டுகிறார் மடூலா!

இந்த வகையில் இதுவரை அவருக்கு 41 பேஸ்மேக்கர்கள் கிடைத்திருக்கின்றன. அத்துடன் அந்த பேஸ்மேக்கர்கள் அனைத்தும் இதய பிரச்சனையுள்ள நாய்களுக்குப் பொருத்தப்பட்டும் விட்டன. இப்போது மடூலாவை நினைத்து நிச்சயம் கேடர் பெருமைப்படும்!  

த.சக்திவேல்