தமிழ் சினிமாவில் பூத்திருக்கும் சங்ககால அழகி!



குண்டு குண்டு கண்கள். அப்பாவியான முகம். திராவிடப் பெண்ணுக்கான அழகு.மொத்தத்தில் சங்ககால அழகி போல் தமிழில் களம் இறங்கியிருக்கிறார் லவ்லின் சந்திரசேகர்.‘ஹவுஸ் ஓனர்’ படம் மூலம் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கும் லவ்லினின் நடிப்பில் அத்தனை நேர்த்தி. காரணம், அவருடைய அம்மா. யெஸ். நடிப்புக்காக மாநில விருது உட்பட பல விருதுகளைப் பெற்ற விஜி சந்திரசேகரின் மகள்தான் இந்த லவ்லின் சந்திரசேகர்!  

‘‘இப்பதான் தமிழ் கத்துகிட்டு இருக்கேன். படிச்சதெல்லாம் துபாய். அதனால தமிழ் இன்னும் முழுமையா வரலை. சாரி... இப்படி சொல்ல எனக்கே கஷ்டமாதான் இருக்கு! அதுவும் விஜி, பொண்ணா இருந்துகிட்டு நிச்சயம் இது தப்புதான். சீக்கிரமா தமிழ்ல அசத்துவேன்!’’ நம்பிக்கையுடன் சொல்பவர், அதென்ன லவ்லின் என்று கேட்டதும் கண்கள் மின்ன விளக்கினார்.

‘‘இது பஞ்சாபி - சமஸ்கிருத பெயர். ‘அதீத மகிழ்ச்சி’னு அர்த்தம். இன்டர்நேஷனல் ஸ்கூல்ல படிச்சேன். துபாய்ல கவுன்சிலிங் சைக்காலஜியை பாடமா எடுத்து மாஸ்டர் டிகிரி முடிச்சேன். எனக்கு மனிதர்களைப் படிக்க ரொம்பப் பிடிக்கும். அதனாலதான் கவுன்சிலிங் சைக்காலஜி படிச்சேன். சின்ன வயசுல இருந்தே எனக்கு நடிப்பு மேல பெரிய ஆர்வம். ஆனா, அப்பாவும் அம்மாவும், ‘முதல்ல படி, அப்புறம் உனக்கு என்ன தோணுதோ அதைச் செய்’னு சொன்னாங்க.

அவங்க சொன்ன மாதிரி எனக்கும் படிப்பு முக்கியம்னு புரிஞ்சதால படிச்சு முடிச்சுட்டுதான் சினிமாவுக்கு வரணும்னு முடிவு செய்தேன். டிகிரி முடிச்சதும் நடிக்கணும்னு அம்மாகிட்ட சொன்னேன். அவங்க ரொம்ப சப்போர்ட்டா இருந்தாங்க; இப்பவும் இருக்காங்க.
வந்த ஆடிஷன்ஸ் எல்லாத்துலயும் கலந்துக்க முடிவு செய்தேன்.

அப்பதான் லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் மூலமா ‘ஹவுஸ் ஓனர்’ வாய்ப்பு கிடைச்சது. என்ன கேரக்டர், என்ன ரோல்..? எதுவும் கேட்கலை. செட்டுக்கு போனதுக்கு பிறகுதான் ராதா ரோல்னே தெரிஞ்சது. ஆரம்பத்துலயே இவ்வளவு கனமான வேடம் கிடைக்கும்னு எதிர்பார்க்கலை! அம்மாவும் நானும் ஹேப்பியோ ஹேப்பி!’’ படபடவென பேசும் லவ்லின் நெருக்கமான காட்சிகளில் நடிக்க சம்மதம் என்கிறார்.  

‘‘இன் ஃபாக்ட் ‘ஹவுஸ் ஓனர்’ படத்துலயே நெருக்கமான காட்சிகள் நிறைய இருந்துச்சு. அம்மாவும் லட்சுமி மேடமும் நிறைய சொல்லிக் கொடுத்தாங்க. எனக்கு ஜோடியா நடிச்ச ‘பசங்க’ கிஷோர், என்னை புதுமுகம்னு ட்ரீட் பண்ணலை. ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருந்தார்.
கதைக்கு தேவைனா நெருக்கமான காட்சிகளுக்கு ஓகே சொல்வேன்.

அதே சமயம் நான் என் அப்பா, அம்மா கூட படம் பார்க்கும் போது அவங்க முகம் சுழிக்கவோ, சங்கடப்படவோ கூடாது. இதுலயும் உறுதியா இருக்கேன். நல்ல நடிகைனு பெயர் வாங்கணும். இதுதான் என் லட்சியம்...’’ என்ற லவ்லின், எல்லா நடிகர் நடிகைகளையும் தனக்குப் பிடிக்கும் என்கிறார் கறாராக. பிழைக்கத் தெரிந்தவர்!     

ஷாலினி நியூட்டன்