உண்மைல இந்தக் கதையை நீங்க எழுதினீங்களா... இல்ல மண்டபத்துல எழுதித் தந்தாங்களா..?கேட்ட அமலா பால்...காலரை உயர்த்திய இயக்குநர்

‘‘டீசர் வெளியானதும் செம ரெஸ்பான்ஸ். எங்க ஹீரோயின் அமலாபாலுக்கு அதில் ரொம்பவே ஆச்சரியம். ஏன் தெரியுமா..?’’ ஆர்வத்துடன் கேட்கும் இயக்குநர் ரத்னகுமார், அதற்கான விடையை, தானே சொல்ல ஆரம்பித்தார்.
‘‘டீசர்ல அமலாபாலை பார்த்த யாருமே ‘ஆபாசம்’, ‘கவர்ச்சி’ மாதிரியான சொற்களைப் பயன்படுத்தலை. சரியா சொல்லணும்னா எங்க ‘ஆடை’ டீசர் வழியா ‘நிர்வாணம்’ என்ற சொல்லுக்கு மரியாதை கிடைச்சிருக்கு!நிச்சயமா நியூட் காட்சிகளை வியாபாரத்துக்கோ அல்லது ரசிகர்களுக்கு தீனி போடவோ பயன்படுத்தலை.

படத்தைப் பார்த்தா நீங்களே புரிஞ்சுப்பீங்க.இயக்குநர் கவுதம் மேனன், நடிகை கீர்த்தி சுரேஷ், டாப்ஸி, பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப்னு நாங்க எதிர்பார்க்காத இடங்கள்ல இருந்தெல்லாம் பாராட்டு குவியுது. சத்தியமா எங்க டீம் இதை எதிர்பார்க்கலை!’’ திருப்தியாக புன்னகைக்கிறார் ரத்னகுமார். இதற்கு முன் ‘மேயாத மான்’ இயக்கியவர்.

‘‘என்னோட ‘மது’ குறும்படத்தைத்தான் கார்த்திக் சுப்புராஜின் வார்த்தைக்காக ‘மேயாத மான்’ ஆக பண்ணினேன். அந்தப் படம் எனக்கொரு நல்ல அடையாளத்தை கொடுத்துச்சு. அதைப் பார்த்துட்டு அனிருத், தயாரிப்பாளர் ஒய்நாட் சசி சார், புஷ்கர் காயத்ரி, கவுதம் மேனன் சார்னு பலரும் சிலாகிச்சு பாராட்டினது எனக்கு பெரிய தன்னம்பிக்கையை கொடுத்தது.

அந்தப் படத்துல இடம்பெற்ற ‘எங்க வீட்டு குத்துவிளக்கே....’ பாடலைத்தான் இன்னமும் எல்லா இடங்கள்லயும் கேட்கறேன். என் மகள் பிறந்த நாள் விழாவுக்குக் கூட எனக்கே தெரியாமல் என் உதவியாளர்கள் சேர்ந்து ‘எங்க வீட்டு குத்துவிளக்கு’னு வாழ்த்தி ஒரு பேனர் வைச்சாங்க...’’ நெகிழ்கிறார் ரத்னகுமார். அதென்ன ‘ஆடை’?

ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தறேன். நாங்க ஆடை சுதந்திரம் பத்தியெல்லாம் பேசலை. நம்ம சுதந்திரத்தையும், சுயஒழுக்கத்தையும் உணர வைக்கும் ஒரு குறியீடாதான் ‘ஆடை’யை பயன்படுத்தி இருக்கோம். கடந்த சில வருஷங்களாவே டிரெஸ் விஷயம் பரபரப்பா பேசப்பட்டு இப்ப ஆக்டோபஸ் ஆக வளர்ந்து நிக்குது.

இது ஒரு ஜானர் பெண்டிங் த்ரில்லர். அதாவது ஒரே ஜானர்ல படம் பயணிக்காது! டார்க் ஹியூமர்ல ஆரம்பிச்சு த்ரில்லர் வரை மாறும்! திடீர்னு பதினைஞ்சு நிமிஷங்களுக்கு பாடல்களா வந்து போகும். அடுத்து பத்து நிமிஷங்கள் பேசிக்கிட்டே இருப்பாங்க. அதற்கடுத்து வரும் பத்து நிமிஷங்கள் செம கலர்ஃபுல்லா போகும். இன்னொரு பத்து நிமிஷங்கள் கறுப்புவெள்ளையா மாறிப் போகும். இப்படி ஜானர் மாறிக்கிட்டே கதை ட்ராவல் ஆகும்.

‘மேயாத மானு’க்கு முன்னாடியே இந்தக் கதைக்கான ஐடியா தோணிடுச்சு. நாகரீகத்தை விடவும் இன்னமும் நாம கலாசாரம், பண்பாட்டைத்தான் பெருசா நினைக்கறோம். இப்படி ஒரு சப்ஜெக்ட்டை கையிலெடுத்தா அதுக்கான முழு சுதந்திரம் நமக்கு கிடைக்குமானு ஆரம்பத்துல சின்ன தயக்கம் இருந்துச்சு. அந்த டைம்லதான் ‘அறம்’, ‘அருவி’ மாதிரி படங்கள் நம்பிக்கையை விதைத்தது. ‘ஆடை’யை ரெடி பண்ண ஆரம்பிச்சேன்.

இந்த ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணினதும் தயாரிப்பாளர் சுப்பு நாராயணன் சார்கிட்ட சொன்னேன். இதுக்கு முன்னாடி என் முதல் படத்தை அவர் பார்க்கலைன்னார்.  ஆனா, இந்த ஸ்கிரிப்ட்டை படிச்சுட்டு ஆச்சரியப்பட்டார். என்னைப் போல அவருக்கும் கதை மீது நம்பிக்கை.அமலாபால் உட்பட எல்லா நட்சத்திரங்களும் எங்களை மாதிரியே ஸ்கிரிப்ட் மேல நம்பிக்கை வைச்சாங்க. அதனாலதான் படத்தை எடுக்கவே முடிஞ்சுது.

‘ஆடை’ல பாப் கல்ச்சர் ரெஃபரன்ஸ் இருக்கறதால இதை பான் இந்தியா படமா ப்ளான் பண்ணினோம். ராதிகா ஆப்தேவில் இருந்து ஆலியா பட் வரை நடிகைகளை யோசிச்சோம். அது செட் ஆகாதுனு புரிஞ்சதும் தென்னிந்தியாவுல கனெக்ட் ஆகற நடிகையா பார்த்தோம். எங்க சாய்ஸே அமலா பால்தான். நினைச்ச மாதிரியே தன் கேரக்டரை அழுத்தமா சுமந்திருக்காங்க.

விவேக் பிரசன்னா, ‘கள்ளச் சிரிப்பு’ வெப்சீரீஸின் இயக்குநர் ரோகித், ரம்யா சுப்ரமணியம், பிஜிலி ரமேஷ்னு பலரும் நடிக்கறாங்க. பிஜிலி ரமேஷை இதுல ஒரு பர்ஃபாமரா பார்க்கலாம். இவங்க தவிர தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்ஸ் நிறைய பேர் இருக்காங்க.டெக்னீஷியன்ஸ் டீமும் ஸ்டிராங் டீம்தான்.

‘சிந்துபாத்’ விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பண்றார். ‘கபாலி’யில் ‘மாயநதி’ பாடின பிரதீப்குமார் ஏற்கெனவே ‘மேயாத மான்’ல ரெண்டு பாடல்களுக்கு கம்போஸ் பண்ணினார். இதுல அவர் இசையமைப்பாளரா புரொமோஷன் ஆகறார். அவரோட ‘ஊர்கா’ பேண்டோடு இணைந்து 6 பாடல்கள் கொடுத்திருக்கார்.

‘ஆரண்ய காண்டம்’ ஆர்ட் டைரக்டர் விதேஷ் கலையை கவனிக்கறார். என் முந்தின படத்துல ‘எங்க வீட்டு குத்துவிளக்கே’ எழுதினது மாதிரி இதிலும் ரெண்டு பாடல்கள் எழுதியிருக்கேன்.அமலாபால் நிர்வாணமா நடிக்க சம்மதிச்சது எப்படி?

அவங்களுக்கு கதைச் சுருக்கம் அனுப்பினோம். அடுத்த நாளே கூப்பிட்டு முழுக்கதையும் கேட்டாங்க. அவங்களுக்கு கதையா பிடிச்சிருந்தது. ஆனா, ‘மேயாத மான்’ அவங்க பார்க்காததால எங்க டீமை அவங்க நம்பல. என் லுக் அவங்களுக்கு அப்படி ஒரு டவுட்டை வரவழைச்சிருக்கலாம்! தவிர, அவங்க 35 படங்கள் பண்ணினவங்க. நான் இதுக்கு முன்னாடி ஒரே ஒரு படம்தான் பண்ணியிருக்கேன். அதனால கூட அவங்க என் மீது நம்பிக்கை வைக்காம இருந்திருக்கலாம்.

ஸ்பாட்டுல அவங்க சைடுல இருந்து எதாவது சஜஷன்ஸ் சொன்னால், ‘என் முதல் படத்தை ஒரு முறை பார்த்துட்டு அப்புறம் சொல்லுங்க’னு சொல்லுவேன். ஒருநாள் அவங்களா ‘மேயாத மான்’ பார்த்துட்டு உற்சாகமாகிட்டாங்க. ‘உங்க டீமை நம்புறேன்’னு சொன்னாங்க. ‘ஆடை’யில அவங்க மெட்ரோ லைஃப் ஸ்டைலுக்கு செட் ஆகும் கேரக்டர் பண்ணியிருக்காங்க. ஐடியாலஜி உள்ள பொண்ணா அசத்தியிருக்காங்க.

நீங்க கேட்ட போர்ஷன் ஷூட் பண்றதுக்கு முன்னாடி பக்காவா ஸ்டோரி போர்டு ரெடி பண்ணி அவங்ககிட்ட காட்டிட்டோம். அப்புறம், மும்பை மாடல் ஒருத்தர வச்சு, அவங்க என்ன மாதிரி பர்ஃபார்ம் பண்ணணும்னு டெஸ்ட் ஷூட் செய்தும் காட்டினோம்!

அந்த சீன் பத்தி இன்னும் சீக்ரெட்ஸ் சொல்லணும்னா, அமலாபாலே அதைச் சொன்னாதான் சரியா இருக்கும்! படத்தோட கடைசி நாள் ஷூட்லதான் அவங்க என்னை நம்பாமல் இருந்ததன் ரகசியத்தை சொன்னாங்க.

அதாவது, ‘உங்க கதை செம க்ளாஸா இருந்துச்சு. உண்மையிலேயே நீங்கதான் அதை பண்ணியிருப்பீங்களா? இல்ல, எங்காவது சுட்டுட்டு வந்து எங்கிட்ட சொல்லிட்டீங்களானு நினைச்சேன்’னாங்க! சென்ஸார்ல என்ன சொன்னாங்க..?

என் முதல் படத்துல சென்ஸாரின் போது கொஞ்சம் கசப்பான அனுபவம். அதனால ‘ஆடை’ சென்ஸாரப்ப நெர்வஸா இருந்தேன். பயத்தோடதான் அணுகினேன்.

ஆனா, இந்த முறை எங்களுக்கு கனிவான உபசரிப்பு கிடைச்சது. அதிகாரிகள், மெம்பர்கள்னு அத்தனை பேருக்குமே படம் பிடிச்சிருந்தது. அங்கிருந்த பெண் அதிகாரி ‘படத்துக்கு ‘ஏ’ சர்ட்டிபிகேட் வாங்கிக்கிறீங்களா? இல்ல யூ வேணுமா?’னு கேட்டாங்க. படத்தோட உயிர்நாடியான சீன்கள் வெட்டப்பட்டு அப்புறம் ‘யூ’ கிடைக்கறதை விட ‘ஏ’ கிடைச்சாலே பொருத்தமானதா இருக்கும்னு நானும் தயாரிப்பாளரும் நினைச்சோம். அப்படியே ‘ஏ’வும் வாங்கினோம்.

அந்த பெண் அதிகாரி ‘நியூடு சீன்கள் வரும் இடத்துல நான் நெளியவே இல்ல. முக்கியமான ஒரு விஷயம், நோட் பண்ற வேலையை விட்டுட்டு படத்தை ரசிக்க ஆரம்பிச்சிட்டேன். இன்னொரு முறை படம் பார்த்தால்தான் கட் நோட் பண்ண முடியும்’னு சிரிச்சுக்கிட்டே சொன்னாங்க. அங்கேயே எங்களுக்கு படத்தின் மேல நம்பிக்கை வந்திடுச்சு!

மை.பாரதிராஜா