பவன் கல்யாணுக்கு மொட்டை அடித்து அவமானப்படுத்திய பரிதலா ரவி!



போஸ்ட் மார்ட்டம்-11

தலைப்பில் இருக்கும் இந்த மேட்டர்தான் இன்று வரை ஆந்திராவின் ஹாட், ஹாட்டர், ஹாட்டஸ்ட் டாபிக்.

ஆம் என்று ஒரு தரப்பு சொல்ல... இல்லை என்று சத்தியம் செய்கிறது மறுதரப்பு.இது உண்மையா இல்லையா என்பது இருவர் மட்டுமே அறிந்த ரகசியம். ஒருவர் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியும் அம்மாநில பவர் ஸ்டாருமான பவன் கல்யாண். மற்றவர் பரிதலா ரவி.

இருவரும் வாயைத் திறக்கப் போவதில்லை என்பதால் கடைசி வரை இது வெறும் கிசுகிசுவாகத்தான் வலம் வரப் போகிறது - இன்று போலவே!இந்த சம்பவம் குறித்து பார்ப்பதற்கு முன் வாழ்நாள் முழுக்க சிறையில் அடைக்கப்பட்ட சூரி குறித்து ஓர் எட்டு பார்த்துவிடலாம்.

சிறையில், தான் அடைக்கப்பட்டாலும் பரிதலா ரவியையும் அவரது ஆட்களையும்; ரவிக்கு உதவி செய்யும் நக்ஸல்பாரிகளையும் போட்டுத் தள்ள வேண்டும் என்பதில் சூரி உறுதியாக இருந்தார். அதற்கான திட்டங்களையும் சிறையில் இருந்தபடியே வகுக்கத் தொடங்கினார்.

இதற்கிடையில் ஹைதராபாத்தில் கொத்தபள்ளி என்னுமிடத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த இருவரை நக்ஸல்கள் சுட்டுக் கொன்றனர். இந்த சூடு ஆறுவதற்குள் பானுகோட்டா கிஷ்டப்பா, குண்டிமாடி ராமுலு, வெங்கடேசலு, கொண்டா ரெட்டி என்ற சூரியின் ஆதரவாளர்களை அடுத்தடுத்து போட்டுத் தள்ளியது ரவியின் தரப்பு.

இதில் போயா நாகராஜுஎன்பவர் மட்டும் இரண்டு முறை நடத்திய தாக்குதலின்போதும் தப்பித்துக் கொண்டார். ஆயுசு கெட்டி!‘சிறுசுகளையெல்லாம் போட்டாச்சு... ஆனா, ஒரேயொரு பெரிசு மட்டும் ஊர்ப் பக்கமே வராம ஹைதராபாத்திலேயே பலத்த போலீஸ் பாதுகாப்போட உக்காந்திருக்கே... விடலாமா? எலக்‌ஷன் வேற நெருங்குது... அதுக்குள்ள போட்டாதானே உண்டு..?’யோசித்த ரவி தரப்பு, தனது அடுத்த இலக்காக நிர்ணயித்தது ஓபுல் ரெட்டியின் அண்ணனும் பெனுகுண்டாவின் முன்னாள் எம்எல்ஏவுமான ரமணா ரெட்டியை!

1999ம் ஆண்டு.ஹைதராபாத்தில் இருந்த ரமணா ரெட்டியின் வீட்டுக்குள் பர்தா அணிந்த இரண்டு பெண்கள் நுழைந்தார்கள். தடுத்தவர்களிடம் ‘கட்சி விஷயமாக பேசுவதற்காக அவர்தான் வரச் சொன்னார்’ என்றார்கள். ‘நானா? லேடீஸையா?’ சந்தேகத்தோடு எழுந்து வந்த ரமணா ரெட்டியைக் கண்டதுமே பர்தாவை விலக்கி மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர்.ஸ்பாட்டிலேயே ரமணா ரெட்டியின் உயிர் பிரிந்தது.

இப்படியாக தனது பெரிய எதிரியின் ‘கதை’க்கு பரிதலா ரவி முற்றுப் புள்ளி வைத்தார். இதையடுத்து அதே ஆண்டு வந்த தேர்தலில் ரவி மீண்டும் போட்டியிட்டார். இவரை எதிர்த்து சிறையில் இருந்தபடியே சூரி நாராயண ரெட்டி தனித்துப் போட்டியிட்டார்.

உயிர் மேல் இருந்த பயம் காரணமாக முக்கிய தலைகள் போட்டியிட முன்வராததால் ஒப்புக்குச் சப்பாணியாக பெல்லாம் சுப்ரமணியம் என்பவரை நிறுத்தியது காங்கிரஸ். எதிர்பார்த்தது போலவே பரிதலா ரவி 70.82% வாக்குகளைப் பெற்று வெற்றி வாகை சூடினார்.
சூரிக்கு டெபாஸிட்டே காலியானது!அனந்தபூர் மாவட்டம் கனிம வளம் நிறைந்தது. ஏராளமான சுரங்கங்கள் உள்ளன. இவை அனைத்தும் ரவியின் சொத்துக்களாகின!

குவாரிகள் தொடங்கினார். சரசரவென சொத்துக்கள் சேரத் தொடங்கின. இவருக்குத் தெரியாமல் எந்த அரசு கான்ட்ராக்டும் வெளியில் போகாது; அம்மாவட்டத்தில் மற்றவர்களுக்கு கிடைக்காது! இந்தநேரத்தில்தான் இந்த அத்தியாயத்தின் தலைப்பில் இருக்கும் நிகழ்வு நடந்தது.

அதாவது அப்படியொரு சம்பவம் நடைபெற்றதாக சொல்கிறார்கள்!தெலுங்கு ‘குஷி’ வெற்றி பெற்றிருந்த நேரம் அது. ஆந்திரா முழுக்க பவன் கல்யாண் அலை பலத்த சூறைக்காற்றுடன் வீசத் தொடங்கிய காலமும் கூட.இச்சூழலில்தான் அனந்தபூர் மாவட்டத்தில் நிலம் ஒன்றை பவன் கல்யாண் வாங்கினார்.

இதற்கான முழுப் பணத்தையும் உரிமையாளரிடம் அவர் கொடுப்பதற்கு முன்பே வேறொருவருக்கு அதே நிலத்தை கூடுதல் விலைக்கு விற்று லாபம் பார்த்திருக்கிறார்!இதை அறிந்த நிலத்தின் ‘பழைய’ உரிமையாளர் நேராக பரிதலா ரவியிடம் சென்று முறையிட்டார். இளம் வயது...

சினிமாவில் கிடைத்திருக்கும் திடீர் புகழில் தலைகால் புரியவில்லை போல... அதுதான் நடைமுறை என்னவென்றே தெரியாமல் இருக்கிறார்... அழைத்து சொன்னால் புரிந்து கொள்வார்... என்று நினைத்து தன்னை வந்து பார்க்கும்படி பவன் கல்யாணுக்கு செய்தி அனுப்பினார் பரிதலா ரவி.என்ன மனநிலையில் இருந்தாரோ... பவன் கல்யாண் அதை அலட்சியப்படுத்தினார்.

ரவி இதைப் பெரிதுபடுத்தவில்லை. மீண்டும் செய்தி அனுப்பினார்.மீண்டும் அதை அலட்சியப்படுத்தினார் பவன் கல்யாண்.இப்படியே பல ‘மீண்டும்’ அரங்கேறின.இந்நிலையில் ஷூட்டிங்குக்காக கடப்பா மாவட்டத்துக்கு வந்தார் பவன் கல்யாண்.ரவியின் ஆட்கள் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்குச்சென்றார்கள். எதுவும் சொல்லவில்லை.

பதிலாக பவன் கல்யாணை அலேக்காக தூக்கிக் கொண்டு வந்தார்கள். ரவியின் முன் நிறுத்தினார்கள்.பரிதலா ரவி கோபப்படவே இல்லை. பவன் கல்யாணை அமரச் சொல்லி நிலத்துக்கான பணத்தைக் கேட்டார்.

ம்ஹும். கூடுதல் தொகைக்கு பவன் விற்ற தொகையை அல்ல.நில உரிமையாளரிடம் எந்தத் தொகைக்கு பேசி வாங்கிக் கொள்வதாகச் சொன்னாரோ... அதில் இன்னும் எவ்வளவு தொகையைத் திருப்பித் தராமல் இருக்கிறாரோ... அந்த பணத்தைத்தான் கேட்டார்.‘இதைக் கேட்க நீ(ங்கள்) யார்..? நிலத்துக்கு யார் சொந்தக்காரரோ அவரிடம் பேசிக் கொள்கிறேன்...’ என தெனாவெட்டாக பவன் கல்யாண் பதிலளித்தார்.

சிரித்தபடியே எழுந்த பரிதலா ரவி, நிதானமாக பவன் கல்யாண் அருகில் நடந்து சென்று ஓங்கி அறைந்தார்! அத்துடன் தன் ஆட்களை அழைத்து அந்த இடத்திலேயே பவன் கல்யாணுக்கு மொட்டை அடித்து சிறையில் அடைத்தார்!

அதாவது தனது வீட்டில் தன் ஆட்கள் சூழ அமர வைத்தார்.செய்தி அறிந்த சிரஞ்சீவி பதறி முதல்வரைச் சந்தித்தார். காவல்துறை அதிகாரிகளை அணுகி முறையிட்டார்.‘அனந்தபூர் மாவட்டமா... பரிதலா ரவியா...’ என எல்லோரும் பயத்துடன் வாயைப் பொத்திக் கொண்டு பின்வாங்கினார்களே தவிர பவன் கல்யாணை மீட்க எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.சண்டைக்காரனி(ரி)ன் காலிலேயே விழலாம் என பரிதலா ரவியைத் தேடி வந்து தன் தம்பி சார்பாக சிரஞ்சீவி மன்னிப்பு கேட்டார்.

பவன் கல்யாண் கொடுக்க வேண்டிய பணத்தை மட்டுமல்ல... நிலத்தை கூடுதலாக விற்ற தொகையையும் சேர்த்து தங்கத் தாம்பாளத்தில் வெற்றிலைப் பாக்குடன் வைத்து ரவியிடம் கொடுத்தார்.வேண்டிய பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை சிரஞ்சீவியிடமே திருப்பிக் கொடுத்த பரிதலா ரவி, தன் ஆட்கள் பக்கம் திரும்பி கண்ஜாடை காட்டினார்.மொட்டைத் தலையுடன் பவன் கல்யாணை அழைத்து வந்தார்கள்.

‘கூட்டிட்டு போ...’ என ரவி சைகை செய்ய... தம்பியின் கையைப் பிடித்துக்கொண்டு அனந்தபூரை விட்டு சிரஞ்சீவி வெளியேறினார்...பத்து மணி நேரம் நடைபெற்ற இந்தச் சம்பவங்கள் அனைத்தும் உண்மையா பொய்யா என்று தெரியாது. ஆனால், சுந்தரத்தெலுங்கினில் இந்நிகழ்வைத்தான் அம்மாநில மக்கள் இன்றும் பாட்டிசைத்து வருகின்றனர்!

பரிதலா ரவி - சூரி குடும்பப் பகையை மையமாக வைத்து ராம்கோபால் வர்மா ‘ரத்த சரித்திரம்’ என்ற படத்தை இரு பாகங்களில் எடுத்தபோது இந்த எபிசோடை ஷூட் செய்தார். ஆனால், திரைத்துறையினர் கேட்டுக் கொண்டதால் இந்த போர்ஷனை படத்தில் இருந்தே, சென்சாருக்குச் செல்வதற்கு முன்பே, நீக்கிவிட்டார்!

(தொடரும்)     

கே.என். சிவராமன்