கல்விக்கடனை அடைக்கும் தொழில் அதிபர்!



‘நீங்கள் வாங்கிய கல்விக்கடனை நான் அடைக்கிறேன். எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள்...’’ என்று யாராவது உங்களிடம் சொன்னால் எப்படியிருக்கும்?

இப்படியெல்லாம் யாராவது சொல்வார்களா? என்றுதான் முதலில் கேட்போம். உண்மையில் இப்படி யாராவது சொல்லிவிட்டால் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிப்போம். மிகத் துடிப்புடன் படிப்போம். நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் உற்சாகப்படுத்துவோம்.

குறிப்பாக நம்மைச் சார்ந்த குடும்பமும் மகிழ்ச்சியில் திளைக்கும்.ஏனென்றால் படித்து முடித்து வேலைக்குப் போய் நாம் சம்பாதிப்பதில் பாதி கல்விக்கடனுக்கே போய்விடும் என்ற கவலை படிக்கும்போதும், படிப்பை முடித்து வேலையைத் தேடும்போதும் நம்மையும் குடும்பத்தையும் தொடர்ந்துகொண்டேயிருக்கும். விஷயம் இதுவல்ல.

அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் உள்ளது மோர்ஹவுஸ் கல்லூரி. இந்தக் கல்லூரியில் படிப்பவர்கள் எல்லோரும் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள்; வசதியற்றவர்கள்; சிலருக்கு தங்குவதற்கு வீடு கூட கிடையாது. அத்துடன் இங்கே படிக்கும் பெரும்பாலானவர்கள் வங்கியில் கடன் வாங்கித்தான் கல்விக் கட்டணத்தைக் கட்டுகின்றனர். படிப்பு முடிந்த பிறகு சரியான வேலை கிடைக்காததால் கடனை அடைக்க முடியாமல் திணறுகின்றனர்.

இந்நிலையில், கடந்த மாதம் இந்தக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் 430 மாணவர்கள் கலந்துகொண்டு பட்டம் பெற்றனர். மாணவர்களுக்குப் பட்டமளித்து சிறப்புரை ஆற்றுவதற்காக தொழில் அதிபர் ராபர்ட் எஃப் ஸ்மித் அழைக்கப்பட்டிருந்தார். சுமார் 5 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்ட ராபர்ட், அமெரிக்க பணக்காரர்களின் வரிசையில் 163-வது இடத்திலும், உலகப் பணக்காரர்கள் வரிசையில் 480-வது இடத்திலும் உள்ளார். தவிர, கறுப்பினத்தவர்களில் முதல் பணக்காரர் இவர்தான்.

‘‘எட்டு தலைமுறையாக எங்கள் குடும்பம் இங்கே வசித்து வருகிறது. ஆகவே, இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் கல்விக் கடனை நான் அடைக்கப்போகிறேன். நான் செய்ததை வருங்காலத்தில் என் குடும்பமும் செய்யும்...’’ என்று மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்தார் ராபர்ட்.  இவர் அடைப்பதாகச் சொல்லியிருக்கும் கடன்தொகை சுமார் 278 கோடி ரூபாய்!ராபர்ட் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பது இதில் ஹைலைட்.