IB உரிமம் வாங்குங்க... விளையாட்டா சம்பாதிங்க!



ஹன்ஸா ஹன்ஸா (வழக்கறிஞர்)

காலர் ட்யூனாக இசையை மட்டுமல்ல, பறவையின் ஒலி, சொந்தமான பஞ்ச் வசனங்கள்... என பலவற்றையும் ஆன்லைனில் விற்கலாம். அவற்றை வாங்க வலைத்தளங்கள் பலவும் தயாராக இருக்கின்றன.
ஆனால் அவற்றிற்கு உங்களுக்கு காபிரைட் உரிமை வேண்டும்! அவ்வளவே. காபிரைட் சட்டத்தைப் பொறுத்தவரை எப்போது ஓர் ஒலி / இசை / படைப்பை உருவாக்குகிறீர்களோ அப்போதிருந்தே அதற்கான உரிமை உங்களுக்கு வந்துவிடுகிறது.
எனவே, சொந்த ரெகார்டிங்குகளை அந்த தளங்களில் பதிவேற்றலாம். இத்தனை வினாடி ஒலிப்பதிவுக்கு, ஒரு downloadக்கு இன்ன தொகை என நிர்ணயித்து விற்கலாம்.

பதிவிறக்கம் ஆக ஆக உங்களுக்குப் பணம். ஆரம்பத்தில் சுமாராகத்தான் இருக்கும். வருடங்கள் செல்லச் செல்ல ராயல்டி பணம் குவியும். பதிவு செய்வது எனில் அது உங்கள் வீட்டு பால்கனி குயிலின் குரலாக இருக்கலாம், நீங்கள் வாசித்த கிடாராக இருக்கலாம். ஒரே குயிலின் குரலை ஒரே நேரத்தில் இருவர் ஒலிப்பதிவு செய்தால் அந்த இருவருமே தத்தமது பதிவுகளுக்கு உரிமை கொண்டாடலாம். தனித்தனியாக விற்கலாம். ஆனால், கிடார் போன்ற மனிதத் திறமை தேவைப்படும் ஒலிப்பதிவு எனில் கிடார் வாசித்தவர் அனுமதி தேவை.

உங்கள் ஊரில் மட்டுமே உற்பத்தியாகும் பொருள் ஏதேனும் உண்டா? உங்கள் ஊரில் கிடைக்கும் அல்லது விளையும் பொருளைக் கொண்டு மட்டுமே செய்தால்தான் அதன் தரம் வரும் என பொருள் ஏதும் இருந்தால் அதை வைத்து வியாபாரம் செய்பவர்கள் ஒன்று கூடி புவிசார் குறியீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த புவிசார் குறியீடு கிடைத்தால், விற்கும் பொருளின் மதிப்பு பன்னாட்டு சந்தையில் மிகவும் அதிகம். பத்தமடை பாய், தஞ்சாவூர் வீணை என பலவற்றிற்கும் புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. புவிசார் குறியீட்டிற்கு கண்டிஷன் அந்தப் பொருள் எப்போதிலிருந்து உங்கள் ஊரில் தயாரிக்கப்பட ஆரம்பித்தது என்னும் வரலாறே தெரியாத அளவிற்கு பழமையானதாக இருக்க வேண்டும்! அந்த ஊரின் விளை பொருளைக் கொண்டு தயாரித்தால் மட்டுமே அந்த தரம் என்னும் சூழல் இருக்க வேண்டும்.

நீங்கள் விளையாட்டாகச் செய்யும் சிறு சிறு அறிவுசார் கண்டுபிடிப்புகள் அநேகமுமே ஐபி (Intellectual Property) உரிமை பெறத் தக்கவை. அவற்றை வைத்து தொழில் துவங்கலாம், அல்லது பெற்ற அந்த உரிமத்தை மற்றவர்களுக்கு கொடுத்தும் கூட பணம் சம்பாதிக்கலாம்.  

சீனாவைச் சார்ந்த ஒரு பெண் தன் தேவைக்காக பாத்திரம் ஒன்றை தயாரித்துக் கொண்டாள். Flat bottom கொண்ட அதன் புதுமை (Novelty) காரணமாக அவளுக்கு பேடண்ட் உரிமை கிடைத்திருக்கிறது!சமூக வலைத்தளங்களில் வடிவேலு முகபாவத்தை வைத்து மீம்ஸ் போடுகிறீர்களா? இதற்கான காபிரைட் உரிமை பற்றி உங்களுக்குத் தெரியுமா? அந்த புகைப்படத்தின் ஒரிஜினல் உரிமையாளருக்கு நீங்கள் ராயல்டி தரவேண்டி வரக்கூடும் என்பது தெரியுமா?

வடிவேலு அந்த முகபாவத்திற்கும் நடிப்பிற்கும் ஏற்கனவே அந்தப் படத்தில் வேலை செய்ததற்கான சம்பளத்தை வாங்கி விட்டார். அந்தப் படத்தின் காபிரைட் உரிமையாளருக்கு நீங்கள் ராயல்டி தரவேண்டி இருக்கும்.

இது மீம்ஸ் சீசன். அரசியல் கருத்துக்களையோ, நகைச்சுவைகளை யோ, அதற்கான முகபாவத்துடனான சொந்த புகைப்படங்களுடன் கிண்டலாகப் பதிவது இதுவரை இலவச art form ஆக இருந்தாலும் சமீப காலங்களாக மீடியாக்கள் அவற்றை விலைகொடுத்து வாங்குகின்றன. அங்கேயும் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு குவிந்திருக்கிறது.

ஒரு படைப்பில் ஒருவரின் உழைப்பு எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு அவருக்கு அந்த படைப்பின் லாபத்திலும் உரிமை இருக்கிறது. அந்த அளவை ஐபி உரிமையாகப் பெற்றால் ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் படைப்பாளிக்கு ராயல்டி லாபம் வந்து சேரும்.

ஐபி உரிமையாக அல்லாமல் செய்த வேலைக்கான கூலியாகப் பெற்றுவிட்டால் ராயல்டி கிடைக்காது. பின்னாளிலும் ராயல்டி உரிமை கோர இயலாது.சுருக்கமாகச் சொல்வதென்றால் உங்கள் படைப்பு எதுவாக இருந்தாலும், ஐபி இருந்தால் நிறையவே சம்பாதிக்க வாய்ப்பு தரும் துறை இது.சம்பாதிக்கலாம் வாங்க!