COFFEE TABLE‘நிகிலா’த்துவங்கள்!

தமிழில் ‘பஞ்சுமிட்டாய்’க்குப் பிறகு மல்லுவுட் பக்கமே கவனம் செலுத்திய நிகிலா விமல், இப்போது மீண்டும் கோலிவுட் ரிட்டர்ன் ஆகியிருக்கிறார். இங்கே கார்த்தி, சிபிராஜின் படங்களில் பரபரக்கும் நிகிலாவுக்கு மேல்நாட்டு அறிஞர்களின் பொன்மொழிகளில் ஆர்வம் அதிகம். அவரது இன்ஸ்டா பக்கத்துக்குச் சென்றால் தத்துவங்கள் வரவேற்கின்றன.  சமீபத்திய தத்துவமாக சில்வியா பிளாத்தின், ‘‘I took a deep breath n listened to the old bray of my heart: I am, I am, I am...’’-யை பதிவிட்டு ஆயிரக்கணக்கில் லைக்குகளை அள்ளிவிட்டார்.

பீச்சுக்கு போங்க!

சென்னை போன்ற கடலோர மாநகரங்களில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் பொழுதுபோக்கே கடற்கரைக்குச் செல்வதுதான்.இந்நிலையில் ‘‘பொழுதுபோக்குக்காக மட்டுமே கடற்கரைக்குச் செல்லாமல் நேரத்தை ஒதுக்கி அங்கே செல்லுங்கள். கூட்டத்துடன் செல்வதைக் காட்டிலும் தனியாகச் செல்வது இன்னும் நல்லது...’’ என்கிறது சமீபத்திய ஆய்வு.

‘‘கடற்கரை உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலின் வெப்ப நிலையைக் கட்டுக்குள் வைக்கிறது. புத்துணர்வான காற்று நாள் முழுக்க உங்களை உற்சாகமாக வைக்கும். கடற்கரை மணலில் நடப்பது உடற்பயிற்சிகளைவிட சிறந்தது. கடலின் மேற்பரப்பில் இருந்து வெளியாகும் வெப்பம் உங்களின் தோலுக்கு நல்லது...’’ என்று கடற்கரையின் நன்மைகளை அடுக்குகிறது அந்த ஆய்வு.

லேசர் புரொஜெக்டர்

திரையரங்கத்தைப் போல 150 இன்ச் திரையில் துல்லியமான காட்சி அனுபவத்தைத் தருவதற்காக வந்துவிட்டது ‘வவா’ நிறுவனத்தின் 4K லேசர் புரொஜெக்டர். திரையிலிருந்து 7.2 இன்ச் தொலைவிலிருந்தே இதை புரொஜெக்ட் செய்ய முடியும் என்பது இதன் ஸ்பெஷல். உலகம் முழுதும் 17 ஆயிரம் திரையரங்குகளில் பயன்படுத்தப்படுகிற டிடிஎஸ்-ஹெச்.டி மற்றும் டால்பி ஆடியோ சவுண்ட் வசதி இதிலும் உள்ளது. விலை ரூ.2.5 லட்சம்.

கனவு நனவானது

அமெரிக்காவைச் சேர்ந்த ஹெலன் டேனிஸுக்கு இரவில் நடக்கும் இசை நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும்; அதில் கலந்துகொள்ள வேண்டும் என்பது சிறு வயது கனவு. கையில் பணம் இல்லாத ஹெலனால் கனவை நனவாக்க முடியவில்லை. திருமணம் செய்துகொண்ட பின் கனவையே மறந்துவிட்டார். இப்போது அவருடைய பேத்தி ஜூலி பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறாள்.

பாட்டியின் கனவு ஜூலிக்குத் தெரியவந்தது. கடந்த வாரம் தனது பள்ளியில் நடந்த இசை விழாவில் பாட்டியைப் பங்குபெற வைத்து அசத்திவிட்டாள் ஜூலி. அந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது ஹெலனுக்கு வயது 97.

ஹேப்பி நஸ்!

திருமணத்திற்குப் பிறகும் சினிமாவில் கலக்கும் நடிகைகளில் நஸ்ரியாவும் ஒருவர். சமீபத்தில் அவர் தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்த ‘கும்பளாங்கி நைட்ஸ்’ மலையாளப் படம் சூப்பர் ஹிட் அடித்ததில் பொண்ணுக்கு உற்சாக பூரிப்பு. அந்த ஹிட் ஜொலிஜொலிப்பில் ஹேர் ஸ்டைலையும் மாற்றிவிட்டார் நஸ். ஷார்ட் அண்ட் கலரிங்  ஹேர் ஸ்டைலுடன் மின்னும் நஸ்ரியா, தனது புது லுக்கை இன்ஸ்டாவில் தட்டிவிட, ஹார்ட்டின்கள் குவிகின்றன.

குங்குமம் டீம்