COFFEE TABLE



அனுஷ்காவின் புத்தகம்!

டோலிவுட் முழுவதும் அனுஷ்கா ஸ்லிம் ஆனதைப் பற்றியே பேச்சு. உடல் எடை குறைந்த ரகசியத்தை தனது ஃபிட்னஸ் குரு Luke Coutinho-வுடன் இணைந்து ‘The Magic Weight-Loss Pill’ என்ற பெயரில் புத்தகமாகவே கொண்டு வந்துவிட்டார். அதன் முகப்பு அட்டையை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு, ஆயிரக்கணக்கான லைக்குகளை அள்ளிவருகிறார் அனுஷ்கா.

குழந்தைகளிடம் செல்போனை கொடுக்காதீர்கள்!

‘‘ஸ்மார்ட்போன், டிவி உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்களின் திரைகளை அதிக நேரம் குழந்தைகள் பார்க்கக்கூடாது...’’ என்று பகிரங்கமாக அறிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.‘‘குறிப்பாக இரண்டு வயதைக் கூடத் தாண்டாத குழந்தைகள் ஒரு நிமிடம் கூட டிவி அல்லது ஸ்மார்ட்போனைப் பார்க்க நாம் அனுமதிக்கக்கூடாது. இரண்டு முதல் நான்கு வயதுக்குள் இருக்கும் குழந்தைகளை வேண்டுமானால் அதிகபட்சம் ஒரு மணி நேரம் டிவி பார்க்க அனுமதிக்கலாம்...’’ என்கிறது இன்னொரு ஆய்வு.

‘‘குழந்தைகளைச் சமாளிக்க முடியாமல்தான் பெற்றோர்கள் அவர்களின் கைகளில் ஸ்மார்ட்போன் அல்லது வீடியோ கேமை கொடுத்துவிடுகிறார்கள். ஆனால், அதுவே குழந்தைகளின் உடல், மன ரீதியான பிரச்னைகளுக்குக் காரணமாகிவிடுகிறது...’’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

எடை குறைவான போன்!

வெகு நாட்களுக்குப் பிறகு ‘சோனி’ நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் குதித்துள்ளது. ‘எக்ஸ்ப்ரீயா ஏஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் போனை லைட் வெயிட்டில் வடிவமைத்துள்ளார்கள். எக்ஸ்ப்ரீயா மாடல் போன்களில் ‘வெயிட்’தான் பெரும் குறைபாடாக இருந்து வந்தது. 5 இன்ச் ஃபுல் ஹெச்.டி, 12 எம்பி பின்புற கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, 64 ஜிபி ஸ்டோரேஜ், 512 ஜிபி வரைக்கும் ஸ்டோரேஜை நீட்டித்துக்கொள்ளும் வசதி என அசத்துகிறது ‘எக்ஸ்ப்ரீயா ஏஸ்’. விலை ரூ.31,000.

வெப் சீரிஸுக்கு பெட்டிஷன்!

உலகளவில் சக்கைப்போடு போட்ட டிவி. சீரிஸ் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’. இதுவரை 7 சீசன்ஸ் வெளியாகி கோடிக்கணக்கான ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது. கடந்த மாதம் அதன் 8வது சீசன் வெளியானது.

மற்ற சீசன்களைப் போல இந்த சீசன் பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை. ஏமாற்றத்துக்குள்ளான ரசிகர்கள், ‘எட்டாவது சீசனை திரும்பவும் எடுங்கள். வேறு திரைக்கதையை எழுதுங்கள்...’ என்று சீரிஸை தயாரித்த நிறுவனத்துக்கு ஒரு பெட்டிஷனைக் கொடுக்கவிருக்கிறார்கள். இதுவரைக்கும் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் அந்த பெட்டிஷனில் கையெழுத்திட்டுள்ளனர்!

கேரளத்துப் பெண்குட்டி!

தங்கச் சரிகை, வெண்பட்டு ஜொலி ஜொலிக்கும் கேரள காஸ்ட்யூமில் புது போட்டோ ஷூட் செய்திருக்கிறார் சாய் பல்லவி. அதில் சிலவற்றை இன்ஸ்டாவில் தட்டிவிட்டு மகிழ்ந்துள்ளார். பத்து லட்சம் ஃபாலோயர்களைத் தாண்டிவிட்ட சாய் பல்லவிக்கு லட்சக்கணக்கில் ஹார்ட்டின்கள் குவிந்து வருகின்றன.                

குங்குமம் டீம்