இரும்புக்கடை தொழிலாளர்களின் வாழ்க்கையை பதிவு செய்திருக்கேன்!



சொல்கிறார் அறிமுக இயக்குநர் அதியன் ஆதிரை

‘‘படத்தோட பெயர், ‘இரண்டாம் உலகப்போரின் கடைசிக் குண்டு’. தலைப்பைப் பார்த்துட்டு இது என்ன மாதிரி ஜானர்னு எல்லோரும் கேட்கிறாங்க.
உங்க லைஃப் என்ன ஜானர்னு கேட்டால் உங்களால பதில் சொல்ல முடியும்னு நினைக்கிறீங்களா? உள் தமிழகத்தில் இருக்கிற ஏழை விவசாயியின் மகன், அவன் சந்திக்கிற பிரச்னைகள், அவன் மீள்வது குறித்தும் பேசும். மேலும், பெண் விடுதலை பற்றி, உழைப்பைச் சுரண்டுவது பற்றி, குழந்தைத் தொழிலாளர்களின் வாழ்க்கை குறித்தும் பேசும்…

அதாவது நிறைய மனிதர்களின் கதையை ஒரு மனிதனின் கதைக்குள்ளே வைத்து கதை பயணமாகும். முக்கியமாக இது போருக்கு எதிரான படம். ஆயுதங்கள் ஒருபோதும் அமைதியைக்கொண்டுவரமுடியாது.

பாதுகாப்பு என்பது அன்பு மட்டும்தான். நான் இந்தப் படத்தைப்பத்தி இப்படிச் சுருக்கி சொல்றது கூட சரியானு தெரியலை. ஆனா, படத்தில் நிறைய நிகழும். அது உங்களை அவங்களோட உலகத்தில் கொண்டு போய் வைக்கும். ஒரு அனுபவம் மாதிரியும் பார்க்கலாம். அப்படியே ஒரு முழுநீள வாழ்க்கையோட தரிசனமும் இருக்கு...’’ தெளிவாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் அதியன் ஆதிரை. இயக்குநர் பா.இரஞ்சித்தின் அணுக்க சீடர்.

ஆழமா பிரச்னைகளை எடுத்து பேசியிருக்கீங்க போல...பிறப்பின் அடிப்படையில் சில பிரச்னைகளைச் சந்திக்கிறோம். சுயமரியாதையோடு கிராமங்களில் வாழ முடியலை. மார்க்ஸ் சொல்ற மாதிரி போராட்டம்தான் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கு. தொடர்ந்து போராடுவதால் மட்டுமே உயிர்ப்புடன் இருக்கிறோம்.

இந்தப் படம் இரும்புக்கடை தொழிலாளர்கள் பற்றிய ஒரு முக்கிய பதிவா இருக்கும். எல்லாத் தொழிலிலும் கடைநிலை ஊழியர்கள்னு ஒரு பிரிவு இருக்கும். லாரி, கார், ரயில், பைக் ஓட்டுகிற ஓட்டுநர்கள் எல்லாம் ஒண்ணுதான்.

ஆனால், லாரி டிரைவர்களைக் கேவலமாகப் பார்ப்பாங்க. அழுக்கு, நிறைய நேரம் உழைக்கணும், சரியான சம்பளம் இருக்காது... உழைப்பு எந்த விதமான முன்னேற்றத்தையும் கொண்டு போய் சேர்க்காது… மன உளைச்சலோடு இருப்பவர்களுக்கு வடிகால் ேதவைப்படுது. அந்த வடிகாலை காரணம் காட்டி, இழிவானவர்கள், தவறானவர்கள்னு இந்தச் சமூகம் சித்தரிக்குது.

இந்த இரும்புக்கடைகளில் லட்சக்கணக்கானவர்கள் ஈடுபட்டு இருக்காங்க. இதில், குழந்தைத் தொழிலாளர்கள் அனேகர். இந்த வேலையே ஒவ்வொரு நாளும் நிறைய ரத்தம் பார்த்துக்கிட்டே இருக்கு. இதையெல்லாம் படம் பேசும். மனிதனை அன்பால் தொடுவதே நல்ல இலக்கியம், சினிமானு நினைக்கிறேன். அன்பால் அவனுக்கு மிகப்பெரிய விஷயத்தைச் சொல்லிவிடலாம். மனிதனோட வறண்ட பகுதியை ஈரம் ஆக்கணும். வாழ்க்கை உங்களை எந்த எல்லைக்கும் கொண்டு போகலாம். ஆனால், அத்தனை பேரும் அன்புக்காக அலையுறதுதான் நீதி.

தினேஷ் பார்க்க வேறுவிதமா இருக்கார்...அருமையான நடிகர். நடிகர்களில் பெரும்பாலானவர்களுக்கு பொலிடிக்கலா விஷயம் தெரியாது. ஆனால், தினேஷ் மிகச் சிறந்த அரசியல் அறிவுள்ள நடிகர். தொடர்ந்து வாசிக்கவும், விவாதிக்கவும் மனசு உடையவர். இலக்கியவாதிகள், ஓவியர்கள், கவிஞர்கள், நாடக நடிகர்கள்னு தொடர்பில் இருக்கிறதை விரும்புவார்.

படத்தில் ஈஸியாக ஒன்றிப்போக அவர் ரெடியாக இருந்தார். அது எனக்கு உதவியாக இருந்தது. இயக்குநரின் பார்வையைப் புரிஞ்சுக்கிட்டு, நான் நினைச்சதை விட சிறப்பாக செய்து கொடுத்தார்.

அருமையான காதலுக்குரிய இடங்கள் இருக்கு. படம் ஒரு பக்கம் சீரியஸாக போய்க்கிட்டு இருக்கும்போது பிளாக் ஹ்யூமர் மறுபக்கம் இருந்துக்கிட்டே இருக்கும். ரொம்ப எளிமையாக கேரக்டரை கொண்டு போய் சேர்த்திருக்கார்.
ஆனந்தியும் நல்ல இடத்திற்கு வர ஆரம்பித்து விட்டார்கள்…

அவங்களை நான் ஒரு நடிகையாகவே உணரவில்லை. வெகுநாள் பழகிய தோழி மாதிரியே இருந்தார். செட்ல ‘தோழர்’னுதான் அழைப்பார். ஒரு படத்தை தனிப்பட்ட விதத்தில் தாங்கி நிற்கிற அளவுக்கு அவங்க வளர்ந்திட்டாங்க. விழுப்புரம் சார்ந்த தமிழைக் கூட சும்மா ஒப்பித்து விடாமல், அர்த்தம் புரிஞ்சு, தெளிஞ்சு உச்சரிக்கிற நேர்த்தியிருக்கு.

முனீஸ்காந்த் இதில் ஏற்றிருப்பது அருமையான கேரக்டர். படம் முழுக்கவே அண்ணன் வருகிறார். அவரை இந்தவிதமாய் பயன்படுத்திக்கலையேன்னு பிற இயக்குநர்கள் நினைக்கக்கூடும். சென்னைக்கு பக்கத்தில் இருந்தாலும் விழுப்புரம் பகுதி வாழ்வெல்லாம் இன்னும் சினிமாவில் பதிவாகலை. ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’, ‘அழகி’ எனப் பதிவான படங்களை எண்ணி விடலாம். அப்படி ஓர் இடம் படத்தில் கொஞ்சமாக என்றாலும் வீரியமா வந்திருக்கு.

புது உத்திகள் எல்லாம் படத்தில் கொண்டு வரணும்னு நினைக்கலை. உத்திகள் சினிமா ஆகாது. மனிதன் புத்தியில் வாழ்வது இல்லை. புத்திக்கும், மனித வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை. உணர்வில் வாழ்பவன்தான் மனுஷன். அப்படியேதான் இந்தப் படமும் பயணம் போகுது.பாடல்கள் அருமையாக இருக்கு...

டென்மாதான் இசை. சமீபத்தில் ஒருசேர நல்லா வருகிற ஆல்பமாக இது இருக்கும். என்னுடைய நண்பன் கிஷோர்தான் கேமிரா. சத்யஜித்ரே இன்ஸ்டிடியூட்டில் படித்தவர். ‘நீ சொன்னதைவிட இரண்டு, மூணு மடங்கு படத்தை அருமையா பண்ணியிருக்கே’ன்னு தயாரித்த இரஞ்சித் அண்ணன் பாராட்டினார்.

என்னுடைய கவிதைப் புத்தகத்தைப் படித்துவிட்டுத்தான் அறிமுகமானார் அவர். முன்னாடி சினிமாவுக்கு வந்திட்டு திரும்பியவன் நான். இரும்புக்கடையில் இருந்தவனை, ‘கல்யாணம் கட்டிக்கிட்டு, இரண்டு பிள்ளைகளோட இருக்க… இது போதுமா... வா… உன்னை பார்த்துக்கிறேன்’னு கூட்டிட்டு வந்த மனுஷன்! அரசியல் பேசவும், அறியவும், சுயமரியாதையோட ஒண்ணா இருக்கவும் அனுமதித்த தோழன். சுயம் பார்க்கிறதையும், தன்மதிப்பு அதிகம்னு உணர்ந்ததையும் புரிந்துகொள்கிற தங்கமான ஆள். அவருக்கு ஒரு நல்ல படம் கொடுத்திடணும்கிற ஆசையும் சேர்ந்திருக்கு என்பதே உண்மை.

நா.கதிர்வேலன்