கைகொடுக்கும் கலை-அறிவியல் படிப்புகள்!+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?

பிளஸ் 2 தேர்வு முடிந்து ரிசல்ட் வந்துவிட்டது. அடுத்து ‘என்ன படிக்கலாம்? எதைப் படித்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும்’ என்ற குழப்பமான  சூழ்நிலையில் மாணவர்களும் ெபற்றோர்களும் தவித்துக்ெகாண்டிருப்பார்கள். அவர்களுக்கு வழிகாட்டும் விதமாக கல்வியாளர் முனைவர் முருகையன் பக்கிரிசாமி நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்களைப் பார்ப்போம்.

‘‘சிலருக்கு எதிர்பார்த்த மதிப்பெண்களைவிட ஒன்றிரண்டு கூடியிருக்கலாம், குறைந்திருக்கவும் செய்யலாம். மனந்தளராமல் தனக்கு விருப்பமான எதிர்கால வாழ்வின் வெற்றிக்கு வழிவகுக்கின்ற ஒரு படிப்பைத் தன் பொருளாதாரச் சூழ்நிலைக்கேற்றவாறு தேர்ந்தெடுத்து தரமான கல்லூரியில் சேருவதில்தான் உண்மையான வெற்றி உள்ளது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தன் லட்சியமாகப் படித்திருந்தாலும், அவற்றை அடைய முடியாமல் போனாலும் வாழ்வுக்கு வழிகாட்ட, உயர்கல்வி அந்தஸ்தை ஏற்படுத்த கைகொடுக்கும் கலை-அறிவியல் படிப்புகள் ஏராளம் உள்ளன.

தமிழ்நாட்டில் சுமார் 622 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. சென்னையில் மட்டும் 77 கல்லூரிகளும், சென்னைக்கு அருகிலுள்ள திருவள்ளூரில் 7 கல்லூரிகளும் காஞ்சிபுரத்தில் 14 கல்லூரிகளும் உள்ளன. நாட்டில் அமைந்துள்ள சுமார் 12 பல்கலைக்கழகங்கள் இக்கல்லூரிகளை அங்கீகரித்து, பாடப் பிரிவுகளுக்கான அனுமதியைப் பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலின்படி அளித்துவருகின்றன. இவற்றுள் அரசுக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகளும் அடங்கும்.

+2 முடித்த மாணவர்களுக்கு இளங்கலைப் பட்டங்களைப் பல்வேறு பாடப்பிரிவுகளில் அளிப்பதோடு முதுகலைப் பட்டப்படிப்பு, ஆய்வுப் படிப்புகளான எம்.பில், பிஎச்.டி போன்ற படிப்புகளும் இக்கல்லூரிகளில் அளிக்கப்படுகின்றன. +2-வில் தேர்ச்சி பெற்றும், எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியவில்லையே என்று மாணவர்கள் ஏங்கித்தவிக்க வேண்டியதில்லை.

மிகச்சிறந்த வேலைவாய்ப்புடைய 75 வகையான படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. +2-வில் பெற்ற மதிப்பெண்களை இங்கே கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை மட்டுமே கணக்கிலெடுத்து இப்படிப்புகளில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர் என்பதைக் கட்டாயம் நினைவில் கொள்ளவேண்டும்.

கலை - அறிவியல் இளநிலைப் பட்டப்படிப்புகள்

இளநிலைப் பட்டப்படிப்புகளாக சுமார் 256 படிப்பு வகைகள் உள்ளன. இவற்றுள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுமார் 62 வகை படிப்புகளைப் படிக்கலாம். அவை; பி.காம் படிப்பில் மட்டும் 1.அக்கவுன்டிங் ஃபைனான்ஸ், 2. அக்கவுன்டிங் ஃபைனான்ஸ்-மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட், 3. வங்கி மேலாண்மை, 4. வாணிபக்கணக்கு, 5.கூட்டுறவு, 6.வணிகவியல், 7.வணிகவியலும் கணக்கியலும், 8.வணிகவியல் மற்றும் தொழில் நிர்வாகம், 9.வணிகவியல் மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாடுகள், 10.வணிகவியல் மற்றும் இ.காமர்ஸ், 11.வணிகவியல், ஆபீஸ் மேனேஜ்மென்ட் மற்றும் செக்ரட்டேரியல் பிராக்டீஸ், 12.மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட், 13. டேக்ஸேஷன், 14. சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை ஆகிய உட்பிரிவுகளும் உள்ளன.

பி.ஏ படிப்பில் 1. பழங்கால இந்திய வரலாறு, 2. மானுடவியல், 3. இலக்கியம் (தமிழ், ஆங்கிலம், அரபு, பிரெஞ்சு, இந்தி, மலையாளம், தெலுங்கு, சமஸ்கிருதம்), 4. ஆர்ட்ஸ் அண்ட் பெயின்டிங், 5. கூட்டுறவு, 6. கம்யூனிகேடிவ் இங்கிலீஷ், 7. கார்ப்பரேட் எக்கனாமிக்ஸ், 8. கல்ச்சர் அண்ட் ஆர்க்கியாலஜி, 9. பாதுகாப்பு மற்றும் வியூகவியல், 10. பொருளாதாரம், 11. பொருளாதாரம் மற்றும் ஊரக வளர்ச்சி, 12. ஃபங்ஷனல் இங்கிலீஷ், 13. வரலாறு, 14. ஹோம் சயின்ஸ், 15. வரலாற்றுச் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை, 16. இந்திய கலாசாரம், 17. இதழியல், 18. ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன், 19. மாஸ் மீடியா, 20.தத்துவயியல், 21. அரசியல், 22. அரசியல் அறிவியல், 23. உளவியல், 24. மதம், தத்துவம், சமூகவியல், 25. சமூகவியல், 26. சுற்றுலா ஆகிய உட்பிரிவுகளும் உள்ளன.

பி.எஸ்சி. படிப்பில் 1. நவீன விலங்கியல், 2. மேம்படுத்தப்பட்ட விலங்கியல் மற்றும் விலங்கு உயிரி தொழில்நுட்பம், 3. அனிமேஷன், 4. பயோடெக்னாலஜி, 5. தாவரவியல், 6. விலங்கியல், 7. உயிரியல், 8. இயற்பியல், 9. கணக்கியல், 10. கம்ப்யூட்டர் அறிவியல், 11. கம்ப்யூட்டர் தொழில்நுட்பம், 12. எலெக்ட்ரானிக்ஸ் மீடியா, 13. எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், 14.எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல், 15. புவியியல், 16. தகவல் தொழில்நுட்பம், 17.புள்ளியியல், 18. சுற்றுலா மற்றும் வரவேற்பு மேலாண்மை ஆகிய உட்பிரிவுகளும் உள்ளன. இவை தவிர, பி.பி.எம், பி.பி.ஏ. பி.லிட்., பி.சி.ஏ. ஆகிய இளங்கலைப் படிப்புகளும் உள்ளன.

எந்தக் கல்லூரியில் எந்தப் படிப்பு உள்ளது என்பதை இணையதளத்தின் மூலம் அறியலாம். தான் படிக்க விரும்பும் கல்லூரி தேசிய தர மதிப்பீட்டுக் குழுவால் சான்றளிக்கப்பட்டதா? போதுமான பேராசிரியர்கள் உள்ளார்களா? ஏனைய கற்பித்தல் வசதிகள் உள்ளனவா? என அறிந்து அந்தக் கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அக்கல்லூரியில் தான் விரும்பும் பிரிவில் சேரவேண்டும்.

+2-வில் பிரிவு 1-ல் கணிதவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் நுண் உயிரியல்/உயிரி வேதியியல்/செவிலியர் பயிற்சி / சத்துணவு மற்றும் சரிவிகித உணவியல்/கணினியியல் அறிவியல்/ஆங்கிலத் தொடர்பியல் ஆகியவற்றில் ஒன்றை விருப்பப் பாடமாகப் பயில்பவர்கள் ,மருத்துவம், பொறியியல், விவசாயம், கால்நடை, மருத்துவம், சட்டம் போன்ற தொழில் படிப்புகளுக்குச் செல்வோரைத் தவிர ஏனையோர் கலை அறிவியல் படிப்புகளை (மேலே குறிப்பிட்டவாறு) கலைக் கல்லூரிகளில் படிக்கலாம்.

பிரிவு 2-ல் இயற்பியல்/வேதியியல்/ உயிரியல் ஆகியவற்றில் ஒரு விருப்பப் பாடம் (நுண் உயிரியியல்/உயிரி வேதியியல்/கணினியியல் அறிவியல்/ஆங்கிலத் தொடர்பியல் பயின்றோர் மேலே குறிப்பிட்டவாறு பொறியியல் கல்லூரிகள் தவிர்த்துப் படிக்கலாம்.பிரிவு 2 (ஏ)-ல் இயற்பியல்/வேதியியல்/தரவரவியல்/விலங்கியல் படித்தோரும், பொறியியல் கல்லூரி தவிர்த்து மேற்கண்ட ஏனைய படிப்புகளைப் படிக்க முடியும்.

பிரிவு 3-ல் கணக்குப் பதிவியல்/வணிகவியல்/பொருளியல்/ஒரு விருப்பப் பாடம், வணிகக் கணிதம்/கணினிவியல்/புள்ளியியல் படித்தோர், மருத்துவம், பொறியியல், விவசாயம், கால்நடைப் பல்கலை தவிர்த்து ஏனைய பி.காம் தொடர்பான படிப்பை மேற்கொள்ளலாம்.
பிரிவு 4-ல் வரலாறு/புவியியல்/பொருளியல், ஒரு விருப்பப் பாடம் (அரசியல் அறிவியல் / கணினியியல் / புள்ளியியல் / ஆங்கிலத் தொடர்பியல்) பயின்றோர் பி.ஏ., பி.எஸ்சி. ஆகிய படிப்புகளைக் கலைக் கல்லூரிகளில் படிக்கலாம்.

ஏராளமான கலைக்கல்லூரிகள், புதுப்புது பட்டப்படிப்புகள் அரசு மற்றும் தனியார் படிப்புதவித்தொகை என்பன போன்ற வாய்ப்புகளைப் பயன்
படுத்தி, உயர்கல்வியில் சேர ஆர்வம் காட்டவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

தோ.திருத்துவராஜ்