2 கோடி லிட்டர் தண்ணீரைச் சேமித்திருக்கும் கலைஞன்!அபித் சுருதி நாடறிந்த எழுத்தாளர். தன் எழுத்துக்காக தேசிய விருதைப் பெற்ற ஆளுமை. இந்தி, குஜராத்தி என இரு மொழிகளிலும் சேர்த்து 75க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளவர். சிறுகதை, நாடகம், நாவல், கட்டுரைகள் என இலக்கியத்தின் வெவ்வேறு தளங்களில் விரிவாக இயங்கிவரும் அபித், ஓவியம், கார்ட்டூன் போன்ற கவின்கலைகளிலும் கரை கண்டவர். இலக்கியவாதியாக மட்டுமின்றி பத்திரிகையாளராகவும் செயல்படுபவர்.

இப்படி சகலகலா மன்னனாகத் திகழும் அபித் சுருதியை இன்று நாடே கொண்டாடுகிறது! அதற்குக் காரணம் மேற்சொன்ன அவரது சாதனைகள் மட்டும் அல்ல. சூழலியல் போராளியாக அவர் எடுத்திருக்கும் புதிய அவதாரத்துக்காகத்தான். Drop Dead Foundation என்ற அமைப்பை நிறுவி நாடு முழுதும் உள்ள குடிநீர்க் குழாய்களில் ஏற்படும் கசிவைச் சரி செய்து வருகிறார் அபித் சுருதி.

இதற்காக அவர் இந்த வயதிலும் ஊர் ஊராக அலைகிறார். வாரம் ஓர் ஏரியா என்று முடிவு செய்துகொண்டு அங்கிருக்கும் ஏதேனும் ஒரு வீட்டின் காலிங் பெல்லை அடிக்கிறார் அபித். அவருடன் தயாராக ஒரு பிளம்பரும் இருக்கிறார். சினிமா நட்சத்திரங்களை மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் நம் மக்களில் பெரும்பாலானவர்களுக்கு அபித் எவ்வளவு பெரிய ஆளுமை என்று தெரிவதில்லை. ‘யாரோ ஒரு கிழவன் ஒரு டீ சர்ட்டைப் போட்டுக் கொண்டு ஒரு வாரமாக ஷேவ் செய்யாத முகத்துடன் வாசலில் நிற்கிறாரே...’ என்றுதான் நினைக்கிறார்கள்.

ஆனால், அதைப்பற்றி எந்தவித அலட்டலும் இல்லாமல், அந்த வீட்டின் தண்ணீர்க் குழாயில் ஏதும் கசிவு இருக்கிறதா? சொட்டுச் சொட்டாக ஒழுகுகிறதா என்று விசாரிக்கிறார் அபித்!வீட்டுக்காரர் ஆம் என்று சொன்னால் அபித்தும் பிளம்பரும் அவ்வீட்டுக்குள் நுழைகிறார்கள். ஒழுகிக் கொண்டிருக்கும் குழாயின் டாப்பில் இருக்கும் பழைய வாஷரையும் ஃபாசட்டுகளையும் அகற்றுகிறார்கள். தயாராகத் தங்களிடம் இருக்கும் புதியவற்றைப் பொருத்திவிட்டு வெளியேறுகிறார்கள்.

இந்தக் காரியத்துக்காக இவர்கள் ஒரு பைசாகூட அந்த வீட்டுக்காரரிடம் பெறுவதில்லை! அபித் இந்த ட்ராப் டெட் ஃபவுண்டேஷனை நிறுவியது 2007ல்தான். ஆனால், இதற்கான விதை அவரின் பால்யத்தில் இருக்கிறது. 1935ம் ஆண்டு குஜராத்தின் ரஜூலா என்ற சிறு நகரத்துக்கு அருகில் உள்ள வாவேரா சிற்றூரில் ஓர் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தார் அபித். சூரத்தின் தபதி நதிக் கரையில் நின்று சுழித்தோடும் பெருவெள்ளத்தை நேரம் போவது தெரியாமல் ரசித்திருக்கிறார். அளவான வெள்ளம் ஓடும் காலங்களில் ஆற்று நீரில் குடைந்து குடைந்து நீராடிய பால்யமும் அவருக்குண்டு.

ஒரு கட்டத்தில் அவரது குடும்பம் மும்பையின் டோங்கிரி பகுதியில் குடியேறியது. மும்பையின் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு தபதி நதித் தீரத்தில் வாழ்ந்த அபித்தின் மனதைப் பாதித்தது. நகரவாசிகளுக்கு ஒவ்வொரு சொட்டு நீரும் எவ்வளவு முக்கியம் என்பதை தன் பால்யத்தில் மூழ்கியவராக அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார் அபித்.

‘‘நான் முதன் முதலாக இந்த அமைப்பை நிறுவும் முன் என் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று இந்த தண்ணீர்க் குழாயை சரி செய்யும் வேலையைச் செய்தேன். அப்போது எல்லாம் அவர்கள் ‘சில சொட்டு நீர்த்துளிகள் கசிவதால் என்ன ஆகிவிடப்போகிறது. குழாயிலிருந்து கங்கையா காணாமல் போகப் போகிறது...’ என்று என்னிடம் கிண்டலாகக் கேட்பார்கள்.

உண்மையில் அவர்களுக்கு இதுகுறித்து எதுவும் தெரியவில்லை என்றே சொல்வேன். ஒரு நொடிக்கு ஒரு சொட்டு நீர் வீணாகுமானால் அது ஒரு மாதத்தில் ஆயிரம் லிட்டர் தண்ணீர்! ஒரு குடம் தண்ணீருக்காக கொதிக்கும் வெயிலில் பக்கத்து கிராமத்துக்கு நடக்கும் மக்களும், குடம் தண்ணீரை முப்பது ரூபாய்க்கு வாங்கும் மக்களும் நிறைந்திருக்கும் நாடு இது.

இந்த எதார்த்தம் புரியாமல் ஏதோ சில சொட்டுகள்தானே என்பவர்கள் ஊதாரிகள். சிறுவயது முதலே வளமான நதிப் பெருக்கில் வளர்ந்தவன் நான். மும்பைக்குக் குடியேறிய பிறகு தண்ணீரை அளவாகப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் என்னை வலுவாகப் பாதித்தது. எங்காவது ஒவ்வொரு சொட்டு தண்ணீர் சிந்தும்போதும் அந்த சத்தம் என் காதுக்குள் ஆணி அடிப்பது போல் கர்ணகடூரமாக ஒலிக்கும். அதைப் பார்த்தாலே மனம் பதைக்கும். இந்த மனநிலைதான் என்னை ட்ராப் டெட் ஃபவுண்டேஷனை அமைக்கத் தூண்டியது!’’ என்கிறார் அபித்.

குழாய்களுக்கான பாகங்கள் வாங்குவதற்கும் போக்குவரத்துக்கும் பிற செலவுகளுக்கும் தன் கைக்காசைத்தான் செலவழிக்கிறார் அபித். தன் புத்தகங்களுக்கான விருதுத் தொகையையும் இதிலேயே முதலீடு செய்கிறார். அவரின் இந்தச் செயலைப் பாராட்டி யார் விருது கொடுத்தாலும் அந்தக் காசையும் இந்தப் பணிகளுக்கே செலவிடுகிறார்!

‘‘நீங்கள் மனதார ஒரு வேலையை நேசித்துச் செய்யத் தொடங்கினால் அந்தப் பணியை கடவுள் அங்கீகரித்துவிடுவார்! அதன்பிறகு உங்களுக்குத் தேவையான செல்வத்தை அந்தப் பணியே உங்களுக்கு உருவாக்கித் தரும்...’ என்று சொல்லும் அபித்துக்கு இப்போது 84 வயதாகிறது! இந்த வயதிலும் ஓய்வின்றி பயணித்துக் கொண்டேயிருக்கிறார். நிறைய எழுதுகிறார். ஓவியம் வரைகிறார். கார்ட்டூன்களைத் தீட்டுகிறார்.

‘‘உங்களுக்கு இதில் என்ன கிடைக்கிறது என்று கேட்கிறார்கள் சிலர். இந்தப் பணி எனக்குக் கொடுக்கும் ஆத்ம திருப்தியை என்னவென்று சொல்லி அவர்களுக்குப் புரியவைப்பேன்! ஒவ்வொரு வீட்டில் நீர்க்குழாய் டேப்பை மாற்றும்போதும் ஒரு பிரச்னையிலிருந்து விடுபட்ட நிம்மதி கிடைக்கிறது. எனவே, என்னால் இயன்றவரை இதைச் செய்துகொண்டேதான் இருப்பேன்.

இதுவரை இரண்டு கோடி லிட்டர் தண்ணீரைச் சேமித்திருக்கிறேன்! என் வயதுக்கு என்னாலேயே இவ்வளவு செய்ய முடிகிறது என்றால் இளைஞர் சக்தி நினைத்தால் எவ்வளவு செய்யலாம்? பொறுப்புகளைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். தனி மனிதன் என்ன செய்ய முடியும் என்று யோசிக்காமல் நம்மால் முடிந்ததைச் செய்யத் தொடங்குவோம். எந்த பெரிய மாற்றமும் ஒரு தனிமனிதனிடம் இருந்துதான் தொடங்க வேண்டும்..!’’ என்று தீர்மானமாகப் பேசுகிறார் இந்த தண்ணீர் தாத்தா.                

இளங்கோ கிருஷ்ணன்