தேவராட்டம் ரகசியங்கள் அக்கா, தம்பி சென்டிமென்ட்!



‘‘எப்பவும் சென்டிமென்ட், எமோஷனல், ஆக்‌ஷன்னுதான் நம்ம படங்கள் போகும். ‘தேவராட்டம்’ படமும் அப்படித்தான். என் களமே உறவுகளும் குடும்பங்களும்தான். அம்மாவுக்கும், மகனுக்குமான உறவு ‘குட்டிப்புலி’, மாமா - மருமகன் உறவை ‘கொம்பன்’ மேம்பட வைச்சது.
அப்பத்தாவுக்கும், பேரனுக்குமான உறவை ‘மருது’ எடுத்து வைச்சது. அளவா கொடுத்தா சென்டிமென்ட் மாதிரி மனுஷனுக்கு இஷ்டமானது வேற எதுவும் கிடையாது. நாகரீகம் வளர்ந்திருக்கலாம். நாம இங்கே பூமியிலே கால் பதிச்சுத்தானே நிக்கிறோம்!

என் படத்தில் இரண்டு சீன்ஸ் வர்றவங்களும் முக்கியமானவங்கதான். அறுபது சீன்ஸ் வர்றவங்களும் முக்கியமானவங்கதான். படத்தில் உங்களையே நீங்க அடையாளம் காணணும். என் வெற்றி அங்கதான் ஆரம்பம் ஆகும். நான் பாதிக்க வேண்டிய இடம் உங்க இதயம்தான்.
மக்கமார்களோட கூடி வாழறதுதானே நம்ம பக்கத்து பழக்கம் எல்லாம்?! அறுவாளைத் தூக்குறதும் அப்பறம் அப்படியே கண்ணீர் விட்டுக் கட்டிப்பிடிச்சு அழுறதும்தானே நம்ம அழகு?! இதில்தான் இதுவரைக்கும் நம்ம கப்பல் போய்க்கிட்டு இருக்கு!

பழகிய பாதையில் புதிய பயணம்தான் ‘தேவராட்டம்’ படம்...’’ சிம்பிளாகப் பேசுகிறார் இயக்குநர் முத்தையா. எந்த மாஸ் ஹீரோவும் கால்ஷீட் வழங்கத் தயாராக இருக்கிற கமர்ஷியல் மாஸ்டர்.இந்தப் படம் உங்க வகையில் எந்த மாதிரி!அக்கா - தம்பி சென்டிமென்ட். இந்த உறவை ரொம்பவும் மேன்மைப்படுத்தி சொல்லியிருக்கேன். ஒரு பாசப் பிணைப்பில் உங்களைக் கட்டிப் போடுற கதைதான் ‘தேவராட்டம்’.

இது வெற்றி என்கிற மனுஷனோட கதைதான். இப்ப உறவுகள் பத்தியும், அதனோட மேன்மைகள் பத்தியும் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு. அதனால்தான் பொள்ளாச்சி மாதிரி சம்பவங்கள் கூடிப்போச்சு. முன்னாடி அங்கொண்ணும், இங்கொண்ணுமா சில தகாதது நடக்கும். இப்ப 234 தொகுதியிலும் இப்படி நடக்குது. டிவியைத் திறந்தா நூறு சேனல்கள். மூளைக்குள்ளே ஏதேதோ புகுந்துட்டே இருக்கு. நியூஸ்ல சாதாரண செய்தியைக்கூட மியூஸிக்கோட கத்திச் சொல்லி பயமுறுத்துறாங்க.

இப்ப இருக்கிற இளைஞர்கள் கிட்ட நல்லதை விதைக்கலையோன்னு தோணுது. ஊரோடு வாழ், உறவோடு வாழ்னு சொன்னதெல்லாம் மறந்து போயிட்டோம். இந்தப் பாதிப்புகள் சினிமாவுலேயும் தெரியுது. இந்தத் தலைமுறை எங்கே போகும்னு திடீர்னு ஒரு பயம் வருது.
மனுஷனா, ஒரு கலைஞனா என்னோட ஏக்கம் என்னன்னா, எப்பவும் மனுஷத்தன்மை போயிடக்கூடாது. உறவையும், மனுஷ மாண்பையும் உயர்த்திப் பிடிக்கிறதுதான் என் வேலை. முத்தையானு சொன்னாலே அப்படித்தான் ஆகிப்போச்சு.

அனேமாக இன்னும் பிடிவாதமாக உறவுகளைச் சொல்றது நீங்கதான் ...ரொம்ப வேண்டியது இப்ப இதுதான். அஜித் மாதிரி பெரிய ஹீரோ ‘விஸ்வாசம்’னு மகள் - தந்தை உறவைச் சொல்லி எடுத்தார். நல்லா ரீச் ஆகி அத்தனை பேரின் மனசைத் தொட்டது. எல்லா பெரிய ஹீரோக்களும் இதை முன்னெடுத்து செய்யணும். முன்னாடி இருந்த ஹீரோஸ் எல்லாம் கடமையாக இதைச் செய்தாங்க. அப்ப இதுமாதிரி கேடுகெட்ட தவறுகள் இருந்ததில்லை. இப்ப நல்லதெல்லாம் அவுட் ஆஃப் ஃபோக்கஸ் ஆகி தவறுகள் முன்னிலைப்படுது.

முன்னாடி முஸ்லீம் மக்களை ‘மாமா’னு முறை சொல்லிக் கூப்பிடுவோம். அவரும் ‘மச்சான்’னு கூப்பிடுவாரு. இப்ப இந்து - முஸ்லீம்னு பிரிச்சு வைச்சு வேடிக்கை பார்க்கிறாங்க. இப்படி உறவு சொல்லி கண்ணியம் காத்தபோது எந்தச் சாமியும் குறுக்க நிற்கலை. சில விஷயங்கள் பழசுதான். ஆனால், அதுதான் பாதுகாப்பு.கெளதம் கார்த்திக் எப்படி செய்திருக்கார்?

53 நாளில் பெரிய ஆக்‌ஷன் படத்தை தங்கு தடையில்லாமல் முடிச்சிருக்கோம். அவருடைய உழைப்பு இதில் ஆகப்பெரியது. ஹீரோவின் ஈடுபாடு இல்லாமல் ஆகக்குறைந்த நாளில் படத்தை முடித்திருப்பது சாத்தியமே இல்லை. என் திறமைக்கேற்ற மாதிரியும், அவரின் அக்கறைக்கு ஏத்த மாதிரியும் படம் அருமையாக வந்திருக்கு.

ஹீரோயின் மஞ்சிமா மோகன். அட்வகேட்டா நடிக்கிறாங்க. மலையாளப் பொண்ணா இருந்தாலும், அப்படியே தமிழ்ச் சாயல்தான். சொன்ன டைமுக்கு வந்து, கேட்டுக்கிட்டபடி நடிச்சுக் கொடுக்கிற பொண்ணு. இந்தப்படம் அவருக்கு ஒரு நல்ல படமாக அடையாளம் கொடுக்கும்.

அக்காவா வினோதினி, கௌதமின் மாமனாக சூரி நடிக்கிறாங்க. அவங்க இரண்டு பேரும் நடிச்சதைப் பார்த்தால் கார்த்திக் - கவுண்டமணி மாதிரி காம்பினேஷன் அள்ளும்.

இசையை நிவாஸ் பிரசன்னா கவனிச்சார். ஏழு பாடல்கள். சித்திரைத் திருவிழாவைப் பாடலோட பதிவு செய்திருக்கோம். கிராமத்து பின்னணியில் பாடல்கள் சொக்கி எடுக்குது. துஷ்டி பாட்டு ஒண்ணு, கண்ணுல நீரை கோர்த்திட்டு போயிடும்.எல்லாம் சரி... நீங்க சாதியை உயர்த்துறீங்கனு சொல்றாங்களே..?நான் கிராமத்தை எடுத்துக்கிறேன். என் வேர் அதுதான். எல்லா சாதியையும் எடுத்துச் சொல்லப் போய் எங்கள்ல யாரும் அப்படி இல்லையேனு கோவிச்சிட்டு வந்திடக்கூடாது. ஏதாவது ஒரு கேரக்டர் குதர்க்கமாகப் பேசி பிரச்னையாகி விடக் கூடாது.

நான் எந்த சாதியையும் வெளியே சொல்றதில்லை. அவங்கவங்க சாதினு எதையோ பிடிச்சு அடையாளம் சொல்லிக்கிறாங்க. அதனால் ஒரே பக்கமாக கதை சொல்லிட்டு போய்விடுகிறேன். உறவுகளும், மக்களின் மேன்மையும் சிதறாமல் வலிமையாக இருக்கணும்னு எப்பவும் நினைக்கிறேன். நான் சொல்ற உறவுகள் எல்லாருக்கும் பொதுவானது.                               

நா.கதிர்வேலன்