அரசே மக்களை கொலை செய்கிறதா..?



மன்னிக்கவும். தேர்தலுக்காக எந்த எதிர்க் கட்சியும் இப்படியொரு புகாரைச்  சொல்லவில்லை. மாறாக, அமெரிக்காவைச்  சேர்ந்த  `டிசீஸ் டைனமிக்ஸ், எகனாமிக்ஸ் அண்ட் பாலிசி’ (Disease Dynamics, Economics & Policy) என்ற மையம்தான் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறது.
இந்தியா முழுக்க ஆய்வு நடத்திய இந்த மையம், 6 லட்சம் டாக்டர்ஸும் 20 லட்சம் நர்ஸஸும் நம்நாட்டில் பற்றாக்குறையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.‘சும்மா கதை விடறாங்க... நம்ம நாட்ல எவ்வளவு டாக்டர்ஸும் நர்ஸஸும் இருக்காங்க...’ என இதைப் படித்ததுமே உங்களுக்குத் தோன்றலாம். அது நியாயமும் கூட.

இதே நியாயம் அந்த ஆய்விலும் இருக்கிறது என்பதுதான் முக்கியம்.மருத்துவம் குறித்த பல்வேறு நெறிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ளது. உலகம் முழுக்கவே இதன்படிதான் நடக்க வேண்டும் என்பது எல்லா நாடுகளும் ஒப்புக்கொண்ட வரையறை.
இதன்படி ஆயிரம் பேருக்கு ஒரு டாக்டர் இருக்க வேண்டும்; 500 பேருக்கு ஒரு நர்ஸ் இருக்க வேண்டும்.

இந்தக் கணக்குப்படி இந்தியாவில் இல்லை என்பதைத்தான்  `டிசீஸ் டைனமிக்ஸ், எகனாமிக்ஸ் அண்ட் பாலிசி’ மையம் தன் ஆய்வில் தெரிவித்துள்ளது.
இதை ஜஸ்ட் லைக் தட் ஆக ஒதுக்க முடியாது.

அதுவும் ஆன்டிபயாடிக் மருந்துகளால் குணப்படுத்தக்கூடிய நோய்களால் பாதிக்கப்பட்டு ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உலகளவில் உயிரிழந்து வரும் நிலையில்... ஆன்டிபயாடிக் மருந்து எதிர்ப்புத் திறனால் நோய்த்தொற்று ஏற்பட்டு 7 லட்சம் பேர் உயிரிழக்கும் சூழலில்... இந்தப் பற்றாக்குறையை நாம் அலட்சியப்படுத்த முடியாது.

ஏனெனில் ஆன்டிபயாடிக் மருந்துகள் போதுமான அளவு இருந்தும் மருத்துவமனையில் உரிய சிகிச்சை கிடைக்காமல் நிறையபேர் உயிரிழக்கிறார்கள் என்பதை படுகொலை என்றுதானே குறிப்பிட முடியும்? மக்கள் தொகை எவ்வளவு இருக்கிறதோ அதை ஆயிரத்தால் வகுத்து; ஆயிரம் பேருக்கு ஒரு டாக்டர், ஒரு டாக்டருக்கு மூன்று நர்ஸ் என்ற அடிப்படையில் ஊழியர்கள் அமர்த்தப்பட வேண்டும் என்பது விதி.ஆனால், இந்தியாவில் 10,189 பேருக்கு ஒரு டாக்டர்தான் இருக்கிறார்.

போலவே ஐசியூவில் ஒரு நோயாளிக்கு ஒரு நர்ஸ் இருக்க வேண்டும். ஜெனரல் வார்டில் ஆறு நோயாளிகளுக்கு ஒரு நர்ஸ், குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் மூன்று நோயாளிகளுக்கு ஒரு நர்ஸ் இருக்க வேண்டும்.இந்த விதிமுறைகள் நம்நாட்டில் பின்பற்றப்படவே இல்லை. இதற்குக் காரணம் சுதந்திரத்துக்குப் பின் மக்கள் தொகைக்கு ஏற்ப மெடிக்கல் காலேஜும், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான நிறுவனங்களும் உருவாக்கப்படாததுதான். இதனாலேயே ஆண்டுதோறும் டாக்டர், நர்ஸ் பற்றாக்குறை அதிகரித்தபடியே இருக்கிறது.

முகத்தில் அறையும் சோகம், ஆபரேஷனுக்குப் பிறகு நோயாளிகளைக் கவனிக்க நர்ஸ்கள் கிட்டத்தட்ட இல்லவே இல்லை என்பதுதான்! இதனாலேயே ஆன்டிபயாடிக் மருந்து எதிர்ப்புத்திறன் உருவாகி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. படித்து பட்டம் வாங்கிய மருத்துவ மாணவர்களில் பலரும் நகர்ப்புறத்தில் பணியாற்றவே விரும்புகிறார்கள் என்பதும், 30%க்கும் குறைவானவர்களே கிராமப்புறங்களுக்குச் செல்கிறார்கள் என்பதும் இதன் பின்னணியில் இருக்கும் சோகங்கள்.

இந்த இடைவெளி குறைய வேண்டுமென்றால் கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு போதிய வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். போலவே நர்ஸ்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தையும் நம் நாட்டில் வழங்குவதில்லை என்பதாலேயே அவர்கள் வெளிநாடுகளுக்கு பணிக்குச் செல்கிறார்கள்.

அரசு மருத்துவமனையிலேயே இப்படி ஊதியக் குறைவு இருக்கும்போது தனியார் ஆஸ்பிடல்களில் எப்படி நல்ல ஊதியம் கிடைக்கும்?

இதை எல்லாம் அரசு சீர்செய்யவில்லை என்றால் நம் மக்களை நாமே கொலை செய்வது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

சுப்புலட்சுமி

ஷாக் ரிப்போர்ட்