Art ஆக மாறும் குப்பை BOTTLES! அசத்தும் கேரள மாணவி



ஈ, எறும்பு உட்பட சகல உயிர்களும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும் என நினைக்கும், மெனக்கெடும் காலம் இது.
அப்படித்தான் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த அபர்ணாவும் களத்தில் இறங்கியிருக்கிறார். சுற்றுச்சூழலைத் தூய்மைப்படுத்தும் இவரது நடவடிக்கை இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது!

வேறொன்றுமில்லை. தெருவோரங்களிலும், ஏரிப் பகுதிகளிலும் தூக்கி எறியப்படும் பாட்டில்களைச் சேகரித்து அலங்காரப் பொருட்களாக மாற்றி வருகிறார்! ‘‘இப்பவும் நான் ஸ்டூடண்ட்தான். நிஜமாதான் சொல்றேன். பிஎட் படிச்சுட்டு இருக்கேன். சொந்த ஊர் இதே கொல்லம்தான். அம்மாவுக்கு கைவினைப் பொருட்களை செய்யப் பிடிக்கும். அவங்களைப் பார்த்து எனக்கும் அந்த ஆசை வந்துடுச்சு...’’ புன்னகைக்கும் அபர்ணா, டெரக்கோட்டா நகைகள், பெயின்டிங்ஸ்... என சிறுவயதில் இருந்தே கலைத்துறையில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

‘‘எங்க ஏரியா பக்கத்துல ஓர் ஏரிப் பகுதி இருக்கு. பேரு அஷ்டமுதி காயல். அது வழியாதான் தினமும் நான் கல்லூரிக்குப் போறேன்; வர்றேன். மனசு அவ்வளவு கஷ்டமா இருக்கும். காரணம், பாட்டில்ஸ்! கண்டமேனிக்கு தூக்கி எறிஞ்சிருப்பாங்க. இதனால ஏரிப்பகுதியே அசுத்தமா காட்சியளிக்கும்.

என்ன செய்யறதுனு யோசிச்சேன். எறியப்பட்ட பாட்டில்ஸை தினமும் கொஞ்சம் கொஞ்சமா சேகரிக்க ஆரம்பிச்சேன்...’’ என்றவர் தொடக்கத்தில் காலிகிராஃபி எழுத்துகளில் கிரீட்டிங்ஸ், காமிக் ஃபான்ட்டில் வாழ்த்துகள் என கிரியேட்டிவ்வாகச்  செயல்பட்டவர், சட்டென்று டிகாபேஜ் (decoupage) ஆர்ட்டுக்கு தாவியிருக்கிறார்.

‘‘அதாவது போட்டோஸை ஒட்டி அதுல ஆர்ட் பண்றது. பூக்கள், பறவைகள்னு இருந்த டிகாபேஜ் ஆர்ட்ல அடுத்த அப்டேட் கொடுத்தேன். ‘உங்க புகைப்படங்களைக் கொடுத்தா அப்படியே அதை பாட்டில்கள்ல ஆர்ட்டா கொண்டு வந்துடுவேன்’னு அறிவிச்சேன். இதுக்கு மக்கள்கிட்ட வரவேற்பு இருந்தது. வீசி எறியப்பட்ட பாட்டில்களை சேகரிச்சு அதை இப்படித்தான் ஆர்ட்டா மாத்தி மக்களுக்கு கொடுக்கத் தொடங்கினேன்!

மக்களும் கைகோர்த்ததால காலேஜ் ஃப்ரெண்ட்ஸை ஒண்ணு சேர்த்து ஒரு நிகழ்ச்சி மாதிரி மாதம் ஒருமுறை செய்ய ஆரம்பிச்சோம். முகநூல்ல ‘Quppi’னு ஒரு பக்கத்தை ஆரம்பிச்சு அதுல பாட்டில்களை நாங்க மாத்தின விவரங்கள், வேலை, கிளீனிங்... எல்லாத்தையும் பதிவேற்றினோம்.
நாங்களே எதிர்பார்க்காத வகைல இப்ப மக்களே வாலன்டியரா வர்றாங்க. தாங்களே பாட்டில்களை கலெக்ட் பண்ணி எங்ககிட்ட கொடுத்துட்டு, அதுக்கு பதிலா ஆர்ட் ஒர்க் செய்த ஒரு பாட்டிலை வாங்கிட்டுப் போறாங்க!

எங்க ப்ராடக்ட்டை ரூ.500ல ஆரம்பிச்சு விக்கறோம். ஆனா, பாட்டில்களை சேகரிச்சு வந்து கொடுக்கறவங்ககிட்ட நாங்க காசு வாங்கறதில்ல!’’ என்னும் அபர்ணாவின் அடுத்த திட்டம், தூக்கி எறியப்படும் கூல்டிரிங்ஸ் டின்ஸ், பைப்ஸ், பிளாஸ்டிக் பொருட்களைச் சேகரித்து அவற்றை கலைப்பொருட்களாக மாற்றுவது!

ஷாலினி நியூட்டன்