ஏன் நதிநீர் இணைப்பு குறித்தே ரஜினி பேசுகிறார்..?



அதுதானே..?
இந்திய அளவில் வேலைவாய்ப்பின்மை, மதவாதம், பொருளாதாரம், விவசாயிகள்  பிரச்னை உள்ளிட்ட பல இந்தத் தேர்தலில் முக்கியமாகப்  பேசப்படுகின்றன. தமிழக அளவிலும் ஊழல், வேலைவாய்ப்பு, காவிரி,  விவசாயிகள், ஸ்டெர்லைட்... எனப் பல பிரச்னைகள் முக்கியமாகப் பேசப்படுகின்றன.  ஆனால், இவற்றை எல்லாம் தாண்டி பாஜகவின் தேர்தல் அறிக்கையில்  இருக்கும் ‘இந்திய நதிகளை இணைப்பது’ என்ற திட்டத்தை ரஜினி வரவேற்றுள்ளார்!

கடந்த வாரம் சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தவர், “எனது அரசியல் நிலைப்பாட்டை முன்பே தெரிவித்துவிட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. கமலுக்கு ஆதரவா என்று கேள்வி கேட்டு எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பைக் கெடுத்துவிடாதீர்கள்!’’ என்று சொல்லிவிட்டு, பாஜக தேர்தல் அறிக்கை குறித்து, “நதிகள் இணைந்தால் நாட்டில் வறுமை போய்விடும்.

நதிகள் இணைப்பு குறித்து பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதை வரவேற்கிறேன். நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ‘பகீரத்’ என்று பெயர் வைக்குமாறு வாஜ்பாயிடம் தெரிவித்தேன். பாஜக கூட்டணி ஆட்சி மத்தியில் அமைந்தால் முதலில் நதிகளை இணைக்க வேண்டும்!’’ என்றார்.

இப்படி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுவதுபோல் ‘நதிநீர் இணைப்பு’ குறித்து ரஜினி ஏன் சொல்கிறார்?

பலர் இது அவரது கனவுத் திட்டம் என்கிறார்கள். அப்படியா என்று தெரியாது. ஆனால், பல ஆண்டுகளாகவே இத்திட்டம் குறித்துச் சொல்லி வருகிறார்.

2002ம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்று தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என பல தமிழக அமைப்புகள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினார்கள். அப்போது தமிழக சினிமா பிரபலங்களும் நெய்வேலி நிலக்கரித் தொழிற்சாலையில் பாரதிராஜா தலைமையில் திரண்டார்கள். அந்தப்  போராட்டத்தில், ‘அவர்கள் நமக்கு நீர் கொடுக்கும் வரை மின்சாரம் கொடுக்கக்கூடாது’ என்று அனைத்து பிரபலங்களும் தெரிவித்தனர். அந்தப் போராட்டத்தில் ரஜினிகாந்த் மட்டும் கலந்துகொள்ளவில்லை. ரஜினிகாந்த்தை மேடையிலேயே பாரதிராஜா கடுமையாகச் சாடினார்.

நெய்வேலியில் நடந்த போராட்டத்திற்கு அடுத்த நாள் ரஜினிகாந்த் காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என கோரிக்கை வைத்து சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். ரஜினி இப்படி திடீரென போராட்டத்தை நடத்தியதால் பல பிரபலங்கள் நேரடியாக வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

இறுதியாக போராட்டத்தை முடித்துவிட்டு பேசிய ரஜினி, “இதுபோன்ற நீர் பிரச்னைகள் எல்லாம் தீர வேண்டும் என்றால் இந்தியா முழுவதும் உள்ள நதிகளை இணைப்பது முக்கியம். அதுபோன்ற திட்டத்தை யார் கொண்டுவந்தாலும் என் சொந்த பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் பணம் அளிக்கிறேன்!” என்றார்.இந்தியா முழுவதும் நதிகளை இணைக்கும் திட்டத்தை தன் கனவுத் திட்டமாகக் கருதியவர் ரஜினி மட்டுமல்ல. அப்போதைய பிரதமர் வாஜ்பாயும்தான்.

எனவே வாஜ்பாயிடம் நேரடியாகச் சென்று இந்தத் திட்டம் குறித்து ரஜினி பேசியும் இருந்தார். இந்தத் திட்டத்திற்கு ‘பகீரத்’ என்றும் பெயர் வைக்குமாறு வாஜ்பாயிடம் தெரிவித்துவிட்டு வந்தார். இதன் பின் இந்தத் திட்டத்தை யாரும் செயல்படுத்த முன்வரவில்லை. பலரும் ரஜினியிடம் ‘ஒரு கோடி ரூபாய் தருவதாகச் சொன்னீர்களே... இன்னும் தரவில்லையே...’ என முகத்துக்கு நேராகவே கேட்டார்கள்; இன்றும் விமர்சித்து வருகிறார்கள்.
எதற்கும் ரஜினி எந்த பதிலையும் சொல்லவில்லை. ஆனால், இப்போதும் அந்தத் திட்டத்தை நம்புகிறார்! இதற்கு உதாரணமாக சமீபத்தில் வெளியான
‘பூமராங்’ திரைப்படத்தைச் சொல்லலாம்.

இரு கிராமங்களில் ஓடும் வெவ்வேறு நதிகளை இணைப்பது போன்று அப்படத்தில் கதை அமைத்திருந்தார்கள். இப்படத்தை மனதார ரஜினி பாராட்டியிருந்தார் என்பதை நினைவுகூரலாம். ரஜினி விரும்புவது போல் இத்திட்டத்தைச் செயல்படுத்த முடியுமா என்பது இன்று வரை கேள்விக்குறியாகவே இருக்கிறது.

சுத்த ஹம்பக்... அதிகம் செலவாகும் என்பது முதல், இப்படிச் செய்வது இயற்கையை அவமதிப்பது போன்றது... ஒருவேளை இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் நாட்டின் தட்பவெப்ப நிலையே மாறிவிடும்... நிலத்தடி நீர் மட்டம் குறையும் என்பது வரை பலரும் பல கோணங்களில் தங்கள் கருத்துகளை / விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.

ஒன்று மட்டும் நிச்சயம். சரியோ தவறோ... சாத்தியமோ சாத்தியமில்லையோ... நதிநீர் இணைப்பு இந்தியாவை வளமாக்கும் என்று ரஜினி உறுதியாக நம்புகிறார். அதனாலே எப்படிப்பட்ட விமர்சனங்களைத் தன் மீது யார் வைத்தாலும் கவலையே படாமல் இத்திட்டம் குறித்து எல்லா நேரங்களிலும் உறுதியாகப் பேசி வருகிறார்!இனியும் பேசுவார் என்பதுதான் அடிக்கோடிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம்.

‘பகீரத்’ என்றால் என்ன..?

நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு ரஜினி ஏன் ‘பகீரத்’ என பெயர் வைக்கும்படி வேண்டுகோள் வைக்கிறார்..? புராணக் கதைதான் காரணம்.ஆதியில் அயோத்தி நாட்டை இசுவாகு குலத்தைச் சேர்ந்த சகரர் என்பவர் ஆண்டு வந்தார். இவருக்கு குழந்தைகள் இல்லை. எனவே இறைவனை நோக்கி தவம் இருந்தார். மகிழ்ந்த இறைவனும் சகரருக்கு குழந்தை பிறக்கும் என ஆசீர்வதித்தார்.

அதன்படி அவரது மனைவியான சுமதிக்கு 60 ஆயிரம் குழந்தைகளும், கேசினி என்ற இன்னொரு மனைவிக்கு ஒரே ஒரு குழந்தையும் பிறந்தனர்.

சில வருடங்கள் சென்றதும் அசுவமேத யாகம் செய்ய சகரர் முடிவெடுத்து குதிரை ஒன்றை எல்லா நாட்டுக்கும் அனுப்பினார். இக்குதிரையை மற்ற நாட்டைக் சேர்ந்தவர்கள் அடக்கவில்லை என்றால் சகரர், தான் நினைத்தபடி சக்கரவர்த்தி ஆகலாம். இது அக்கால வழக்கம்.

அதன்படி அவர் அனுப்பிய குதிரை திடீரென காணாமல் போனது. அது எங்கு சென்றது என்று அறிய தனது 60 ஆயிரம் மகன்களையும் அனுப்பினார்.

குதிரையைத் தேடிச் சென்றவர்கள் கபில முனிவர் வசிக்கும் குகை வாயிலில் அப்புரவி நிற்பதைக் கண்டனர். கபிலர்தான் குதிரையைப் பிடித்து வைத்திருக்கிறார் என்று நினைத்தவர்கள் உடனே அந்த முனிவரிடம் சண்டைக்குச் சென்றார்கள். கோபம் கொண்ட முனிவர் தன் தவ வலிமையால் 60 ஆயிரம் பேரையும் எரித்து சாம்பலாக்கினார்.

மகன்கள் இறந்த துக்கம் தாங்காமல் சகரர் மரணமடைந்தார். இதனையடுத்து கேசினியின் மகன் பட்டத்துக்கு வந்தார். அதன்பிறகு அவரது மகன்... இப்படியே பல நூற்றாண்டுகள் சென்ற நிலையில் திலீபனின் மகன் பகீரதன் பட்டத்துக்கு வந்தார்.அப்போது நாட்டில் கடுமையான வறட்சி நிலவியது. எதனால் இப்படி என முனிவர்களிடம் அவர் கேட்டபோது, அவரது முன்னோரான சகரரின் 60 ஆயிரம் மகன்களும் முக்தி அடையாமல் இருப்பதே காரணம் என்று தெரிவித்தார்கள்.

இதற்கு ஒரே பரிகாரம்தான். சிவபெருமானின் தலையில் இருக்கும் கங்கை, பூமிக்கு வந்து அவரது முன்னோர்கள் சாம்பலான இடத்தைச் சுத்தப்படுத்த வேண்டும். அப்போதுதான் கபிலரின் சாபம் நீங்கும்.உடனே சிவனை நோக்கி பகீரதன் கடும்தவம் செய்தார். மகிழ்ந்த ஈசனும் கங்கையை பூமிக்கு அனுப்பினார்.கங்கை நீர் பட்டதும் பகீரதனின் முன்னோர்கள் சாபத்திலிருந்து விடுபட்டு முக்தி அடைந்தனர்.

யாராலும் சாதிக்க முடியாத செயலை பகீரதன் சாதித்தார்... கங்கையை பூமிக்குக் கொண்டு வந்தார்... என்பதாலேயே விடாமுயற்சியை ‘பகீரதப் பிரயத்தனம்’ என்கிறோம்.இதைக் குறிப்பிடும் விதமாகவே இந்திய நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு ‘பகீரத்’ என ரஜினி பெயர் வைக்கச் சொல்கிறார்.லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், இந்த பகீரதனின் வழி வந்தவரே தசரதரும் அவரது புதல்வர் ராமரும் என்கிறது ராமாயணம்.