அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையில் நீங்கள் ஏன் வருகிறீர்கள்..?கிரண்பேடியை அலறவைத்த பேத்தி

வைரலாகும் வீடியோ


நோ. குடும்ப உறவுகளை அலசப் போவதில்லை. அது நியாயமும் அல்ல. செய்தியை வெறும் செய்தியாக மட்டுமே இப்பக்கங்கள் பதிவு செய்கின்றன. Reading in between linesஐ வாசகர்களே புரிந்துகொள்வார்கள் இல்லையா..?

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் பேத்தி யூடியூபில் திடீரென்று ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார் (https://www.youtube.com/watch?time_continue=1&v=3G CoUXpco6E). சமூகவலைத்தளங்களில் இப்போது இதுதான் ஹாட்.

மொபைல் போனில் அவரே பேசி பதிவு செய்த அந்த வீடியோவில் என்ன பேசியிருக்கிறார் தெரியுமா..?

``நான் கிரண் பேடியின் ஒரே பேத்தி. கிரண் நானி... (பாட்டியைத்தான் நானி என்கிறார்) அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையில் எவ்வளவோ பிரச்னைகள் வந்திருக்கின்றன. அப்போதெல்லாம், ‘நான் உங்கள் பிரச்னைகளுக்கு நடுவில் வரமாட்டேன்’ என்று சொன்னீர்களே... இப்போது மட்டும் ஏன் வருகிறீர்கள்? ஏன் என் அப்பாவையும், அவருடைய நண்பர்களையும் போலீஸை வைத்து கஷ்டப்படுத்துகிறீர்கள்?

என்னை யாரும் கடத்தவுமில்லை, கொடுமைப்படுத்தவும் இல்லை. என் அப்பாவுடன்தான் இருக்கிறேன். அவருடன் நான் சந்தோஷமாக இருப்பதை நீங்களே பாருங்கள்...” என்று அந்த வீடியோவில் கட்டிலில் அமர்ந்திருக்கும் தன் அப்பாவைக் காட்டுகிறார். தொடர்ந்து, ``அம்மா... உங்களை நினைத்தும், நானியை நினைத்தும் நான் வெட்கப்படுகிறேன். என் அப்பாவுக்கு சப்போர்ட் செய்ய நினைப்பவர்கள் இந்த வீடியோ பதிவின் கீழே கமெண்ட் செய்யலாம்!” என்றும் கூறியிருக்கிறார்.

பலரும் இதுகுறித்து தங்கள் எண்ணங்களை கமெண்ட் செய்ய... கிரண்பேடியும் தன் பங்குக்கு மறுமொழி எழுதியிருக்கிறார். ``என் பேத்தி கூறியவற்றை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொண்டு இதற்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை. அவள் எப்போதும் என் பேத்திதான். கணவனின் தந்திரமான செயல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் முழு உரிமை என் மகளுக்கு இருக்கிறது.

என் மகளை நான் எப்படி ஆதரிக்கிறேனோ அதே ஆதரவு அவளது மகளுக்கும் தேவை. இது தொடர்பான வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் இருப்பதால் தீர்ப்புக்காக நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவல்துறையினர் இதுகுறித்து விசாரிப்பதோடு, ஆய்வும் செய்யலாம்.

வீடியோ பதிவைப் பற்றி ஒன்றும் தெரியாததைப் போல அவளுக்கு முன் உட்கார்ந்து கொண்டிருக்கும் தந்திரச் செயல்களை அவளின் தந்தை நிறுத்த வேண்டும். (இதற்கான ஆவணங்கள் நிறைய இருக்கின்றன. அதனால் இதுகுறித்துக் கூற வேண்டிய முழுப் பொறுப்பில் இருக்கிறேன்.)

இந்த நடவடிக்கை எங்கள் குடும்பத்தை பாதுகாப்பதோடு, நாங்கள் இழந்த சந்தோஷங்களையும் மீண்டும் மீட்டுத் தரும். இன்று அந்த வீடியோ பதிவை நீக்கும்படி நீதிமன்றம் அவளிடம் கேட்டுக்கொண்டிருப்பதோடு வழக்கறிஞர் மூலம் இது தொடர்பான நோட்டீஸையும் யூ டியூபில் வெளியிடும்படி கூறியிருக்கிறது.

இது இப்போதைய நிலவரம்... காவலில் வைத்திருந்த விவகாரம் அடுத்த மாதம் நீதிமன்றத்துக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்
படுகிறது!” இந்தச் செய்தியை நீங்கள் படிக்கும்போது அந்த வீடியோவும் அதன்கீழ் வெளியான கமெண்ட்ஸும் யூ டியூப்பில் இல்லாமலும் போகலாம்.   

காம்ஸ் பாப்பா