தேர்தல் 2019-எந்த வார்டில் எந்தப் பிரச்னை என்றுகூட ஞாபகத்தில் இருந்தே சொல்ல முடியும்!கமீலா நாசர் மத்திய சென்னை

தொகுதியின் பிரச்னைகள் என்னென்ன?

குடியிருப்புகளும், கூவமும் ஒன்றாக இருக்கிறது. அரசின் மெத்தனப்போக்கே பிரதான காரணம். நாங்களே சில முகத்துவாரங்களைச் சுத்தம் செய்து வழிகளை மீட்டோம். கழிவுகள் அடைப்பு பெரும் பிரச்னை. வகையான நல்ல ரோடுகள் குறைவு. முக்கியமான சாலைகளை நன்றாகச் செப்பனிட்டுவிட்டு, உள்ளுக்குள் பயணப்படும் சாலைகள் போக்குவரத்துக்கே தகுதியற்றவையாக இருக்கிறது.

பெண்களுக்குத் தண்ணீர் சேகரிப்பதும் பெரும் அவதியாகி விட்டது. இரண்டு குடம் தண்ணீர் சேகரிக்க பொழுது ஆகிவிடுகிறது. நான் ‘மக்கள் நீதி மய்யத்’தின் சென்னை மண்டலப் பொறுப்பாளராகப் பணிபுரிவதால் எனக்கு இங்கே சென்னை முழுவதுமே பழக்கமாகிவிட்டது. மழைநீர் சேகரிப்பு கண்டிப்பாகப் பின்பற்றப்படவில்லை. ஒரே வேலையைச் செய்யும் ஆணுக்கும், பெண்ணுக்கும் சம்பளத்தில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இவையெல்லாம் களையப்பட வேண்டும்.  

உங்கள் பலம் என எதைக் கருதுவீர்கள்?

எந்த வார்டில் எந்தப் பிரச்னை என்றுகூட ஞாபகத்தில் இருந்தே சொல்ல முடியும். எப்போது சமூகத்தில் காணப்படும் தவறுகளுக்கு எதிராகக் கோபம் கொள்ள முடிகிறதோ, அப்போதே பெண்கள் அரசியலுக்கு வந்துவிட்டதாகத்தான் அர்த்தம். நான் ஒரு சைக்காலஜிஸ்ட், மூன்று பிள்ளைகளுக்குத் தாய், தணிக்கைக்குழுவில் உறுப்பினராக இருந்த தகுதி, நல்ல படங்களைத் தயாரித்து, அது நஷ்டமே என்றாலும் ஏற்றுக்கொண்டவள் என இந்தச் சமூகத்தோடு எப்போதும் தொடர்பில் இருக்கிறேன்.

தேர்தலை எதிர்கொள்ள கட்சி முழு அளவில் தயாராகி விட்டதா?

எங்கள் கூட்டமைப்பின் தலைவர் கமல்ஹாசன் சரியாக வழிநடத்துகிறார். எந்தத் தொகுதியில் நிற்கிறீர்கள் என என்னைக் கேட்டபோது நான் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தைச் செலுத்தியிருக்கவில்லை. பின்னர் விருப்ப மனுவாக இட்டு, மத்திய சென்னையில் போட்டியிடுகிறேன். கட்சி ஆரம்பித்து 13 மாதங்களில் ஒரு தேர்தல் வந்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்.

கட்சி கட்டமைப்பை சீரமைக்கத் தீவிரமாக இருந்த நேரத்தில் இந்தத் தேர்தல் வந்துவிட்டது. அதற்காக பொறுப்புகளைத் தட்டிக்கழிக்க முடியாது. நாங்கள் எங்கள் முழு உழைப்பைக் காட்டியிருக்கிறோம். தலைவர் தேவையான பொழுது எங்களைச் சந்திக்கிறார். பரஸ்பரம் எல்லோரும் உரையாடிக்கொள்கிறோம். எல்லாம் சுமுகமாக
நடக்கிறது.                              

நா.கதிர்வேலன்