COFFEE TABLE



தில்லி 90 எம்.எல்!

ஓவியாவின் ‘90 எம்.எல்’ படத்தில் ஹீரோயினின் தோழியாக வந்தவர் மசூம் சங்கர். தில்லி பொண்ணு. பாலிவுட்டில் உதவி இயக்குநராக கேரியரைத் தொடங்கி நடிகையானவர். சமீபத்தில் புது போட்டோ ஷூட் ஒன்றை செய்ததோடு அத்தனை க்ளிக்குகளையும் தனது சமூக வலைத்தளப் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார். ஆயிரக்கணக்கில் லைக்குகளும் ஹார்ட்டின்களும் பறக்கின்றன.

ஸ்வீட் பேபி

இன்ஸ்டாவில் 37 லட்சம் ஃபாலோயர்களுடன் அசத்துகிறார் பிரியங்கா சோப்ரா. வேறு ஒருவருக்கு இத்தனை லட்சம் ஃபாலோயர்கள் இருந்திருந்தால் சோப்பு முதல் சீப்பு வரை தினம் ஒரு விளம்பர போஸ்ட் போட்டு பணத்தை அள்ளியிருப்பார்கள். ஆனால், பிரியங்கா ஸ்வீட் பேபி. ரொமான்ஸ் படங்களாக பதிவிட்டு, நம்மளையும் குஷிப்படுத்துகிறார். சமீபத்தில் அவர் மியாமி கடற்கரையில் நிக்குடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களைத் தட்டிவிட, லட்சக்கணக்கில் லைக்குகள் குவிகின்றன.

ஐபேட் ஏர்

இதோ டிஜிட்டல் வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த ‘ஐபேட் ஏர்’ வந்துவிட்டது. ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஐபேட் இது. மிக நேர்த்தியாக இதை வடிவமைத்திருக்கிறார்கள். 10.5 இன்ச் ரெட்டினா டிஸ்பிளே, ஒரு நாள் முழுக்க நிற்கும் பேட்டரி திறன், 8 எம்பி பின்புற கேமரா, 7 எம்பி ஃபேஸ் டைம் கேமரா என அசத்துகிறது இந்த ஐபேட். விலை ரூ.44,900.

டீன்ஏஜை குறிவைக்கும் காற்று மாசுபாடு

‘‘காற்று மாசுபாடு காரணமாக இளம் பருவத்தினருக்குக் காதில் ஒலி கேட்பது, தீவிரமான பயம் போன்ற உளவியல் பிரச்னைகளும் நோய்களும் வருகின்றன...’’ என்று பீதியைக் கிளப்புகிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.‘‘பெரும்பாலும் வாகனப் புகையிலிருந்து வெளியேறும் நைட்ரஜன் டையாக்சைட், நைட்ரஜன் ஆக்சைட் போன்ற நச்சுக்கள்தான் அதிகமாக காற்றை மாசுபடுத்துகின்றன...’’ என்கிறது அந்த ஆய்வு.‘‘நகரத்தில் வாழும் இளம் பருவத்தினரில் சுமார் 30 சதவீதம் பேராவது காற்று மாசுபாட்டால் உளவியல் நோய்களுக்கு ஆளாகியிருப்பார்கள்...’’ என்கின்றனர் நிபுணர்கள்.

பாலாடைக் கட்டி சுவர்

அமெரிக்காவைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் காஸிமோ. பாலாடைக்கட்டிகளைக் கொண்டு விதவிதமான கலைப்பொருட்களை உருவாக்குவதில் வல்லவர்.
சமீபத்தில் அவர் 8 ஆயிரம் ராட்சத பாலாடைக்கட்டிகளால் ஒரு தடுப்புச் சுவரை எழுப்பியுள்ளார். அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் வீற்றிருக்கும் அந்தச் சுவர் டொனால்ட் டிரம்பின் தடுப்புச் சுவர் திட்டத்தைக் கேலி செய்வதைப் போல அமைந்துள்ளது. அப்புறமென்ன... வைரலாகிவிட்டார் காஸிமோ.

குங்குமம் டீம்