வேதனைகளைத் தொடர்ந்த விருது!



தமிழ் சினிமாவை மிஞ்சும் திருப்பங்களுடனும் சென்ட்டிமென்ட்களுடனும் இருக்கிறது பாட்ரிசியா நாராயணின் வெற்றிக்கதை. ‘ஃபிக்கி’ பெண் தொழில் முனைவோருக்கான இந்த வருட விருதை வென்ற பாட்ரிசியா, ‘சந்தீபா ஓட்டல் குழும’த்தின் உரிமையாளர். மெரினா கடற்கரையில் தள்ளுவண்டியில் சிறியதாக ஓட்டல் பிசினஸ் ஆரம்பித்தவர், இன்று லட்சங்கள் புரளும் ரெஸ்டாரன்ட்களுக்கு ஓனரம்மா! தமிழ் சினிமாவில் ஒரே பாடலில் மாறிப்போகிற மாதிரி ஒரே இரவில் சாத்தியமாகவில்லை பாட்ரிசியாவின் இந்த வெற்றி... அதன் பின்னணியில் உள்ள ரணங்களும் வலிகளும் எதிரிகள்கூட அனுபவிக்கக்கூடாதவை!

கல்லும் முள்ளுமான பாதையைக் கடந்து, இலக்கைத் தொட்ட தன் வெற்றிப் பயணத்தைப் பற்றிப் பேசுகிறார் பாட்ரிசியா. ‘‘கட்டுப்பாடான கிறிஸ்தவ குடும்பத்துல பிறந்தவள். சின்ன வயசுலேர்ந்தே சமையல் ரொம்பப் பிடிக்கும். அம்மா, அப்பா ரெண்டு பேருக்கும் கவர்மென்ட் வேலைங்கிறதால பிசினஸ் ஐடியா எனக்கு வந்ததே இல்லை. கல்யாணம்ங்கிற சம்பவம் வாழ்க்கையை அப்படியே புரட்டிப்போட்டது.

கணவர் நாராயண், பிராமணர். ரெண்டு வீட்டு எதிர்ப்பையும் மீறி பதிவுத்திருமணம் பண்ணிக்கிட்டோம். முதல் குழந்தை வயித்துல வந்த சந்தோஷத்தைக்கூட அனுபவிக்க முடியாத அளவுக்கு கணவரோட குடி, போதை மருந்துப் பழக்கம் பத்தின உண்மை இடி மாதிரி விழுந்தது. அடி, உதை, சிகரெட் சூடுனு எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டேன். வாழ்வா, சாவாங்கிற கட்டம்... நான் செய்த தவறுக்காக வயித்துல உள்ள குழந்தை பாதிக்கப்படறதைத் தாங்கிக்க முடியலை.

அத்தனை நாள் மறைச்ச எல்லா உண்மைகளையும் பிறந்த வீட்ல சொல்லி, அங்கேயே தஞ்சம் புகுந்தேன். குழந்தை பிறந்த பிறகாவது கணவர் மாறியிருப்பார்னு நினைச்சு, 2 மாசம் கழிச்சு மறுபடி அவரைத் தேடிப் போனேன். பட்டினி கிடக்க முடியாம, இந்த முறை அவரையும் சேர்த்து அம்மா வீட்டுக்கே கூட்டிட்டு வந்தேன்.

எனக்கு யாரையும் சார்ந்திருக்கப் பிடிக்கலை. எப்பவோ கத்துக்கிட்ட ஊறுகாய், ஜூஸ் பிசினஸை ஆரம்பிச்சேன். நல்லா போச்சு. அப்பாவோட நண்பர் ஊனமுற்ற பிள்ளைங்களுக்காக ஒரு ஸ்கூல் நடத்திட்டிருந்தார். ஊனமுற்ற பிள்ளைங்க சிலருக்கு வேலைவாய்ப்பு தர்றதா இருந்தா, தன்கிட்ட உள்ள ஒரு தள்ளுவண்டியை இலவசமா கொடுக்கிறதா சொன்னார்.

ஏதோ ஒரு நம்பிக்கைல சரினு சொல்லிட்டு, அண்ணா சதுக்கம் பக்கத்துல தள்ளுவண்டில கடையை ஆரம்பிச்சேன். பஜ்ஜி, போண்டா, சமோசா, காபி, டீயெல்லாம் விற்கிறதா திட்டம். ஒரு கப் காபியோட விலை வெறும் 50 பைசா. ஆனா, வியாபாரமே நடக்காம நான் அழுத நாட்கள் எத்தனையோ... ‘ஒரு கப் காபி வித்தாலே வெற்றிதான். சோர்ந்து போகாதே’ன்னு அம்மா கொடுத்த அட்வைஸ்ல தொடர்ந்து போராடினேன். அம்மா வாக்கு பொய்க்கலை. மெல்ல மெல்ல வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பிச்சது. எப்படியும் மேல எழுந்து வந்துடுவேன்கிற நம்பிக்கையும் வந்தது.

ராத்திரி, பகல் பார்க்காம உழைச்சேன். டீ போடறதுலேர்ந்து, கிளாஸ் கழுவறது வரை எதையும் தயக்கமில்லாம நானே பண்ணினேன். இன்னொரு பக்கம் போதைப் பழக்கத்துலேர்ந்து கணவரை மீட்கறதுக்கான முயற்சிகள்...

என் உழைப்பைப் பார்த்துட்டு, ஸ்லம் கிளியரன்ஸ் போர்ட் கேன்டீனை நடத்தற வாய்ப்பு வந்தது. அதுலேர்ந்து பேங்க் ஆஃப் மதுரையோட கேன்டீன்... படிப்படியா முன்னேறிக்கிட்டிருந்த நேரம்... ஒருநாள் வேலை பார்க்கிற இடத்துக்கே வந்து என்கூட சண்டை போட்டார் கணவர். அவமானத்துல கூனிக்குறுகிப் போனேன்.

ஏதோ ஒரு வேகத்துல உத்தண்டி போற பஸ்ல ஏறினேன். நேஷனல் போர்ட் மேனேஜ்மென்ட்ல கேட்டரிங் பண்றதுக்கு ஆள் தேடிட்டிருக்கிறதா வந்த சேதியைக் கேள்விப்பட்டுப் போனேன். அங்க பொறுப்புல இருந்த ஐ.ஏ.எஸ் ஆபீசரை சந்திச்சேன். அவங்களோட கிச்சனையும் அங்க இருந்த பாத்திரங்களையும் மெஷின்களையும் காட்டி, ‘உன்னால எல்லாம் முடியுமா’னு கேட்டுத் திருப்பி அனுப்பினாங்க. எவ்வளவோ சொல்லியும் அவங்க ரிஸ்க் எடுக்கத் தயாரா இல்லை. வேதனையோட வீட்டுக்கு வந்து, மறுபடி என் வேலைகளைப் பார்த்துக்கிட்டிருந்தேன். முடியாதுனு சொல்லியனுப்பின அதே இடத்துலேர்ந்து எனக்கு அழைப்பு. கிட்டத்தட்ட 700 பேருக்கான சமையல். குழந்தைங்களை எல்லாம் அம்மா - அப்பா பொறுப்புல விட்டுட்டு, 24 மணி நேரமும் வேலையைப் பத்தின சிந்தனைலயே இருந்தேன்.

பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் பலன் கிடைக்கத் தொடங்கின நேரம். கணவரைத் திருத்தற என் முயற்சிகள் தோத்துப் போய், ஒரு கட்டத்துல அவர்கிட்டருந்து விவாகரத்து வாங்கினேன். அதையடுத்த கொஞ்ச நாள்ல அவர் இறந்துட்டார்...

பிரச்னைகளைக் கடந்து வாழ்க்கை சுமுகமா போயிட்டிருந்தது. சங்கீதா ரெஸ்டாரன்ட்ல பார்ட்னராகிற வாய்ப்பு வந்தது. என் மகனுக்கு சொந்தமா ரெஸ்டாரன்ட் ஆரம்பிச்சு, எங்க பிராண்டை பிரபலப்படுத்தணும்னு ஆசை. எல்லாத்துக்கும் நேரமும் வாய்ப்பும் கனிஞ்சு வந்தப்ப, யார் கண் பட்டதோ...’’ & நீண்ட பயணத்தைச் சொல்லி நிறுத்துகிற பாட்ரிசியாவுக்கு அடுத்த சில நிமிடங்களுக்கு எதையும் பேச முடியாதபடி துக்கம் தொண்டையை அடைக்கிறது. தேற்றிக்கொண்டு தொடர்ந்தாலும், வழிகிற கண்ணீரை நிறுத்த முடியவில்லை.

‘‘என் மகள் பிரதீபா சான்ட்ராவுக்கு கண் நிறைய கல்யாணம் பண்ணிக் கொடுத்தேன். ஒரே மாசத்துல ஒரு ஆக்சிடென்ட்ல அவளும் அவ கணவரும் இறந்துட்டாங்க. கிட்டத்தட்ட ரெண்டரை வருஷம் நான் நானா இல்லை. நான் பாதில விட்ட பிசினஸை என் மகன் கைல எடுத்தான். என் மகள் நினைவா ‘சந்தீபா’ங்கிற பேர்ல முதல் ரெஸ்டாரன்ட் ஆரம்பிச்சான். அவனுக்கு உதவியா இருக்கிறதுக்காக என்னை நானே தேத்திக்கிட்டு, மறுபடி எழுந்தேன். இதோ ரெண்டு, மூணு கிளைகளோட பிசினஸ் நல்லா போயிட்டிருக்கு. என்னோட 30 வருஷப் போராட்டத்துக்குப் பலனா, இதோ ‘ஃபிக்கி அவார்ட்’. அடுத்து எங்க பிராண்டை பிரபலப்படுத்தறதுதான் லட்சியம்...’’ என்கிறவர், ஓட்டல் பிசினஸ் தவிர, செயற்கை மலர்களுக்கான கடையையும், தன் மகள் நினைவாக அவரது உயிரைப் பறித்த அதே ஏரியாவில் இலவச ஆம்புலன்ஸ் சேவையையும் கூட நடத்துகிறார்.

‘‘அச்சிறுப்பாக்கம்கிட்ட என் மகள் வந்த கார் ஆக்சிடென்ட் ஆயிருக்கு. உயிர் இருக்கா, இல்லையான்னு கூடப் பார்க்காம, ‘செத்தவங்களை ஆம்புலன்ஸ்ல ஏத்த மாட்டோம்’னு இரக்கமில்லாம சொல்லிட்டுப் போயிருக்காங்க ஆம்புலன்ஸ் ஆபரேட்டர்கள். கடைசில யாரோ ஒருத்தர் தன் காரோட டிக்கில, ரெண்டு பேர் உடம்பையும் மடிச்சுப் போட்டுக்கொண்டு வந்து இறக்கின அந்தக் காட்சியை இப்ப நினைச்சாலும் பதறுது.

இதுக்கு மேல அனுபவிக்க துயரங்களே இல்லைங்கிற அளவுக்கு எத்தனையோ கஷ்டங்களைப் பார்த்த பிறகும் எனக்குக் கடவுள் மேல கோபம் வரலை. என் மகளையே என்கிட்டருந்து பறிச்சுக்கிட்டதையும் சகிச்சுக்கிட்டேன். ஆனா, கடைசியா நான் பார்த்த அந்தக் காட்சியைத்தான் ஜீரணிக்க முடியலை. அந்தக் கேள்விக்கு மட்டும் இன்னமும் கடவுள்கிட்டருந்து எனக்கு விடை கிடைக்கலை...’’ - மறுபடி ஊற்றெடுக்கிறது கண்ணீர். அழுகை ஒன்றுதான் இப்போதைக்கு அவருக்கான ஆறுதல்!

- ஆர்.வைதேகி