சதுரங்க ராஜா 61!



இந்தியாவின் 61வது கிராண்ட் மாஸ்டராக மிளிர்கிறார் இனியன். செஸ் விளையாட்டில் GM பட்டத்தை வென்று தமிழகம் திரும்பியிருக்கும் ஈரோடு மாணவர். பதினாறு வயதில் இந்தப் பட்டத்தை தன்வசப்படுத்தியிருக்கும் இவரை முதல் கிராண்ட் மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த் டுவிட்டரில் பாராட்ட... நெகிழ்வும், துள்ளலுமாக காட்சியளிக்கிறார் இந்த சுட்டி!

‘‘அஞ்சு வயசுல இருந்தே செஸ் விளையாடறேன். ஆரம்பத்துல அப்பா சில விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தார். அப்புறம், பயிற்சியாளர்கள் பல நுணுக்கங்களைக் கத்துக் கொடுத்தாங்க. இதெல்லாம்தான் இப்ப என்னை கிராண்ட் மாஸ்டரா உருவாக்கியிருக்கு.

இந்தத் தருணம் ரொம்ப சந்தோஷமா இருக்கு. கடுமையான பயிற்சிக்குப்பிறகு பட்டத்தை வென்றிருக்கேன். ஆனா, இன்னும் உலகளவுல சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு...’’ உற்சாகமாக இனியன் சொல்ல... தன் மகனை அணைத்தபடி பேசத் தொடங்கினார் பன்னீர்செல்வம்.

‘‘எங்களுக்குச் சொந்த ஊர் பெருந்துறை பக்கம். இனியனின் படிப்புக்காக ஈரோடுல செட்டிலானோம். நான் நெடுஞ்சாலைத் துறைல வேலை பார்க்கறேன். மனைவி சரண்யா ஆரம்பத்துல வேலைக்குப் போனாங்க. இப்ப இனியனுக்காகவும், மகள் இனிய கீர்த்திக்காகவும் வேலையை விட்டுட்டு வீட்ல இருக்காங்க.

எனக்கு ஸ்போர்ட்ஸ்னா ரொம்பப் பிடிக்கும். கிரிக்கெட்ல மாவட்ட அணிக்காக விளையாடியிருக்கேன். அப்புறம், அண்டர் 13 மற்றும் அண்டர் 15க்கு மாவட்ட கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரா இருந்தேன். என் குழந்தைகளை ஏதாவது ஒரு விளையாட்டுல சிறப்பா கொண்டு வரணும்னு ஆசைப்பட்டேன். தனிநபர் சார்ந்த விளையாட்டா இருந்தா நல்லா வரமுடியும்னு தோணுச்சு. ஸோ, இனியனை டென்னிஸ் அல்லது செஸ் ஆட வைக்கலாம்னு நினைச்சேன்.

அவனுக்கு செஸ் பிடிச்சிருந்தது. ஈசியாவும் ஃபீல் பண்ணினான். தொடக்கத்துல நான் கற்றுக் கொடுத்ததை கற்பூரம் மாதிரி பிடிச்சுக்கிட்டான். இதனால அந்தப் பக்கமே அவன் கவனத்தைத் திருப்பும் விதமா ஒரு அகடமில சேர்த்தோம்.அண்டர் 7ல ஈரோடு மாவட்ட அளவுல முதலாவதா வந்தான். அதே பிரிவுல மாநில அளவுலயும், தேசிய அளவுலயும் வெள்ளிப் பதக்கங்கள் வாங்கினான்.

அப்புறம், அண்டர் 8ல ஆசியா, காமன்வெல்த், உலக சாம்பியன்ஷிப் போட்டிகள்ல இந்தியா சார்பாக கலந்துக்கிட்டான். ஆசியாவுல நான்காவதாவும், காமன்வெல்த்ல வெள்ளியும், உலக சாம்பியன்ஷிப்ல ஐந்தாவது இடமும் கிடைச்சது.

இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டி ‘டை’யில முடிஞ்சது. ஆனா, புள்ளிகள் அடிப்படைல இனியனை ஐந்தாவதா அறிவிச்சாங்க. உலக அளவுல இவன் வெண்கலப் பதக்கம் வரை போனது பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது...’’ என பன்னீர்செல்வம் புன்னகைக்க, மலர்ச்சியுடன் பேசத் தொடங்கினார் இனியனின் தாய் சரண்யா.

‘‘ஜம்முல நடந்த அண்டர் 11ல தங்கமும், இலங்கைல நடந்த அண்டர் 14ல தங்கமும் வாங்கினான். தொடர்ந்து, அண்டர் 15ல தேசியளவுல இரண்டு தங்கப் பதக்கமும், இரண்டு வெள்ளியும், ஒரு வெண்கலமும் அடிச்சான். மாநில அளவுல ஆறு தங்கமும், மூணு வெள்ளியும் வாங்கினான்.
பிறகு, அண்டர் 16க்கான ஆசிய சப் ஜூனியர் போட்டி மங்கோலியாவுல நடந்துச்சு. அதுல வெள்ளிப் பதக்கம் வாங்கினான். அப்ப இவனுக்கு பதினான்கு வயசுதான். அவன் கூட போய் அவனை கவனிச்சுக்கிறது மட்டும்தான் என் வேலை. இதனால பல நேரங்கள்ல உறவினர்கள் வீட்டு நல்லது கெட்டதுக்குக் கூட போக முடியாமப் போயிருக்கு.

இதனால பலருக்கு மனச்சங்கடம். ஆனா, போகப் போக இனியனோட விளையாட்டுத் திறமை அவங்களுக்குப் புரிஞ்சது. இப்ப எந்தப் போட்டிக்கு அவன் கிளம்பினாலும் வாழ்த்தி அனுப்பறாங்க..!’’ சந்தோஷத்துடன் தன் மகனை சரண்யா பார்க்க... நம் பக்கம் திரும்பினார் பன்னீர்செல்வம்.
‘‘2013ல விஸ்வநாதன் ஆனந்த், கார்ல்சன் இடையிலான செஸ் போட்டி சென்னைல நடந்தது. அப்ப தமிழக அரசு இதனுடன் சேர்த்து ஒரு செஸ் போட்டித் தொடர் நடத்துச்சு.

அப்ப இனியனுக்கு பதினோரு வயசு. அதுல ஓப்பன் சாம்பியன்ஷிப்ல கலந்துக்கிட்டான். இந்தியாவிலிருந்து 450 வீரர்கள். இதுல இனியன் சாம்பியன்ஷிப் வாங்கினான்.இதுக்குப் பிறகுதான் இவனை இன்டர்நேஷனல் மாஸ்டர் ஆகவும், கிராண்ட்மாஸ்டர் ஆகவும் பயிற்சி கொடுக்க தீர்மானிச்சோம்.

முதல்ல IMனு சொல்ற இன்டர்நேஷனல் மாஸ்டர் ஆகணும். இதுக்கு சில நிபந்தனைகள் இருக்கு. தவிர, 2400 புள்ளிகளைக் கடக்கணும். இந்தப் பட்டத்தைப் பெற்றதும்தான் GMனு சொல்லப்படுற கிராண்ட்மாஸ்டர் பட்டத்துக்கான போட்டிக்குப் போகமுடியும்.எல்லாமே ஓப்பன் போட்டிகள்தான். எந்த வயசுக்காரர்களும் கலந்துக்கலாம். 2016ல பயிற்சியைத் ெதாடங்கினோம். 2017ல அந்தப் புள்ளிகளையும், நிபந்தனைகளையும் கடந்து இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டத்தைப் பெற்றான்!

கிராண்ட்மாஸ்டர் போட்டிக்கும் இதேபோல நிபந்தனைகள். கடைசியா, பாரிஸ்ல நடந்த போட்டில உக்ரைன் கிராண்ட்மாஸ்டர் செர்ஜி ஃபெடோர்சுக்கை ஜெயிச்சு கிராண்ட்மாஸ்டர் பட்டம் வாங்கினான்!இப்ப, தமிழக அரசு பாராட்டி பரிசு கொடுத்திருக்காங்க. இதுக்கு நாங்க மட்டும் காரணமில்ல. ஆரம்பத்துல ட்ரைனிங் கொடுத்த பயிற்சியாளர்களும், பிறகு உலகளவுல போகக் காரணமாக இருந்த பயிற்சியாளர் விஸ்வேஸ்வரன் சாரும், எப்பவும் ஊக்கப்படுத்துற இனியனின் பள்ளியான இந்தியன் பப்ளிக் ஸ்கூலும்தான் முக்கியமான காரணங்கள்.

தவிர, எங்களுக்கு ஸ்பான்ஸர்ஷிப் அளிச்ச ‘ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷன்’ அமைப்புக்கு நாங்க நிறைய நன்றிக் கடன் பட்டிருக்கோம். ஏன்னா, இந்தியா சார்பா விளையாடினா அவங்களே எல்லா செலவுகளையும் பார்த்துப்பாங்க.

ஆனா, IM, GM ஆக உலகம் முழுவதும் பல போட்டிகள்ல கலந்துக்கணும். அதுக்கெல்லாம் நம்ம செலவுலதான் போகணும். இதுக்கு, இந்த மூணு வருஷத்துல முப்பது லட்ச ரூபாய் வரை எங்களுக்கு நிதியுதவி செய்தது ‘ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷன்’தான். இனி வரும் போட்டிகள்ல கலந்துக்க தமிழக அரசுகிட்ட உதவி கேட்டு கோரிக்கை வைச்சிருக்கோம். இன்னும் நிறைய சாதிப்பான்னு நாங்க எல்லாரும் நம்பறோம்...’’ மகனைப் பார்த்து பெருமையுடன் சொல்கிறார் பன்னீர்செல்வம்!              

பேராச்சி கண்ணன்