பகவான்-21 புதிய மனிதன்



“மரணத்தை வரவேற்போம்...” என்று ஓஷோ சொன்னதுமே, தலையில் ஆணிவைத்து அடித்ததைப் போல உணர்ந்தார் ஷீலா.அவருடைய அமெரிக்கக் காதலர் மார்க்குக்கு அக்காலத்தில் குணப்படுத்த முடியாத கேன்சர் வகை நோய். எப்போது வேண்டுமானாலும் எமனின் பாசக்கயிறு உங்கள் கழுத்தில் வீசப்படலாம் என்று மருத்துவர்கள் மார்க்கை எச்சரித்திருந்தார்கள்.

அவரது தலைக்கு மேலே மரணம் கயிற்றில் கட்டப்பட்ட கத்தியாய் தொங்கிக் கொண்டிருந்தது. கயிறு எப்போது அறுந்து, கத்தி தலையில் பாயும் என்பது தெரியாமல் வேதனையில் வாடிக் கொண்டிருந்தார். எனவேதான், ஷீலாவின் காதலையும் ஆரம்பத்தில் புறக்கணித்தார்.காதலுக்குத்தான் கண்ணில்லையே?

எப்படியோ மார்க்கும், ஷீலாவும் உயிருக்குயிரான காதலர்கள் ஆனார்கள். அதன்பிறகு காதலனின் மரணபீதி, காதலிக்கும் தொற்றிக் கொண்டது.
இத்தகைய சூழலில்தான் ஓஷோவோடு ஷீலாவுக்கு நல்ல அறிமுகம் கிடைக்க, மரணம் குறித்த தன்னுடைய சந்தேகங்களுக்கு விளக்கங்களைக் கேட்டுக் கொண்டார்.

“பிறப்பைப் போலவே மரணமும் மனித வாழ்க்கையில் ஒரு நிகழ்வு. மக்கள் மரணத்தைப் பற்றி நினைக்கவே விரும்புவது இல்லை. நடக்கப்போகிற ஓர் உண்மையை, நடக்கவே நடக்காது என்று போலியாகவேனும் நம்புவது எப்படிப்பட்ட முட்டாள்தனம்?

பொதுவாக மனிதர்களுக்கு அவர்களது மரணம் எப்போது என்று தெரியாது. உன் காதலனுக்கு அது முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. அவ்வளவுதான் வித்தியாசம். மரணத்தை மகிழ்ச்சியோடு வரவேற்க அவனைத் தயார்படுத்து!” என்று ஷீலாவுக்கு அட்வைஸ் செய்தார் ஓஷோ.
பகவான் சொன்னது ஷீலாவின் மனதுக்கு ஆறுதலாக இருந்தது. மரணம் மட்டுமே தங்களது காதலைப் பிரித்துவிட முடியாது என்பதைப் புரிந்துகொண்டார்.

“சுவாமி, எனக்கு மரணத்தைப் பற்றி புரியவைத்ததைப் போல என் காதலரையும் உணரச் செய்யுங்கள்...” என்று அவரிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்டார்.புன்னகையோடு அதற்கு சம்மதித்தார் ஓஷோ.

உடனடியாக அமெரிக்காவுக்கு தந்தி பறந்தது. இந்தக் காலத்தைப் போல நினைத்த
வுடன் அங்கிருந்து இங்கு பறந்து வந்துவிட முடியாதே?
மார்க், பம்பாய்க்கு வருவதற்கு பதினைந்து நாட்கள் ஆனது.

அன்றே ஓஷோவைச் சந்திக்க மார்க் - ஷீலா காதலர்களுக்கு அப்பாயின்ட்மென்ட் வழங்கப்பட்டது.மரணம் குறித்த ஓஷோவின் போதனைகளையெல்லாம் மார்க் அமைதியாகக் கேட்டுக் கொண்டார். அவரது பேச்சின் போது குறுக்கிட்டு சந்தேகமோ, விளக்கமோ கேட்காமல் அமைதியாக இருந்தார்.“அடுத்து ஒரு பத்து நாட்களுக்கு தியான முகாம் நடைபெற இருக்கிறது. நீங்கள் இருவரும் தவறாமல் பங்குகொள்ள வேண்டும்...” என்று அவர்களிடம் ஓஷோ கேட்டுக் கொண்டார்.

முகாமின் முதல் நாள் நிகழ்வுகள் அமெரிக்கரான மார்க்குக்கும், கிட்டத்தட்ட அமெரிக்கராகிவிட்ட ஷீலாவுக்கும் வினோதமாக இருந்தது.
எனினும் வழக்கமான மதச் சம்பிரதாயங்களற்ற புதிய சன்னியாசிகள் கூட்டத்தின் மத்தியில் நிலவிய சமத்துவமான நட்புறவு அவர்களைக் கவர்ந்தது.
முகாமின் இரண்டாம் நாள் ஷீலாவையும், மார்க்கையும் தன்னுடைய கூடாரத்துக்கு வெளியே சந்தித்தார். அவரைச் சுற்றி நிறைய வெளிநாட்டு சன்னியாசிகள் இருந்தார்கள்.

பொதுவாக பகவானிடம் சன்னியாசம் கேட்டு வருபவர்களுக்கு உடனே வழங்கிவிட மாட்டார். அது அவர்களுக்குத் தேவையா என்பதை ஒன்றுக்கு நான்கு முறை உறுதிப்படுத்திக்கொண்டே செய்வார்.ஆனால் -ஷீலாவைப் பொறுத்தவரை பகவானே முடிவெடுத்துவிட்டார்.“ஷீலா! உனக்கு என்ன பெயர் வைக்க வேண்டும்?” என்று கேட்டவாறே, மணிமாலையை அவரது கழுத்தில் போட்டார்.

அந்தக் கணம் வரை சன்னியாசியாகும் எண்ணம் ஷீலாவுக்கு அறவே இல்லை. அவருக்கு பகவான் தன்னுடைய மாஸ்டர் என்கிற எண்ணம் மட்டுமே இருந்தது. திடீரென்று பகவான் தன்னை சன்னியாசியாக்குவார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. எனினும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார்.“சுவாமி, உங்களுக்கு என்ன பெயர் பிடிக்குமோ அதையே வையுங்கள்…”“எனக்குப் பிடித்த பெயரா?” என்று சிரித்தார் ஓஷோ.

“ஷீலா என்றால் வலிமையானவள் என்று பொருள். வலிமை மட்டுமல்ல. உன் வாழ்க்கையில் ஆனந்தமும் நிலைத்திருக்க வேண்டும். எனவே, இன்று முதல் நீ ஆனந்த் ஷீலா. உன்னை எல்லோரும் மா ஆனந்த் ஷீலா என்று அழைப்பார்கள்!” என்று கூறிவிட்டு, மார்க் பக்கமாகத் திரும்பினார்.
இன்னொரு மணிமாலையை எடுத்து மார்க்கின் கழுத்தில் இட முயற்சித்தார்.

சட்டென்று மார்க் பதற்றப்பட்டு, “நோ... நோ...” என்று மறுத்தார்.“பகவான் உன்னுடைய நலனுக்காகத்தான் சன்னியாசம் கொடுக்கிறார் மார்க். ஏற்றுக்கொள்...” என்று ஷீலாவும் வற்புறுத்தினார்.ஓஷோ, ஷீலாவை நோக்கி, “விடு. இரண்டு நாள் கழித்து அவனே ஏற்றுக்கொள்வான்!” என்று தீர்க்கதரிசனம் போலச் சொன்னார்.அதுதான் நடந்தது.மார்க்கின் மனப்போக்கில் பகவான் என்ன மேஜிக் செய்தாரோ தெரியவில்லை.
அதுவேதான் நடந்தது.மார்க்குக்கு பகவான், சுவாமி பிரேம் சின்மயா என்று புதிய நாமகரணம் சூட்டி சன்னியாசி ஆக்கினார்.
இதெல்லாம் நடந்தது 1972 வாக்கில்.

திரும்பவும் அமெரிக்காவுக்கு திரும்பும் திட்டத்தை கைவிட்டு, இயக்கத்தின் கொள்கைகளைப்  பரப்பவும், மேலும் ஏராளமானோரை ஓஷோவின் இயக்கத்தில் சேர்ப்பதற்காகவும் நாடு முழுக்க முகாம்கள் நடத்த புதிய சன்னியாசிகள் ஷீலாவும், மார்க்கும் கிளம்பினார்கள்.சில காலம் கழித்து மார்க், மிக மகிழ்ச்சியான முறையில் தன்னுடைய மரணத்தை எதிர்கொண்டார். மார்க்கின் மறைவுக்குப் பிறகு ஓஷோ, தன்னுடைய வெளிநாட்டு பக்தர்களில் ஒருவரை ஷீலாவுக்குத்  துணையாக்கினார்.

ஷீலாவின் அமெரிக்க, ஐரோப்பிய தொடர்புகள் பலவும் ஓஷோவின் ஆசிரமத்துக்கு பலம் சேர்த்தன.பூனாவில் ஆசிரமம், எழுபதுகளின் இறுதியில் நிலைபெற்றபோது ஒரு நாளைக்கு ஐயாயிரத்துக்கும் கூடுதலான பக்தர்கள், பகவான் தரிசனத்துக்காக வரத் தொடங்கினார்கள்.
அவர்களை இன்முகத்தோடு வரவேற்று ஒழுங்குபடுத்தியதில் மா ஆனந்த் ஷீலாவின் பங்கு அளப்பரியது. கிட்டத்தட்ட ஓஷோவின் மக்கள் தொடர்பாளரைப் போல ஷீலா பணியாற்றிக் கொண்டிருந்தார்.

குறிப்பாக ஐரோப்பிய, அமெரிக்க பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றதற்கு அவர் முக்கியமான காரணமாக இருந்தார்.

இப்போது சொன்னால் நம்புவதற்கு சற்று சிரமமாக இருக்கும்.ஓஷோவைக் காண்பதற்காகவே அயல்நாடுகளில் இருந்து பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்ததால் அப்போதைய இந்தியாவின் சுற்றுலா வருவாய் 15% கூடியது!பூனா என்கிற நகரமே, ரஜனீஷ் ஆசிரமத்தின் காரணமாகத் தான் உலக வரைபடத்தில் இடம்பெற்றது.

ஆசிரம பக்தர்கள் பெரும்பாலும் செல்வந்தர்கள் என்பதால் ஏகத்துக்கும் செலவழித்தார்கள். பூனாவில் புதியதாக ஹோட்டல்கள், வெளிநாட்டவர்களைக் கவரக்கூடிய அம்சங்கள் என்று புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்பட்டன.தொழில் முதலீடுகளுக்கான அம்பாஸடராக, தான் இருப்பதையே ஓஷோ, வெகுகாலம் அறியவில்லை. தன்னுடைய ஆசிரமம் எப்படி நடக்கிறது, யாரால் நடக்கிறது என்பதையெல்லாம் உணராமல், ‘புதிய மனிதன்’ என்பவனை உருவாக்கும் முயற்சியில் கவனமாக இருந்தார்.

தன்னால் எவ்வளவு விரைவில் புதிய மனிதனை உருவாக்க முடிகிறதோ, அவ்வளவு விரைவில் உருவாக்க வேண்டுமென்று அவசரம் காட்டினார்.
‘இப்போது இல்லாவிட்டால் எப்போதுமே இல்லை’ என்பதுதான் ஓஷோவின் தாரகமந்திரம். எனவே, ஏதேனும் நடைபெறவேண்டுமென்று அவர் சொன்னால், அதற்கான வேலை உடனே தொடங்கப்பட வேண்டும்!

யார் அந்த புதிய மனிதன்?

உடலும், மனதும் ஒன்றான Homo Novus என்கிற புதிய பரிமாணத்துக்கு மனிதர்கள் மாறவேண்டும் என்று ஓஷோ விரும்பினார். இவர்களை புதிய மனிதன் என்று வர்ணித்தார்.ஓஷோ உருவாக்க விரும்பிய புதிய மனிதன் ஒவ்வொருவனும் புத்தரின் புத்திக்கூர்மையைக் கொண்டிருப்பான். Zorba என்கிற பழமையான ஆன்மீக மார்க்கத்தையும், பவுத்தத்தையும் இணைத்து புதிய மனிதனை உருவாக்க நினைத்தார்.

அதாவது ஓஷோ உருவாக்கும் புதிய மனித இனத்தில் ஆண் - பெண் வேறுபாடு இருக்காது. செக்ஸும், மரணமும் ஒன்றே. எல்லாவற்றையும் சமப்படுத்துவதின் மூலமாக உலகவாழ்வில் முரண்பாடுகளே இல்லாமல் மகிழ்ச்சியாக வாழமுடியும் என்று கருதினார்!

(தரிசனம் தருவார்)

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்