மகான் ஆகும் ராட்சஷன்! அயோக்யா சீக்ரெட்ஸ்



‘‘எனக்கு சினிமா ஒரு சந்தோஷம். இனிமே இது கமர்ஷியல், இது ஆர்ட் ஃபிலிம்னு நாம சொல்றதுக்கு வேலையே இல்லை. எல்லாத்தையும் ரசிகர்களே தீர்மானிக்கிறாங்க. இப்படித்தான் படம் பண்ணணும்னு முன்னாடி சில அம்சங்கள் இருந்தது. இப்பசகலமும் வேற மாதிரி மாறி நிக்குது.

90ல் இருந்த ரசிகன் இப்ப இல்லை. சினிமாவின் சகல ரகசியங்களும் வெளியே தெரியுது. படம் புதுசா இருந்தால், யாராக இருந்தாலும் ஆதரவு கொடுக்கிறாங்க. வித்தியாசமா செய்ய நினைக்கிறவங்களுக்கு இதுதான் அருமையான நேரம். இந்த சமயத்தில் ‘அயோக்யா’ வர்றது பெரிய ப்ளஸ். விஷால் சார் தமிழ் சினிமாவில் ஒரு மரியாதையான இடத்தில் இருக்கார். அவருக்கு இருக்கிற அங்கீகாரத்தை தக்க வைக்கணும்னு எனக்கு ஆசை. அதுக்காக அலுக்காம, சளைக்காம, மலைக்காம, உழைச்சிட்டு இருக்கோம்.

என்னோட முதல் படம் வேறே. மனசைப் பிடிக்கிறது, மசாலாவில் கலக்குறதுனு உள்ளே போயிட்டா அதுதான்னு அப்படியே மூட் செட் பண்ணிடுவேன். இப்ப இத்தனை நாளா என் உடம்புக்குள்ளே உட்கார்ந்திருக்கிறது ‘அயோக்யா’தான்’’ சிரித்தபடி பேசுகிறார் இயக்குநர்  வெங்கட்மோகன். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் பிரதான சீடர்.

எப்படியிருக்கும் ‘அயோக்யா’..?
நிறைய ஆச்சர்யமாயிருக்கும். விஷால் இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ரோல் பண்ணினதில்லை. நெகடிவ் கேரக்டர். கதையாகவும், விஷாலின் நடிப்பும் இதில் மாறுபடும். முதல்பாதி ஜாலியாகவும், இரண்டாம் பாதி எமோஷன் நிரம்பியும் இருக்கும் க்ளைமாக்ஸ் உங்கள் மனதை கலங்கடிக்கும்.

கொஞ்சம் கதையைச் சொல்லலாம். தப்பில்லை. ஆதரவற்ற சிறுவன். பிழைக்க வந்த இடத்தில் ஒண்ணும் சரியாக அமையவில்லை. போலீஸ் வேலையில் காசு பார்க்கலாம் என்று அவனுக்குத் தோன்றிவிடுகிறது. பின்பு போலீஸ் வேலையில் சேர்ந்துவிடுகிறான். பணம், பணம், பணம் என்று அலைகிறான். அப்புறம் எப்படி எந்த விநாடியில் அவனது மாற்றம் நடக்கிறது. மிகவும் மோசமான மனிதனாக இருந்தவன், மிகவும் நல்லவன் ஆகிற சூழல் எப்படி வந்தது. ஒரு ராட்சஷனாக இருந்தவன், ஒரு மகான் போல் மனம் மாறியது எப்படின்னு கதை பயணம் போகும்.

இதில் விஷாலுக்குப் பெயர் கர்ணன். இந்தக் கர்ணன் கொடுக்க மாட்டார். இருக்கிறதைப் பிடுங்கிக் கொள்வார். ெபரிய படம், பெரிய கேன்வாஸ், வேலைகள்னு மேன் பவர் நிறைய ஆன படம். நான் முதல் பட இயக்குநர்னு விஷால் சாருக்கு அசால்ட் இருக்கணுமே… ம்ஹூம். அவ்வளவு கனிவாக இருந்தார். ஸ்பாட்ல வந்து நுழைஞ்ச உடனேயே அவருடைய எல்லாப் பொறுப்புகளையும் தூக்கி தூர வைச்சிட்டு எல்லாரிடமும் ஜாலியாக இருந்து, பக்குவமாக ஷூட்டிங்கில் இருப்பார்.

நான் சொல்ற டிஸிப்ளின், ஈடுபாடு, கடின உழைப்பு எல்லாம் படம் ரிலீஸான பிறகு எல்லோருக்கும் புரியும். ஒவ்வொரு படத்தையும் முதல் படம் மாதிரி செய்றவங்ககிட்டே நாமளும் சந்தோஷமா ெவார்க் பண்ண முடியும். அப்படி விஷால் கிட்டே பண்ணும்போது சந்தோஷப்பட்ட இடங்கள் படம் முழுவதும் இருக்கு. எழுந்தால், நடந்தால், ஓடினால் பரபரன்னு அதிர வைக்கிற தேஜஸ். இதில் விஷாலை ரொம்ப வித்தியாசமாக பிடிக்கும் பாருங்களேன்..!

அந்தப் பொண்ணு ராஷி கண்ணா களை கட்டியிருக்கு...
விஷாலுக்கு இதுக்கு முன்னாடி ஜோடியாக இல்லாத நடிகைதான் வேணும்னு உறுதியாக இருந்தேன். இவங்கதான் எங்கள் நினைவுக்கு வந்தாங்க. ரொம்ப சின்சியர். இவங்களுக்கு தமிழ் தெரியாது. ஆனால், இவங்களுக்கு தமிழ் தெரியாதுன்னு நமக்குத் தெரியாத மாதிரி ஒர்க் பண்ணுவாங்க.
இரண்டு நாளைக்கு முன்னாடி வசனங்களை வாங்கிக்கொண்டு போய் சரியான தயாரிப்போட வருவாங்க. அவங்களால் ஷூட்டிங்கில் கொஞ்சம் தாமதம் ஆனதுன்னு ஒரு வார்த்தை சொல்லிட முடியாது. அவங்களுக்கு ரொம்ப நல்ல பெயர் கிடைக்கும்.

‘நானும் ரௌடிதான்’ படத்தில் கொஞ்சம் காமெடி கலந்த வில்லத்தனம் பண்ணினார் பார்த்திபன். இதில் முழுநீள வில்லத்தனம் பண்றார். விஷால் இந்தப்படத்தில் எவ்வளவு தூரம் பணத்துக்கு அலைகிற கேரக்டரோ அதுக்கு நேர் மாறா கே.எஸ்.ரவிக்குமார். நீதி, நேர்மைனு இருக்கிற போலீஸ்காரர். இரண்டு பேரும் வருகிற இடங்கள் விறுவிறுப்பாகவும் இருக்கும்.

பாடல்கள் சாம் சி.எஸ். இசையில் நல்லாவே இருக்கு...
‘விக்ரம் வேதா’ வந்த பிறகு அவரது இடம் வேற. அவரது ட்யூன்கள் சூத்திரம் மாதிரி இல்லாமல், எளிமையாக இருக்கு. சொன்னபடி பாடல்கள் தந்து அருமையாகச்  செய்கிறார். தமிழ் மண்ணோட அடையாளம் இருக்கு. ஒரு ஸ்டைல் இருக்கு. ஒரு சுகம் தெரியுது. முக்கியமாக அவர் இசையில் இருக்கிறது உயிர். அதுதான் அழகு.

‘துப்பறிவாளன்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக்தான் கேமராமேன். நான் காலையில் படப்பிடிப்பிற்குச் செல்லும் போது இந்தக் காட்சி இவ்விதம்தான் படமாகும் என மனதில் கணக்குப் போட்டிருப்பேன். ஆனால், கார்த்திக் அதற்குக் கூடுதல் சுவாரஸ்யம், அழகு, முக்கியத்துவம் வரும்படி ஏதோ ஒரு மேஜிக் செய்திருப்பார்.

சினிமா ஒரு ஜனநாயகக் கலை. பெயின்டிங் மாதிரி கேன்வாஸ் ஆச்சு, ஓவியர் ஆச்சுனு ஒதுங்கிட முடியாது. உள்ளபடி அயோக்யாவில் பங்கேற்ற ஒவ்வொருத்தருக்கும் சந்தோஷம் காத்திருக்கிறது என நம்புகிறேன்.

நா.கதிர்வேலன்