உதவி இயக்குநர் ஹீரோ கேரக்டர் ஆர்டிஸ்ட் மீண்டும் அசிஸ்டென்ட் டைரக்டர் வில்லன்!சத்ரு வில்லன் லகுபரனின் பரபர கிராஃப்

சமீபத்தில் வெளியான ‘சத்ரு’வில் கொடூரமான செயல்களை குற்ற உணர்ச்சியே இல்லாமல் அசால்ட்டாகச் செய்து மிரட்டும் வில்லனாக கவனம் ஈர்த்தவர் லகுபரன். இதற்கு முன்பு வெளியான ‘ராட்டினம்’ படத்தின் ஹீரோவான இவர், உதவி இயக்குநராக இருந்து கதாநாயகனாக உயர்ந்தவர்! 
‘‘நிறையப் பேரு ‘சத்ரு’ பார்த்துட்டு பாராட்டறாங்க. இந்தளவு வாழ்த்துகளை எதிர்பார்க்கலை. இந்தப் படத்துல நடிக்கக் கேட்கும்போதே, ‘ஹீரோவுக்கு சமமான ரோல் வில்லனுக்கும் இருக்கு’னு சொல்லி ஸ்கிரிப்ட்டையும் படிக்கக் கொடுத்தாங்க.

திரைக்கதை ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா, என்னால வில்லனா நடிக்க முடியுமானு சந்தேகப்பட்டேன். ஆனா, என் பாடிலேங்குவேஜ், வாய்ஸ் மாடுலேஷன்ல நம்பிக்கை இருந்ததால தயக்கத்தோடு சம்மதிச்சேன். ஹீரோவா நண்பர் கதிர் நடிப்பது தெரிந்ததும் ஹேப்பியானேன். அவர் நல்ல நடிகனாச்சே...’’ மகிழ்ச்சியுடன் படபடக்கிறார்.

‘‘என் ஒரிஜினல் பெயரே லகுபரன்தான். பூர்வீகம் திருப்பூர். சின்ன வயசுல இருந்தே சினிமா ஆர்வம். இயக்குநர்கள் பூபதிபாண்டியன் சார், யூகிசேது சார் ஆகியோர்கிட்ட உதவி இயக்குநரா இருந்திருக்கேன். டைரக்டராகணும்னுதான் நினைச்சேன். ஹீரோவானது அதிர்ஷ்டம்தான். ஃபேஸ்புக் மூலமாதான் ‘ராட்டினம்’ பட வாய்ப்பு வந்துச்சு. ஆரம்பத்துல நானும் அதை நம்பவே இல்ல. யாரோ என்னை கலாய்க்கறாங்கனு நினைச்சேன்.

அப்புறம் என் நண்பர்கள் வட்டத்துல விசாரிச்சதும்தான் அது உண்மைனு தெரிஞ்சுது. அந்தப் படக் கம்பெனியை என் நண்பர்களுக்கும் தெரிஞ்சிருந்தது. ‘லகு, சீரியஸாகத்தான் அவங்க உன்னை நடிக்க கேட்குறாங்க’னு ஃப்ரெண்ட்ஸ் கன்ஃபார்ம்
பண்ணின பிறகே நடிக்க ரெடியானேன்.

‘ராட்டினம்’ ஆபீஸுக்கு முதன்முதலா நான் போனதும் அவங்களுக்கும் ஷாக். ஏன்னா, ஃபேஸ்புக்ல நான் காலேஜ் படிக்கறப்ப எடுத்த போட்டோவை போட்டிருந்தேன். ஆனா, நேர்ல போனப்ப கொஞ்சம் வெயிட் போட்டிருந்தேன். ‘ஃபேஸ்புக்ல ஸ்மார்ட்டா இருந்தீங்க... அந்த உடம்பைக் கொண்டு வாங்க’னு தயாரிப்பாளர் சொல்லிட்டார். ‘நெடுஞ்சாலை’ ஹீரோ ஆரி, அப்ப ஃபிட்னஸ் டிரெயினரா இருந்தார். அவர் கொடுத்த டிரெயினிங்கில் உடல் எடையைக் குறைச்சேன். அப்புறம்தான் ‘ராட்டின’த்தில் நடிக்க முடிஞ்சது.

தூத்துக்குடிலதான் படப்பிடிப்பு நடந்தது. ஷூட்டுக்கு முன்னாடி அங்க போய், மக்களுடன் பழகி, அவங்க ஸ்லாங் தமிழை கத்துக்கிட்டு நடிச்சேன். அந்தப் படத்துல எல்லாருமே புதுசு. இதனாலயே என்னாலயும் நடிக்க முடிஞ்சது. இதுக்கு அப்புறம் ‘எட்டுத்திக்கும் மதயானை’, ‘ஒருவர்மீது இருவர் சாய்ந்து’ படங்கள்ல நடிச்சேன். இடைல ஒரு ஃபிரெஞ்சு மொழிப் படத்துலயும் நடிச்சேன்!

இதுக்குப்பிறகு நடிக்க வாய்ப்பு வராததால திரும்பவும் அசிஸ்டென்ட்  டைரக்டரா மாறினேன்...’’ மூச்சுவிடாமல் சொல்லும் லகுபரன், இந்த நேரத்தில் கமல் நடிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கிய ‘தூங்காவனம்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்திருக்கிறார்!

‘‘இந்தப் படம் முடியவும்‘சத்ரு’ வாய்ப்பு வரவும் சரியா இருந்தது! பார்க்க மட்டுமில்ல பழகவும் நான் சாஃப்ட்டான ஆள். இதனாலயே வில்லன் ரோல் பண்றது சவாலா இருந்தது. தவிர மூணு வருஷ இடைவெளிக்கு அப்புறம் கேமரா முன்னாடி திரும்பவும் நிற்கப் போறேன் என்பதை நினைக்கிறப்பவே உதறலாச்சு. முதல் படத்தோட முதல் நாள் ஷூட்ல எவ்வளவு நெர்வஸா இருந்தேனோ அப்படி ‘சத்ரு’ படப்பிடிப்புலயும் இருந்தேன்!

ஆக்சுவலா இந்தப் படத்துல சூரனா நான் நடிச்சதும் தற்செயல்தான். அந்த கேரக்டர்ல நடிக்க வேண்டியவர் ஏதோ காரணங்களால அன்று வரலை. உடனே டைரக்டர் நவீன் நஞ்சுண்டன் சார், ‘அசுரன் ரோலையும் நீங்களே பண்ணிடுங்க’னு சொல்லிட்டார்!அதுக்கு முன்னாடி கூத்து ஆடினதில்ல. டைரக்டர் கொடுத்த தைரியத்துல யூ டியூப்ல ஒண்ணு ரெண்டு கூத்து வீடியோஸைப் பார்த்து எப்படியோ நடிச்சு சமாளிச்சேன்! என்ன... வில்லன் பிரபாகர் கேரக்டருக்கும் அசுரன் கதாபாத்திரத்துக்கும் வித்தியாசம் காட்டி டப்பிங் பேசத்தான் திண்டாடினேன்!

தொடர்ந்து நடிக்கற ஐடியா இருக்கு. அதேநேரம் டைரக்‌ஷன் ஆசையும் இருக்கு. ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி வச்சிருக்கேன்... பார்க்கலாம், வாழ்க்கை எந்தப் பாதைல பயணப்படப் போகுதுனு...’’ கண்சிமிட்டுகிறார்லகுபரன்.            
                      
மை.பாரதிராஜா