நட்புக்கு மரியாதை!



‘‘மியூசிக்ல பெயரும் புகழும் வாங்கணும்... கோலிவுட்ல ஹீரோவாகணும் என்பதெல்லாம் என் பல வருஷ கனவு. இப்ப ஒவ்வொண்ணா நிறைவேறிட்டு இருக்கு. கேரியர் ரசனையா ஹேப்பியா போகுது...’’ ஆனந்தமாகிறார் ஆதி. ‘மீசையை முறுக்கு’க்கு அடுத்து சுந்தர்.சிதயாரிப்பில் ‘நட்பே துணை’ என்கிறார்.
‘‘முதல் படத்தை விட கொஞ்சம் பெரிய லெவல்ல ‘நட்பே துணை’ உருவாகியிருக்கு. இயல்பும் யதார்த்தமும், காமெடியும் கலந்த கதை இது. நான் ஸ்கூல் படிக்கிறப்ப சினிமா பார்க்க வீட்ல பர்மிஷன் கேட்பேன். ஒரு சில படங்களுக்குதான் அனுமதி கொடுப்பாங்க.

அப்ப என் மனசுக்குள்ள ‘ஒருநாள் நானும் ஹீரோவா மாறுவேன். குழந்தைகளும் பார்க்கற மாதிரி படம் எடுப்பேன்’னு சபதம் போட்டேன்! ‘மீசையை முறுக்கு’படத்தை அப்படித்தான் குழந்தைகளும் பார்க்கிற மாதிரி எடுத்தேன்.

நினைச்ச மாதிரியே அந்தப் பட பாடல்களுக்கு குழந்தைங்க டான்ஸ் ஆடி வீடியோ எடுத்து நெட்ல போட்டாங்க. ‘நட்பே துணை’யும் அப்படி இருக்கும். சிகரெட் புகைக்கிற மாதிரியோ டிரிங்க்ஸ் குடிக்கிற மாதிரியோ காட்சிகள் இருக்காது!’’ தீர்மானமாகச் சொல்கிறார் ஆதி.
இந்தப் படத்துல என்ன ஸ்பெஷல்?

நம்ம தேசிய விளையாட்டுதான்! அருமையான ஒரு கதைக்களம் இதுல அமைஞ்சிருக்கு. அதுக்காகவே ஹோம் ஒர்க் பண்ணிட்டு, நடிக்க ரெடியானேன். ஐஐடில பணிபுரியற ஹாக்கி கோச்கிட்ட பயிற்சி எடுத்துக்கிட்டேன். எங்க உற்சாகத்தைப் பார்த்துட்டு அந்த கோச்சும் கடந்த ஒரு வருஷமா எங்க கூடவே டிராவல் பண்றார்.ஹாக்கி டீம்ல மொத்தம் 22 பேர் இருப்பாங்க. இதுல நாங்க அஞ்சாறு பேர் தவிர மத்த எல்லாரும் ஒரிஜினல் ப்ளேயர்ஸ். நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கோம்.

ஹீரோயினா கேரளாவைச் சேர்ந்த அனகா நடிக்கறாங்க. கரு.பழனியப்பன் சாரும், ஹரீஷ் உத்தமன் சாரும் ஹீரோவுக்கு சமமான ரோல் பண்றாங்க. அவங்களத் தவிர, கௌசல்யா மேம், பாண்டியராஜன் சார், ‘விசாரணை’ அஜய்கோஷ், விக்னேஷ், ஷாரா, அஸ்வின், ‘எருமைசாணி’ விஜய், பிஜிலி ரமேஷ்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க. ‘மீசையை முறுக்கு’ படத்தின் அசோசியேட் காந்த் தினேஷ், இந்தப் படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதியிருக்கார். ‘மான்கராத்தே’, ‘ரெமோ’ உட்பட சில படங்கள்ல ஒர்க் பண்ணியிருக்கிற பார்த்திபன் தேசிங்கு இந்தப் படத்தை இயக்கியிருக்கார்.

பாண்டிச்சேரி, காரைக்கால், தரங்கம்பாடினு நிறைய இடங்கள்ல ஷூட் பண்ணியிருக்கோம். கிளைமாக்ஸ் போர்ஷனுக்காக பிரமாண்ட ஹாக்கி மைதானம், பத்தாயிரம் பார்வையாளர்கள்... 12 நாள் ஷூட்னு ஒரு மிரட்டு மிரட்டியிருக்கோம்! ‘டிமான்டி காலனி’ அரவிந்த்சிங் ஒளிப்பதிவு செய்திருக்கார். எப்படி இருக்கார் மியூசிக் டைரக்டர் ஆதி..?

அவருக்கென்ன..?! ஹேப்பியா இருக்கார். ‘ஹிப்ஹாப் தமிழா’னாலே நானும் ஜீவாவும் சேர்ந்த டீம்தான். ‘நட்பே துணை’ தவிர, சிவகார்த்திகேயன் சாரோட ‘மிஸ்டர் லோக்கல்’ உட்பட 5 படங்களுக்கு இசையமைக்கறோம். நான் படப்பிடிப்புல பிசியாயிருக்கிறப்ப கம்போஸிங்கை நண்பர் ஜீவா கவனிச்சுக்குவார்.

முதல் படத்தை நானே இயக்கினதால வேலையும் டென்ஷனும் அதிகமா இருந்தது. இந்தப் படத்துல வெறும் நடிக்க மட்டுமே செய்யறேன். என்ன... ஷாட் முடிஞ்சதும், ‘வெயில்ல நிக்காதீங்க... வியர்க்கும்! கேரவன்ல போய் ரிலாக்ஸ் ஆகுங்க’னு டைரக்டர் சொல்லிடறார்.
கேரவன்ல சும்மா உட்கார வேண்டாமேனு மியூசிக் கம்போசிங்கை அங்கயே செய்யறேன். அதாவது கேரவன்ல!

நடிப்பும் இசையும் என் பேஷன். அதேபோல பாடலாசிரியர் ஆதி, இப்ப பாடல்கள் எழுதறதை குறைச்சிருக்கார்! ஆனாலும் அவர் நடிக்கும் படங்களுக்கு எக்ஸ்க்யூஸ் உண்டு!கேப் கிடைக்கிறப்ப எல்லாம் என் ஃபேவரிட்டான டாகுமெண்டரி ஒர்க்கை கவனிக்கறேன். ‘மாணவன்’, ‘டக்கரு டக்கரு’க்குப் பிறகு இப்ப ரெண்டு வருஷமா ‘தமிழி’னு ஒரு ரிசர்ச் டாகுமெண்டரி பண்ணிட்டிருக்கேன். அடுத்து ஷங்கர் சாரோட உதவியாளர் ராணா இயக்கத்துல நடிக்கறேன். இந்தப் பட ஷூட் தொடங்கிடுச்சு!

என்ன சொல்றார் உங்க தயாரிப்பாளர் சுந்தர்.சி...?
அடையாளம் இல்லாம இருந்த என்னை சினிமாவுக்கு அழைச்சுட்டு வந்து அட்ரஸ் கொடுத்தவர் அவர்தான். விஷால் நடிச்ச ‘ஆம்பள’
படத்துல இசையமைப்பாளரா என்னை அறிமுகப்படுத்தினார். ‘மீசையை முறுக்கு’ படக் கதையைக் கூட கேட்காம என் மேல நம்பிக்கை வச்சு தயாரிச்சார்.

‘டைரக்ட் பண்ணாம நடிக்கவும் செய்’னு அட்வைஸ் பண்ணினதும் அவர்தான். எப்பவும் சார் ஒண்ணு சொல்லிக்கிட்டே இருப்பார். ‘எல்லாரையும் நாம கைதூக்கி விடணும். அப்பதான் நாமும் உயர்வோம்...’.இதை நானும் இப்ப ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிருக்கேன். முதல் படத்துல 14 பேரை அறிமுகப்படுத்தினவன், இதுல நாலு பேரை அறிமுகப்படுத்தறேன்!

மை.பாரதிராஜா