என்னை இப்ப எல்லோருக்கும் பிடிச்சிருக்கு!‘‘ஆசீர்வதிக்கப்பட்டவன் மாதிரி ஃபீல் பண்றேன். என் வாழ்க்கையில் இது அருமையான நேரம். ‘தடம்’ நிச்சயம் ஜெயிக்கும்னு நினைச்சோம். ஆனால், இந்த அளவுக்கு பெரிய வெற்றி என்பது நிச்சயம் சந்தோஷம் அளிப்பது. மக்கள் இப்பொழுதெல்லாம் நிறைய எதிர்பார்க்கிறாங்க. ஊர் ஊரா, தியேட்டர் தியேட்டரா போய் மக்களைச் சந்தித்து வந்தேன். ரசிகர்களின் அன்புக்கு எதுவும் ஈடாகாது...’’ அழகான கண்கள் பளிச்சிட மென் புன்னகையில் மிளிர்கிறார் அருண் விஜய். இன்றைக்கு எல்லோரின் பார்வையும் அவரின் மீதே.

இப்ப உங்க வரிசை, கணக்கு எல்லாம் சரியாக வருதே...கேட்டதை விட, நினைச்சதை விட அடுத்தடுத்து நடந்துட்டே இருக்கு. இந்த வெற்றி ஆரம்பத்தில் எனக்கு வரலை. அதுவும் கூட நல்லதுக்கேன்னு இப்ப தோணுது. என்னை இப்ப எல்லோருக்கும் பிடிச்சிருக்கு. நீங்கள் என்ன பண்ணினாலும் பிடிக்கும்னு சொல்ற வார்த்தைகள் காதில் வந்து விழுது. இதுமாதிரி ஒரு பேட்டியால்கூட என்னைப் பிடிக்கலாம். இதில் இருந்து இனி இறங்கக்கூடாது. மேலே மேலே போகணும்.

நன்றி மட்டும்தான் கடவுளுக்குச் சொல்லிட்டே இருக்கேன். சாமி கும்பிடும்போது வேறு எதுவும் புதுசாக கேட்கத் தோணலை. ‘உங்க நடிப்பு ரொம்ப டாப்பு’ன்னு கை வலிக்கிற மாதிரி குலுக்கிச் சொன்ன மக்கள். தியேட்டரை விட்டு வெளியே வந்தா வேட்டியை மடிச்சுக்கட்டி, பைக்கில் விரட்டி வாழ்த்துச் சொல்கிற கள்ளம் கபடம் அறியாத ரசிகர்கள்.

எனக்கு கோபமே வரலை. கும்பிடத்தான் தோணுது. எல்லோருக்கும் பிடிக்கிறவனாக இருக்கணும்னு நினைச்சுக்கிட்டேன். எல்லா வயசுக்கும் பிடிக்கணும். நிச்சயம் ஒரே மாதிரி படங்கள் பண்ண மாட்டேன். என்ன நல்ல ஸ்கிரிப்ட் இருக்கோ, அதில் என் அதிகபட்ச சக்தியைத் தருவேன். அவ்வளவுதான். இதைத்தான் நீங்கள் கணக்குன்னு சொல்றீங்க!இவ்வளவு திறமைகள் கொண்டும், காத்திருக்க வேண்டியதாகிவிட்டது...

அதையே பேசிட்டு இருப்பதில் பலன் இல்லை. இப்ப நாலைந்து வருடங்களாக நல்லதே நடக்கிறது. மனம் தளரவிடாமல், எந்த இலக்கைத் தேடிப்போகிறாமோ அதை நழுவவிடமல் இருந்திருக்கேன். நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டு, அப்கிரேடு பண்ணிக்கிட்டு, தேவையில்லாததை எல்லாம் செதுக்கி தள்ளி வைச்சிட்டு வந்திருக்கேன். நல்ல படங்களுக்காக காத்திருந்த வேளைகளில் கூட என் உடம்பை கட்டுக்கோப்பாக வைச்சுக்க
தவறியதேயில்லை.

அருண்னா அவன் ஃபிட்னு சொல்ல வைச்சிருக்கேன். ஜிம்மில் கிடந்து கலோரிகளை மட்டுமில்லை, அழுத்தம் எல்லாத்தையும் கூடவே எரிச்சிருக்கேன். நடிகனா ஒருத்தனுக்கு உடம்புதான் அஸ்திவாரம்னு உணர்ந்திருக்கேன். உடம்பை பத்திரமாக நம்ம கட்டுப்பாட்டில் வைச்சிருக்கிறதை பின்பற்ற எத்தனையோ பேருக்கு பாடமா இருந்திருக்கேன்.

ஒரு பட சக்ஸஸ்க்கு டைரக்டரோட உழைப்பு, ரிலீஸ் தேதி, படத்தோட புரொமோஷன், பரவுகிற வாய்மொழி பேச்சுன்னு எவ்வளவோ விஷயங்கள் இருக்கு. இயக்குநர் மகிழ்திருேமனி என்னை ‘தடையறத் தாக்க’வில் அருமையாக வெளிப்படுத்தினார். திரும்ப அவர்கிட்டே நடிச்சபோதும், அவர் எதையும் ரிப்பீட் பண்ணலை. புதிது புதிதாக கதைகளை உருவாக்கவும், அதை செயல்படுத்தவும் அவரால் முடியும்.

உங்க அப்பா பின்னாளில் அருமையான நடிகராக மாறினார். நீங்கள் நடிப்பிலும் நல்ல அக்கறை செலுத்துகிறீர்கள்...அப்பா கடந்து வந்தது பெரும் பயணம். கலையுலகம் சார்ந்த குடும்பத்திலிருந்து வந்துட்டு, அப்பாவின் பெயரைக் காப்பாற்ற வேண்டிய கட்டம். இத்தனை வருடத்தில் 25 படங்கள்தான் செய்திருக்கிறேன். அதில் சொல்லிக் கொள்ளும்படியான நல்ல படங்கள் உண்டு என்பதில் எனக்குப் பெருமையே.

இப்ப ஒரு படத்தின் உள்ளே இறங்குவதில் நல்லபடியா செயல்பட முடியுது. ஒரு கதையைச் சொன்னால் எப்படி இதைத் திரையில் கொண்டு வரணும்னு ஒரு வடிவம் மனசுக்குள் வருது. நான், அப்பாவின் சாயலை எடுத்துக் கொண்டதில்லை. உங்களுக்கு அஜித் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அவருக்கு இணையாக வாய்ப்பு கொடுத்தார்...ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தபோது, எதிர்நாயகனாக நான் நடிக்க எடுத்த முடிவு அவ்வளவு சரியாக இருந்தது. அந்த மாதிரி பெரிய ஹீரோக்களுக்கு இருக்கிற ஃபாலோயர்ஸ் நமக்கும் கிடைக்க அதில் வழி இருக்கு.

இப்படி எல்லா நடிகர்களின் ரசிகர்களும் என்னையும் சேர்த்துக்க நினைக்கிற இடங்கள் வந்தது. ‘செக்கச் சிவந்த வானம்’ எல்லா ரசிகர்களும் உட்கார்ந்து பார்க்கவும், என்னை அடுத்த இடத்திற்கு எடுத்துப் போகவும் உதவியது. மக்களை நேரடியாக சந்திக்கும்போது எல்லாத்தையும் கரெக்டா சொல்றாங்க. அவங்ககிட்ட இருந்து நிறைய தெரிஞ்சிக்க முடியுது. புரியாததைப் புரிஞ்சுக்க முடியுது. நல்லதாக படம் பண்ணினால் தட்டிக் கொடுத்து தோள்ல தூக்கி வைச்சுக் கொண்டாடுறாங்க. அதே சமயம் தப்பு செய்தாலும் கரெக்ட்டா கண்டுபிடிச்சிடுவாங்க.

‘தடம்’ பார்த்தால் என்னுடைய இரண்டு வேடங்களுக்கும் பெரிதாக தோற்றத்தில் வித்தியாசம் கிடையாது. ஆனால், நடிப்பில்தான் அந்த வித்தியாசத்தைக் கொண்டு போய்ச் சேர்க்கணும். இனி அடுத்தடுத்த பயணங்களில் எச்சரிக்கையாக இருக்கணும். செய்கிற வேலைகளில் கருத்தை வைப்பேன்.

இப்போ ‘மூடர்கூடம்’ நவீனின் படமான ‘அக்னிச்சிறகுகள்’ல அருமையான கேரக்டர். இன்னும் ‘பாக்ஸர்’னு ஒரு படம். கதை கேட்ட கணமே எனக்கு பிடித்துப் போன விதமாக இருந்தது. என் திறமையின் வாயிலாக இன்னும் சிறந்த இடத்தைப் பெறுவேன் என்பது என் தீராத நம்பிக்கை.l

நா.கதிர்வேலன்