லைஃப் டிராவல் - டீச்சர்ஸ் ஃபேமிலியிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கோம்!இந்த ஆக்‌ஷன் டுவின்ஸ்தான் இன்று இந்திய அளவில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். அன்பறிவ் என ஒரே பெயர் போல் காட்சிதரும் இந்த இரட்டையர்கள் ஸ்டண்ட் மாஸ்டர்களாக அறிமுகமான குறுகிய காலத்திலேயே நூறு படங்களைத் தொட்டிருக்கிறார்கள். ‘கேஜிஎஃப்’ இவர்களை சர்வதேச அளவில் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது! கார்த்தி நடித்த ‘மெட்ராஸ்’தான் இவர்களுக்கு தமிழில் முதல் படம்.

‘‘இது நாங்க விரும்பி இறங்கின துறை. எங்களுக்குள்ள ஒரு ஃபயர் இருப்பதால்தான் குறுகிய காலத்துல இந்தளவு பேசப்படறோம். எந்தத் துறையா இருந்தாலும் சம்பாதிக்கணும்னு நினைச்சு இறங்கினா காணாமப் போயிடுவோம்.

இது அனுபவபூர்வமா நாங்க உணர்ந்தது.விஜய், மகேஷ்பாபு, அமீர்கான்னு எல்லா மொழி மாஸ் ஹீரோக்களுக்கும் நாங்க டூப் போட்டிருக்கோம். 600 படங்களுக்கு மேல ஃபைட்டர்ஸா இருந்திருக்கோம். தமிழ்ல அறிமுகமாகறதுக்கு முன்னாடி மலையாளத்துல மாஸ்டரா 40 படங்கள் வரை செய்திருக்கோம்.

ஸ்டண்ட் சிவா மாஸ்டர், பீட்டர்ஹெயின் மாஸ்டர், விஜயன் மாஸ்டர், அனல் அரசு மாஸ்டர்னு எல்லா ஜாம்பவான்களுடனும் ஒர்க் பண்ணியிருக்கோம்.ஆக்சுவலா எங்க ஃபேமிலில டீச்சர்ஸ், லெக்சரர்ஸ் அதிகம். சினிமாவுக்கு வந்திருக்கும் முதல் தலைமுறை நாங்கதான்! அப்பா முருகேசன், பேங்க்ல கேஷியரா இருந்தவர். அம்மா மலர்விழி, தமிழ் டீச்சர். தனியார் ஸ்கூல்ல இப்பவும் ஒர்க் பண்றாங்க.

நாங்க டுவின்ஸ். எங்கள்ல மூத்தவன் அன்பு; இளையவன் அறிவு. இந்த காம்பினேஷன்தான் அன்பறிவ்! நாங்க பிறக்கறதுக்கு முன்னாடியே அப்பா ஃபேமிலி சென்னைல செட்டில் ஆகிட்டாங்க. அம்மாவோட அப்பா, அதாவது எங்க தாத்தா விஸ்வாசவரம்தான் எங்க ரோல்மாடல். எங்க முரட்டுத்தனத்தை எல்லாம் ஆதரிச்சவர் அவர்தான்!

தாத்தாவும், பாட்டியும் டீச்சர்ஸ். தாத்தா பக்கா தி.க.காரர். எப்பவும் கறுப்புச் சட்டைதான் அணிவார். முரட்டு மீசைக்காரர். வீட்ல ஆடு, மாடு, சண்டைக் கோழி எல்லாம் வளர்த்தார். அதனால ஸ்கூல்ல படிக்கிறப்பவே கோழிச் சண்டை விடுவதில் ஆர்வம் வந்தது. ‘ஆடுகளம்’ வ.ஐ.ச.ஜெயபாலன் மாதிரிதான் எங்க தாத்தா. அப்ப புழல் ஏரியாவுல இருந்தோம். நாங்க பத்தாவது பாஸ் பண்ணினதும், ‘உங்களுக்கு என்ன வேணும்’னு கேட்டார். ரெண்டு சண்டைச் சேவலும் ஒரு குதிரை வண்டியும் வேணும்னு சொன்னோம்!

எங்க ெரண்டு பேருக்குள்ள எப்பவும் ஆரோக்கியமான போட்டி உண்டு. சைக்கிள் வாங்கிக் கொடுத்தப்ப அதுல மாறி மாறி சாகசம் செய்துட்டு இருப்போம். தாத்தாகிட்ட பர்மிஷன் கேட்டுட்டு பாக்ஸிங் கிளாஸ் போனோம். ஆனா, சென்னைல நடந்த பாக்ஸிங் போட்டில எங்களால கலந்துக்க முடியல. அப்பா அதை விரும்பலை. அதுக்கு அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?

‘ரெண்டு பேரும் அச்சு அசலா ஒரே மாதிரி இருக்காங்க. யாராவது ஒருத்தருக்கு மூக்கு உடைஞ்சா கூட வித்தியாசம் தெரிய ஆரம்பிச்சுடும். வேண்டாம்..!’ஆனா, அவ்வளவு தூரம் பாக்ஸிங் கத்துக்கிட்டு மேடை ஏற முடியாமப் போனதுல எங்களுக்கு வருத்தம். தாத்தா காலமானதும் அவர் வளர்த்த சண்டைச் சேவல் எல்லாம் எங்க கண்ட்ரோலுக்கு வந்தது. நாங்க ப்ளஸ் 2 முடிச்சதும் வீட்ல யமஹா பைக் வாங்கிக் கொடுத்தாங்க. சைக்கிள் மாதிரியே அதுலயும் சாகசம் செய்யத் தொடங்கினோம். பக்கத்துலயே புழல் ஏரி இருந்ததால எப்பவும் குளியல் அங்கதான். ஏரி டவர் கிட்டத்தட்ட 50 அடி உயரத்துல இருக்கும். அதுல ஏறி தண்ணிக்குள்ளே குதிப்போம்!

எங்க வீட்டுப் பக்கமே ஸ்டண்ட் யூனியன் இருந்தது. எல்லாரும் கெத்தா நடமாடுவாங்க. அந்த கெத்துல நாங்க இம்ப்ரஸ் ஆனோம். ஸ்டண்ட் யூனியன்ல சேரணும்னா ஜிம்னாஸ்டிக்ஸ் தெரிஞ்சிருக்கணும். அதனால முறைப்படி கத்துக்க ஜிம்னாஸ்டிக்ஸ் க்ளாஸுக்கு போனோம்.
பைக் வீலிங், பாக்ஸிங், ஜிம்னாஸ்டிக்ஸ்னு எல்லாத்தையும் தனிப்பட்ட ஆர்வம் காரணமாதான் கத்துக்கிட்டோம்.

வீட்ல காலேஜ்ல சேர்க்க விரும்பினாங்க. கவிஞர் இன்குலாப் எங்க சொந்தக்காரர். ‘பசங்கள என்கிட்ட அனுப்புங்க. நான் பாத்துக்கறேன்’னு சொன்னார். அதே மாதிரி நியூ காலேஜ்ல பிபிஏ சேர்த்துவிட்டார். ஆனா, ஆறு மாசங்கள்தான் கல்லூரிக்குப் போனோம். ஸ்டண்ட் யூனியன்ல சேரணும் என்கிற வெறி, மேற்கொண்டு எங்களைப் படிக்க விடலை!

யூனியன்ல சேர ஒன்றரை லட்சம் ரூபா தேவை. எங்களுக்கு அப்ப 19 வயசு. வீட்ல பணம் கேட்டோம். ‘படிப்புக்கு கேளுங்க. எவ்வளவு லட்சம்னாலும் தர்றோம். ஆனா, சினிமால சேர ஒரு ரூபா கூடத் தரமாட்டோம்’னு கண்டிப்பா சொல்லிட்டாங்க.அதுக்காக நாங்க சோர்ந்து போகலை. எப்படியோ வீட்ல பணத்தை தேத்தினோம். ஒரு ஆள்தான் சேரமுடியும். அதனால அன்பு முதல்ல யூனியன்ல சேர்ந்தான். அப்புறம் ஆறு மாசம் கழிச்சு அறிவும் மெம்பரானான்.

சின்ன வயசுல இருந்தே மரத்துல ஏறிக் குதிக்கறது, ஜன்னல்ல ரோப் கட்டி விளையாடுறது, பைக்ல ஜம்ப் பண்றதுனு இருந்ததால ஷூட்டிங்குல மாஸ்டர்ஸ் எப்படி செய்யச் சொன்னாலும் உற்சாகமா செஞ்சோம்.காலை 6 மணிக்கு எழுந்து ராம்போ, ஜாகுவார், சூப்பர் மாஸ்டர்னு எல்லா மாஸ்டர்ஸ் வீட்டுக்கும் ஒர்க் கேட்டுப் போவோம். பார்த்தா எங்களுக்கு முன்னாடியே பல யூனியன் ஆட்கள் அங்க இருப்பாங்க! என்ன செய்யறதுனு தெரியாது. ஆனா, நாங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருந்ததால மெல்ல மெல்ல எங்களுக்கு சான்ஸ் கிடைக்க ஆரம்பிச்சது.

எங்க வழிகாட்டினு ஸ்டண்ட் சிவா மாஸ்டரை சொல்லலாம். ‘பேரழகன்’ல அவர்கிட்ட சேர்ந்தோம். அதுல பாக்சிங் ஃபைட் எல்லாம் செஞ்சோம். மொட்டை ராஜேந்திரன் அண்ணன் அப்ப மாஸ்டர்கிட்ட அசிஸ்டெண்டா இருந்தார். ஷூட்ல கண்ணாடியை உடைச்சா எக்ஸ்ட்ரா பேமன்ட்; நெருப்புல ஃபைட் பண்ணினா கூடுதல் பணம் கிடைக்கும்.

இதையெல்லாம் விட, ஃபிரேம்ல நாம தெரிவோம் என்பதற்காகவே ரிஸ்க் எடுத்து நடிச்சோம். எதையும் மறுக்காம, முடியாதுனு சொல்லாம நாங்க ஆர்வத்தோடு செய்ததால எல்லா மாஸ்டர்ஸுக்கும் எங்களைப் பிடிக்கும். தொடர்ந்து வேலைகள் கொடுத்தாங்க.ஆனா, யார் கண் பட்டுச்சோ... ‘ஒரே மாதிரிதானே இருக்கீங்க... ரெண்டு பேர்ல ஒருத்தர் வந்தா போதும்’னு சொல்லி எங்களைப் பிரிச்சு சிலர் வேலை கொடுக்க ஆரம்பிச்சாங்க. சின்ன வயசுல இருந்தே ஒரே மாதிரிதான் டிரெஸ் பண்ணுவோம். ஒருவேளை இதனாலதான் ஒருத்தரை மட்டும் கூப்பிடறாங்க போலனு வேற வேற டிரெஸ் போட ஆரம்பிச்சோம்!

அப்புறம் அன்பு ஸ்டண்ட் சிவா மாஸ்டர்கிட்டயும் அறிவு பீட்டர் ஹெயின் மாஸ்டர்கிட்டயுமா ஒர்க் பண்ணினோம். இதனால ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்க முடியாத நிலை. அதனால ரெண்டு பேருமே ‘நாங்க சேர்ந்துதான் ஷூட்டுக்கு வருவோம்’னு சொல்ல ஆரம்பிச்சோம். இதைப் புரிஞ்சுகிட்டு சிவா மாஸ்டர் ஃபாரீன் ஷூட் அப்ப அறிவையும் கூப்பிடுனு சொன்னார். அதே மாதிரி பீட்டர் மாஸ்டரும் ஃபாரீன் ஷூட் அப்ப அன்பையும் கூப்பிடுனு சொன்னார்!

இப்படியா திரும்பவும் நாங்க சேர்ந்து ஒர்க் பண்ண ஆரம்பிச்சோம். எங்க கடுமையான உழைப்புக்கு அங்கீகாரமும் கிடைச்சது. எல்லா மாஸ்டர்களும் அவங்க டீம்ல நாங்க இருப்பதை பெருமையாவே நினைக்கத் தொடங்கினாங்க. ‘குருவி’, ‘வில்லு’னு தொடர்ச்சியா விஜயன் மாஸ்டர் பணிபுரிஞ்ச படங்கள்ல நாங்க டூப்பு போட்டதால அவர் இந்திக்கு போனப்ப எங்களையும் கூட்டிட்டுப் போனார்.

ஜூனியர் என்டிஆர், மகேஷ்பாபுனு பலருக்கு அன்பு டூப் போட்டிருக்கார். ‘காவலன்’ இந்தில ‘பாடிகாட்’னு ரீமேக் ஆச்சு. ஒரு ஸ்டண்ட் சீக்குவென்ஸ் எடுக்கிறப்ப விஜயன் மாஸ்டருக்கு சென்னைல அவசர வேலை இருந்ததால எங்களை எடுக்கச் சொன்னார். நாங்க எடுத்தோம். அந்த ஒர்க் சல்மான்கானுக்கு ரொம்ப பிடிச்சது. 3 நாட்கள்ல அந்த ஃபைட்டை எடுத்துக் கொடுத்தோம்.

வெறும் ஃபைட்டர்ஸா மாசத்துல 15 படங்களாவது ஒர்க் பண்ணிடுவோம். வேலைல நாங்க கெட்டியா இருந்ததால, ஃப்ளைட்லதான் வருவோம்... பெரிய ஹோட்டல்லதான் தங்குவோம்னு டிமாண்ட் பண்ணினோம். இது பந்தாவுக்காக இல்ல. எங்க தொழிலுக்கு நாங்க செலுத்தும் மரியாதை. இதைப் புரிஞ்சுகிட்டு நாங்க கேட்டபடியே வசதிகள் எல்லாம் செஞ்சு கொடுத்தாங்க.

அனல் மாஸ்டர் நட்பு கிடைச்சதும் அவர் கூட ‘ராம்’ல வேலை பார்த்தோம். அவர் மலையாளப் படங்கள் பண்ணினப்ப எங்களையும் அங்க கூட்டிட்டுப் போனார். மம்முட்டி நடிச்ச ‘பிக் பி’ல எங்க ஒர்க்கை பார்த்து அந்தப் படத்தோட இயக்குநர் அமல்நீரத் அசந்துட்டார். தன்னோட ‘பேச்சுலர் பார்ட்டி’ படத்துல எங்களை மாஸ்டர்ஸா அறிமுகப்படுத்தினார்.

அப்புறம் 40 படங்கள் வரை மலையாளத்துல மாஸ்டர்ஸா இருந்து அடுத்தடுத்து செஞ்சோம். தமிழுக்கும் வருவோம்னு அப்ப நாங்க நினைச்சுக்கூட பார்க்கலை. ‘நான் மகான் அல்ல’ டைம்ல நாங்க ஃபைட்டர்ஸ். அதுல எங்க ஒர்க்கை கவனிச்ச எஸ்.ஆர்.பிரபு சாரும், ஞானவேல்ராஜா சாரும் ‘மெட்ராஸ்’ படத்துல எங்களை மாஸ்டராக்கி தமிழுக்கு கொண்டு வந்தாங்க.

தொடர்ந்து ‘24’, ‘சிங்கம் 3’, ‘இருமுகன்’, ‘கேஜிஎப்’, ‘கபாலி’னுஇப்ப நூறு படங்கள் தாண்டிட்டோம். எங்களுக்குனு நல்ல டீமும் அமைஞ்சிருக்கு. என்ஜினியரிங் மாதிரி பெரிய படிப்பு படிச்சவங்களும் இருக்காங்க. வரும் ஏப்ரல்ல வானகரத்துல ஒரு ஸ்டண்ட் ஸ்டூடியோ தொடங்கறோம். ஃபாரீன்ல உள்ள ஸ்டண்ட் ஸ்கூல் மாதிரிதான் இதுவும். ஸ்பாட்டுக்கு போறதுக்கு முன்னாடி இங்க ரிகர்சல் செய்துட்டு ஷூட் போனா வேலை ஈசியா முடியும் இல்லையா..?

மை.பாரதிராஜா

ஆ.வின்சென்ட் பால்