வாங்க. .. காதலின் பக்கங்களைப் பேசலாம்!அழைக்கிறார் ஹரிஷ் கல்யாண்

எனக்கு டிரெண்டில் நம்பிக்கை இல்லை. நல்ல கதைகள் நிச்சயம் ஓடும். அதுமட்டும்தான் தமிழ் சினிமாவின் மாறாத டிரெண்ட். இதில் பார்க்கிறது என்னோட, உங்களோட, நம்மோட வாழ்க்கை. நமக்கே நமக்குன்னு வந்து நிற்கிற காதலைப் பல சமயம் நாமே கண்டுபிடிக்கிறது இல்லை. கோபம் வந்தா உடம்பு அதிரும், பசி வந்தா வயிறு சுண்டும், தாகம் வந்தா நாக்கு வறளும். ஆனால், இந்தக் காதல் வந்தா மட்டும் பிரச்னை உடம்பிலேயா, மனசிலேயான்னு கண்டுபிடிக்க முடியாது.

அந்த மாய வடிவத்தை ‘இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும்’ படத்தில் எங்களால் முடிஞ்ச அளவுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கோம். சங்க கால இலக்கியங்களில் இருந்து இன்ஸ்டாகிராம் சீஸன் வரைக்கும் இன்னும் சொல்லித் தீராத ஒரே விஷயம் காதல்தான்...’’ அழகிய வண்ணங்கள் தொடுத்துப் பேசுகிறார் ஹரிஷ் கல்யாண். இப்போது அவர் காட்டில்தான் மழை. அடுத்தடுத்து பக்குவமான படங்களின் வரிசை காத்திருக்கிறது.
தலைப்பே வித்தியாசப்படுது...

முரட்டுத்தனமான காதலின் சில வடிவங்கள் இருக்கு. அவங்க கோபதாபம், மகிழ்ச்சி, பிரச்னை... இப்படி காதலின் அருமையான பக்கங்கள் வெளிப்பட்டிருக்கு. காதல்ங்கிற பெயரில் இருபாலாரும் கட்டுப்பட்டு, சுதந்திரம் போய், சுயம் கெட்டு இருக்காங்களோன்னு ஒரு சந்தேகம் கூட வருது.
 
இந்த ஹீரோ தன்னை மறுபரிசீலனை செய்துகூட பார்த்துக்க தயாராகிறான். எல்லா கற்பனைகளுக்கும் அப்பாற்பட்ட அற்புதங்களும் அபத்தங்களும் கொண்டது காதல். இரண்டு இதயங்களுக்கு மட்டுமே கேட்கிற இன்னிசையை, பிரச்னையை, உண்மையை எல்லோருக்கும் கேட்கச் செய்கிற முயற்சிதான் டைரக்டர் ரஞ்சித் ஜெயக்கொடியோட இந்தப்படம்.

சத்தியமாக காதலால்தான் இயங்குகிறது இந்த உலகம். காதலில் அளவு கடந்த சந்தோஷம் வரும். அந்த உற்சாகத்துக்குக் காரணம் தெரியாது. சமயங்களில் தாள முடியாத துயரம் மனசைக் கவ்வும். அந்த வேதனை ஏன் எனப் புரியாது. காதல் அப்படித்தான்.காதலை இன்னொரு பேர்ல சொல்லணும்னா... நம்பிக்கை. அப்படி தனக்கான, உண்மையான காதலை ஒருத்தன் தேடி அடைகிறானா என்பதுதான் இந்தப்படம்.

அன்பு, நம்பிக்கை, உண்மை, பொய், எல்லாத்தையும் இதில் காண்பிச்சு தர்றோம். ரொம்ப சிம்பிளான லைன்ங்க. லைஃப்ல சில காதலால் எப்படியெல்லாம் மாற்றம் நடக்கும்னு இதில் இடங்கள் இருக்கு. காதல் உணர்வா அல்லது தன்னை உணர்தலான்னு ஒரு கேள்வி மறுபக்கம் போகும். சார், இங்கே தனக்குன்னே பிறந்த ஒருத்தியைப் பார்க்காமலே பலர் செத்துப் போயிடறாங்க.

பார்வையற்றவர்கிட்டே ‘ரோஜாப்பூ எப்படி இருக்கும்’னு கேட்டா ‘வாசனையா’ன்னு சொல்வார். ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி எப்படி இருப்பாங்க’ன்னு கேட்டா, ‘காற்றிலே வரும் கீதம் மாதிரி’ன்னுதானே சொல்வார். அப்படி தனக்காக ஒரு காதலை படத்தில் முரட்டுத் தனமாகக் கண்டு எடுக்கிறவன்தான் நான். இதில் இப்ப இருக்கிற ஹை-டெக் வாழ்வின் அவஸ்தைகள் கூட இருக்கு.

உங்க ஜோடி ஷில்பா மஞ்சுநாத் படு ஸ்மார்ட்...

கண்ணு வைக்காதீங்க! ஆனா, அப்படியும் உங்ககிட்டே சொல்ல முடியாது. நீங்க கண்ணு வைச்சாதானே பொண்ணு ஹிட்!

ஷில்பா மஞ்சுநாத், ரொம்ப சின்ஸியர் ஆர்ட்டிஸ்ட். ‘காளி’ படத்தில் கண்டாங்கி சேலை கட்டிட்டு வந்த பொண்ணை இதில் அல்ட்ரா மாடர்ன் ஆக்கிட்டோம். படத்திற்கான தேவைகள், அவசியம், மூடு எல்லாம் தெரிஞ்ச பொண்ணு. அவங்களே படத்திற்கு தமிழ் பேசி  அழகு செய்தாங்க. யாரோ பேசிக்கட்டும்னு இருந்திட்டு போயிருக்கலாம். அப்படியே பாதி வேலை குறையும்.

ஆனால், அப்படி ஏதும் செய்திடாமல் அவங்களே டப்பிங் பேசினாங்க. எங்க ஜோடி இதில் மிகவும் பேசப்பட்டால் அதில் பாதிக்கு மேலே அவங்களுக்கும் பங்கு இருக்கு. கதையின் ஃப்ரெஷ்னஸ்ஸை அவங்க கூட்டியிருக்காங்கன்னு சொல்வேன். இந்தப் படத்திற்கு முன்னாடி வரை கொஞ்சம் சாக்லேட் பாய் மாதிரி இருந்தவனை, தாடி வளர்த்து அல்லும் பகலுமா ஜிம்மில் பழிகிடக்க வச்சு என்னை ஒரு இறுக்கமான, கோபக்கார இளைஞன் வடிவத்திற்கு ரஞ்சித் சார் மாற்றினார். யாருமே ஒரே ஆளா படத்தை தோளில் வைச்சு சுமக்காமல் எல்லோருக்கும், எல்லாவிதத்திலும் இந்தப்படத்தில் பங்கு இருக்கு.

பாடல்கள் அருமையாக இருக்கு... இழைச்சு இருக்காங்க...ஆமா, சாம் சி.எஸ். இழைச்சுப் பண்ணின பாடல்கள்தான். ‘சண்டாளி...’ பாடல் ஏற்கனவே வெளியாகி களை கட்டிவிட்டது. இவரை எங்க இயக்குநர் ரஞ்சித்தான் அறிமுகப்படுத்தினார். அப்புறம் ‘விக்ரம் வேதா’வில் அவர் செய்ததெல்லாம் பெரிய மேஜிக். இப்போ இந்தப்படத்திலும் மியூஸிக் அவ்வளவு லவ்வபிளா இருக்கு.

என்னோட ‘பியார் பிரேமா காதலு’ம் இசையால் பெரிதும் கவனம் பெற்ற படம். அதே மாதிரியான சிறப்பை இந்தப்படமும் பெற்றிருக்கு. அப்படியே காதலை அள்ளிக்கொண்டு போய் அந்தரத்தில் ஊஞ்சல் கட்டி ஆட வைத்திருக்கிறார் சாம் சி.எஸ்.
21 வயது மட்டுமே ஆன கவின் ராஜ்தான் ஒளிப்பதிவாளர். இவ்வளவு குறைந்த வயதில் யாரும் ஒளிப்பதிவாளராக ஆகியிருப்பார்களா எனத் தெரியவில்லை.

காதலுக்கு திவ்யமான பக்கம் ஒன்று உண்டு. யாரோ ஒருவருக்காக தன் அத்தனை உறவுகளையும் உதறிவிட்டு புதிய உலகத்துள் பிரவேசிப்பது போலவே, எல்லோருக்காகவும் அந்த உலகத்தையே உதறுவதும் கூட திவ்யம்தான். காதல் ஒன்றை அடைதல் அல்ல; உணர்தல். வாங்க… காதலின் பக்கங்களைப்
பேசலாம்.


நா.கதிர்வேலன்