ஆபாசத்தை விதிக்கிறதா டிக்டாக்..?



அலெக்ஸ் ஜூவிற்கும், அவர் நண்பர் லுயு யாங்கிற்கும் ஒரு தெளிவான நோக்கம் இருந்தது. சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும். வருங்காலம் என்பது வீடியோக்கள்தான். அதனால் ஒருசில நிமிடங்கள் தங்கள் அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் விக்கி பீடியா போன்ற ஒரு சமூக வலைத்தள அறிவுச் சுரங்கத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் கனவு.  

பல லட்சம் ரூபாய் செலவில் ஒரு செயலியையும் உருவாக்கிவிட்டார்கள். அந்த செயலியின் (app) பெயர் மியூசிகலி.அட்டர் ஃப்ளாப்.சரி; இருக்கும் கொஞ்சம் பணத்தை வைத்து அந்த செயலியை மேம்படுத்தி அப்போது பிரபலமாக இருந்த டப்ஸ்மாஷ் போல் ‘லிப்-சிங்’ app ஆக மாற்றி வெளியிட்டார்கள். அதே மியூசிக்கலி இப்போது சூப்பர் டூப்பர் ஹிட்!சில நாட்களில் பல லட்சம் பயனர்களுடன் பல கோடிகளுக்கு ‘டிக்டாக்’ என்னும் நிறுவனம் அந்தச் செயலியை வாங்கி விட்டது.  

இச்செயலி டிக்டாக் நிறுவனத்துக்கு லாபத்தைக் கொடுத்தது. ஓவர்நைட்டில் பயனாளிகள் அதை சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.டிக்டாக் செயலியை பயன்படுத்திய பலருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்தன. சிலருக்கு மேடைகளில் வாய்ப்பை அள்ளிக் கொடுத்தது. இப்படி ஒரு நிறுவனத்துக்கு பெரும் லாபத்தையும் பயனாளிகளில் பலருக்கு ஏற்றத்தையும் கொடுத்த அந்த செயலியைத்தான் உலகிலுள்ள பல அரசுகள் தடை செய்ய வேண்டும் என்று போராடி வருகிறார்கள்.  

தமிழகத்தின் தகவல் தொடர்பு அமைச்சர் கூட விரைவில் டிக்டாக்கை தடைசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

ஏன்? அப்படி அச்செயலியில் என்னதான் பிரச்னை?

நீங்கள் டிக்டாக் செயலியை ஒருசில நிமிடங்கள் கவனித்தாலே பிரச்னையின் ஆணிவேர் புரிந்துவிடும். ஒரு நிமிடம் ஓடக்கூடிய வீடியோக்கள். அடுத்த வீடியோ பார்க்க கீழிருந்து மேல் நோக்கித் தள்ள வேண்டும். ஒரு வீடியோவில் ஒரு பாட்டுக்கு அற்புதமாக நடனமாடுகிறார்கள்.அடுத்து ஒரு வடிவேலுவின் வசனத்துக்கு சரியாக லிப்சிங் கொடுக்கிறார்கள்.ஒரு சிறுமி தன் தாய் தந்தையுடன் நடனமாடும் வீடியோ.
ஒரு பெண் இறுக்கமான உடை அணிந்து நடனமாடும் வீடியோ.

மத்திய வயதுடைய ஒரு பெண் சேலையை அரைகுறையாக விலக்கி உடல் பாகங்கள் தெரிவதுபோல் நடனமாடும் ஒரு வீடியோ.
ஒரு மீனவர் கடலில் இருந்தபடி தன் அனுபவங்களை பகிர்கிறார்.ஒரு பெண் கட்சி உடையணிந்து தன் பின்பக்கத்தைக் காட்டி நடனமாடுகிறார்.
இன்னொரு பெண் மிகவும் குறைந்த ஆடையுடன் தன் அங்கங்கள் வெளிப்படையாகத் தெரிவதுபோல் உடற்பயிற்சி செய்கிறார்.

ஒரு பெண் தலைவிரிகோலமாக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் பேட்டிக்கு லிப்சிங் கொடுக்கீறார். இன்னொருவர் எச்.ராஜாவுக்கு. அடுத்தவர் இன்னொரு கட்சித் தலைவருக்கு...இரு மாணவர்கள் கெட்ட வார்த்தைகளில் திட்டிக் கொள்கிறார்கள்...இப்படியாக வீடியோக்கள் சென்றுகொண்டே இருக்கின்றன.இந்தச் செயலியைப் பயன்படுத்திப் பார்க்க ஆரம்பித்தால் நேரம் கடப்பதே தெரியாது. ஏனெனில் எல்லாமே சுவாரசியமாக இருக்கின்றன.

அதேநேரம் முகம் சுளித்து பதற்றமடையும் வகையிலும் எண்ணற்ற வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. ஆபாச நடனங்களும், வசவு வார்த்தை
களும், பெண்களை இழிவாகத் திட்டி கேலி செய்வது, சாதிப் பெருமை பேசுவது... என சகலமும் டிக்டாக் வீடியோக்களில் உண்டு. அதுவும் பத்துக்கு எட்டு வீடியோக்கள் இப்படித்தான்.

வருத்தப்பட வேண்டிய விஷயம், இதில் பங்கேற்கும் பெண்கள் தெரிந்தே தங்களை எக்ஸ்போஸ் செய்து ஆபாசமாக நடனமாடுவதுதான். குறிப்பாக 18 வயதுக்கும் குறைந்தவர்கள். இதன்மூலம் வரும் ஆபத்துகளை அவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அதிகமாக லைக் பெறவேண்டும்... தங்கள் வீடியோ அதிகமானவர்களால் பார்க்கப்பட வேண்டும்... என்ற ஒரே உந்துதல் காரணமாக மெல்ல மெல்ல தங்களை எக்ஸ்போஸ் செய்கிறார்கள். அதாவது லைக்கும் கமெண்ட்டுகளும் அவர்களை வெறியேற்றுகின்றன.

அமெரிக்காவிலுள்ள ஒரு பள்ளி மாணவர்கள், தங்களில் யார் அதிக லைக்குகளைப் பெறுகிறார்களோ அவரே சூப்பர் ஸ்டார் என ஒரு புள்ளிவிவரத்தில் சொல்லியிருப்பதை இங்கு நினைவுகூரலாம். இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தைப் பெறுவதற்காக எந்த நிலைக்கும் இறங்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை.

டீன் ஏஜ் என்பது மனதளவில் தங்களுக்கான அடையாளத்தை சமூகத்தில் தேடும் பருவம். மெல்ல மெல்ல இப்படி உருவாகும் அடையாளத்தை வைத்துதான் பிற்காலத்தில் தங்களுக்கான இணையை தேர்வு செய்வார்கள்.இது இயற்கை. அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை.
இந்நிலையில் டீன் ஏஜ் பருவத்தில் இருப்பவர்கள் தங்களுக்குள் உருவாக்கும் வேல்யூ சிஸ்டம் இன்று சமூக வலைத்தளங்கள், டிக்டாக் மாதிரியான வீடியோக்களுக்கு வரும் லைக்குகளை அடிப்படையாக வைத்து உருவாகிறது என்பது உண்மையிலேயே பிரச்னைக்கு உரியதுதான். இதுவே வெறி பிடித்து அலையும்படியான மனநோய்க்கு தள்ளிவிடுகிறது.

சரி; டிக்டாக் ஏன் ரசிக்கும்படியாக உள்ளது?
மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரை எல்லோருமே இன்று மன அழுத்தத்துடன் வாழ்ந்து வருகிறோம். ஏன், எதற்கு என்றே தெரியாமல் காலில் சக்கரம் கட்டிக்கொண்ட கதையாக சகலரும் ஓடுகிறோம், ஓடுகிறோம்... ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

இப்படிப்பட்ட அவசர யுகத்தில் ஒருசில நொடிகள் பொழுதுபோக்க கிடைத்தால் எப்படி மகிழ்ச்சியாக இருக்கும்..? அந்த பொழுதுபோக்கும் கொஞ்சம் நகைச்சுவையும் கவர்ச்சியும் கலந்திருந்தால்..? கேட்கவே வேண்டாம். மன அழுத்தத்துக்கான மருந்தாக இந்த பொழுதுபோக்கையே அனைவரும் தேர்வு செய்வோம்.இந்த அடிப்படைதான் டிக்டாக்குக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு.

சரி. டிக்டாக்கை தடை செய்ய முடியுமா?
தொழில்நுட்ப ரீதியில் வலுவாக இருக்கும் அரசு நினைத்தால் முடியும். ஆனால், இதேபோன்ற பல செயலிகள் ஏற்கனவே சந்தையில் இருக்கின்றன. தவிர, டிக்டாக் போலவே இன்னொரு செயலி வேறொரு பெயரில் நொடியில் புழக்கத்துக்கு வந்துவிடும்.இதை மனதில் கொண்டு வேறு என்ன செய்யலாம் என்று யோசிப்பதே புத்திசாலித்தனம். டிக்டாக் கத்தி போன்றது. இதை வைத்து காய்கறிகளும் வெட்டலாம். மனிதர்களையும் குத்தலாம். எப்படி பயன்படுத்தப் போகிறோம் என்பதில்தான் எல்லா கண்டுபிடிப்புகளின் சாதகங்களும் அடங்கியிருக்கின்றன!         

டிக்டாக் மட்டும்தான் ஆபாசமா..?

கண்ணியமாக டிக்டாக் பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?  

மிருணாளினி: TikTok மட்டும்தான் ஆபாசத்தை புரமோட் செய்யுதா? இதைவிட மோசமான இணையதளங்கள், கூகுள் பிரவுஸர்கள்லயே கிடைக்குமே. அதையெல்லாம் முதல்ல தடை செய்யாம ஏன் டிக்டாக்?முதல்ல டப்ஸ்மாஷ் ஆப்தான் அதிகம் பயன்படுத்தினேன். டிக்டாக் மாதிரி நிறைய ஆப் இருக்கு. எப்படி ஒரு சேனல் நிகழ்ச்சி பிடிக்காம அடுத்த சேனல் நிகழ்ச்சியைப் பார்க்க ஆரம்பிக்கிறோமோ அப்படி ஆபாச டிக்டாக் வீடியோவை பார்க்காம காமெடி டிக்டாக் வீடியோவை பார்க்க ஆரம்பிக்கலாமே!

ஒருசிலர் ஆபாச அசைவுகள் கொண்ட டிக்டாக் வீடியோஸை டவுன்லோட் செஞ்சு அதை ஒரு தொகுப்பா மத்தவங்களுக்கு அனுப்பறாங்க. இப்படி ஃபார்வர்ட் செய்வதைக் கட்டுப்படுத்தினாலே டிக்டாக் ஆரோக்கியமாகும்.டிக்டாக்தான் எனக்கு சினிமா வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்துச்சு. எனக்கு மட்டும் இல்லை, பல பேருக்கு இதன்மூலம் வாழ்க்கையே மாறியிருக்கு. ஒருசிலர் செய்யற தவறால இன்னைக்கு இப்படி ஒரு நிலை.

கேப்ரில்லா: தடையை நான் வரவேற்கறேன். ஏன்னா ஒரு ஆப் போனால் இன்னொரு ஆப் கிடைக்கும். ஆனா, இந்த ஆபாசமான வீடியோக்கள் பண்ற மக்களுக்கும் அதுக்கு லைக், ஷேர்னு கொண்டாடின பார்வையாளர்களுக்கும் யார் குற்ற உணர்ச்சியைக் கொடுக்கறது? நாம பண்ண தவறான வீடியோக்களால ஒரு செயலியே தடை செய்யப்பட்டிருக்குனு அவங்க ஃபீல் பண்ணணும். அப்பதான் இது ஒரு பாடமா அமையும்.

டிக்டாக் மூலம்தான் எனக்குப் பல வாய்ப்புகள் கிடைச்சது. என் திறமையைக் கொண்டாடுகிற மக்கள், டிக்டாக் இல்லாம வேறு செயலில நான் வந்தாலும் என்னை ஆதரிப்பாங்க. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு!அபர்ணா: என் கமெண்ட் பாக்ஸ் எப்பவும் ஓபன்லதான் இருக்கும். ஏன்னா, நான் பதிவேற்றுகிற வீடியோக்கள்ல எந்த ஆபாசமும் இல்ல. அதனாலயே வக்கிரமான கமெண்ட்ஸ் எனக்கு வருவதில்லை. பாராட்டிதான் மறுமொழி எழுதறாங்க.

ஆனா, சிலர் ஆபாச வீடியோக்களை பதிவேற்றுவதுடன் கமெண்ட் பாக்ஸையும் ஓபன் பண்ணி வைக்கிறாங்க. வக்கிரமா எழுதப்படும் கமெண்ட்ஸைப் பார்த்து ரசிக்கறாங்க. இந்த மனநிலையை என்னனு சொல்றது..?

அரசாங்கமே இதை பெரிய விஷயமா எடுத்து நடவடிக்கை எடுக்கறாங்கன்னா... நிச்சயமா ஏதோ பெரிய அளவுல பாதிப்பு ஏற்பட்டிருக்குனுதான் அர்த்தம். அதனால தடை செய்யணும் என்பதை ஆதரிக்கறேன். இனியாவது இது மாதிரி வரும் செயலிகளை ஆரோக்கியமாகப் பயன்படுத்துவோம்.

பிரேம்: ஆன்லைன் மீடியம்ல நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். அதை நாம எதுக்காக பயன்படுத்துறோம், எப்படி பயன்படுத்துறோம் என்பதைப் பொறுத்துதான் அந்த app சக்சஸ் ஆகும்.டிக்டாக்கைவிட மோசமா ஆபாசங்களை புரொமோட் செய்யற மீடியம்ஸ் ஆன்லைன்ல நிறைய இருக்கு. அப்படியிருக்க ஏன் டிக்டாக்கை மட்டும் குறி வைச்சு தடை செய்யணும்னு சொல்றாங்கனு தெரியலை.

டிக்டாக் பயன்படுத்தற எல்லாருமே தவறா அதை யூஸ் பண்றதில்லை. ஆபாசமான வீடியோக்களை ரிப்போர்ட் செஞ்சு ப்ளாக் பண்ண வைக்கலாம். அல்லது சம்பந்தப்பட்ட அக்கவுண்ட்டை மட்டும் டெலீட் செய்யலாம். ஒரேயடியா டிக்டாக்கை தடை செய்யாம இதுமாதிரி மாற்று வழிகளை அரசு யோசிக்கலாம்.

மொஹம்மது சுஹைல்: நானே கேமராவுல வீடியோவா எடுத்துதான் அதை டிக்டாக்குல போஸ்ட் பண்றேன். நிறைய பேர் என்னை ஃபாலோ பண்றாங்க. ஒருவேளை டிக்டாக் தடை செய்யப்பட்ட இன்னொரு ப்ளாட்ஃபார்ம் வழியா அவங்களை எல்லாம் சென்றடைவேன். அந்தளவுக்கு என் திறமை மேல நம்பிக்கை இருக்கு!

உண்மைல ஆபாச வீடியோவை பதிவேற்றுபவர்களை விட அதை லைக் செய்து ஷேர் செய்யறவங்கதான் குற்றவாளிகள். நடக்கிற சர்ச்சைகளை ஒரு பாடமா எடுத்துக்கிட்டு இனிமேலாவது ஆன்லைன் வசதிகளை சரியா பயன்படுத்தினா எல்லாருக்கும் நல்லது.  

- ஷாலினி நியூட்டன்

வினோத் ஆறுமுகம்