பகவான் - 17



மகன் காலில் விழுந்து ஆசி வாங்கிய தாய்!

பகவான் என்றால் கடவுள் என்று பொருள் என எல்.கே.ஜி குழந்தைக்குக் கூடத் தெரியும்.அப்படியிருக்க ஓஷோவின் சிஷ்யர்கள், அவரை ‘பகவான்’ என்று அழைக்கத் தொடங்கியதற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்க வேண்டுமே?கிளம்பியது.

ஓஷோவோ, அதை தன்னுடைய தனித்தன்மையான தர்க்கத்தால் எதிர்கொண்டார்.“நான் மட்டுமல்ல. அனைவருமே பகவான்தான். இறைவன் நம் அனைவருக்குள்ளும் நிறைந்திருக்கிறான். உயிர்களில் மட்டுமல்ல. மலை, மரம், காற்று, கடல் என்று எல்லா இடத்திலும் அவன் வீற்றிருக்கிறான். நமக்குள் இருக்கும் இறைத்தன்மையை உணர்பவர்கள் இத்தகைய கேள்வியை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்...” என்று கூறி வாயடைத்தார்.
தன்னை உணர்ந்தவர்கள் யார் வேண்டுமானாலும் தங்களைத் தாங்களே பகவான் என்று அழைத்துக் கொள்ளலாம் என்றும் அறிவித்தார். ஆன்மீகத்தில் ஓஷோ நிகழ்த்திக் காட்டிய இந்த தாராளவாதமே அவரை உலகெங்கும் விரைவில் பிரபலமாகச் செய்தது.

மேற்கத்திய நாடுகளில் அவரை ‘வாழும் புத்தர்’ என்று அழைக்கத் தொடங்கினார்கள். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இருந்தும் பல நூறு பேர் இந்தியாவுக்கு வந்து ஓஷோவிடம் சன்னியாசம் வாங்கி, புதிய சன்னியாசிகள் இயக்கத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டார்கள்.

ஓஷோவைப் பெற்ற தாயார் சரஸ்வதியே கூட ஓஷோவிடம் சன்னியாசம் பெற்று, சீடராக இணைந்தார். அவருக்கு ‘மா அம்ருத் சரஸ்வதி’ என்கிற புதிய பெயரைச் சூட்டினார் ஓஷோ.சன்னியாசம் பெற்றதுமே ஓஷோவின் காலில் அவரது தாயாரும், தாயாரின் காலில் ஓஷோவும் விழுந்து வணங்கினார்கள்.தாயிடம் மகன் ஆசி பெறுவது உலக வழக்கம்.

ஆனால் -மகனின் காலில் தாய் விழுந்து வணங்கி எழுந்தது 50 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் விசித்திரமான செய்தியாக  ஊடகங்களில் பேசப்பட்டது.
அதற்கு மா அம்ருத் சரஸ்வதியே விளக்கம் அளித்தார்.“ஓஷோ, உலகுக்கெல்லாம் பகவான். அவரிடம் சன்னியாசம் பெற்ற நான், அவரது காலில் விழுந்து வணங்குவதுதான் முறை. அதே நேரம், அந்த பகவானை பத்து மாதம் சுமந்து பெற்ற தாய் நான். தாய்க்கு ஒரு மகன் என்ன மரியாதை செய்யவேண்டுமோ அதை ஓஷோ செவ்வனே செய்தார்...”

ஓஷோவுக்கு சீடர்கள் பெருகிக்கொண்டே போனதால், அவர் பொதுமக்களை கூட்டங்களில் சந்தித்துப் பேசுவது குறைந்துக்கொண்டே போனது. எப்போதும் சீடர்கள் மத்தியிலேயே அவர் இருக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.1970களின் தொடக்கத்தில் அவரிடம் சன்னியாசம் பெற்றவர்கள் பலரும் கடைசிவரை அவருடனேயே மிகவும் விசுவாசமாக பல்வேறு நெருக்கடிகளின் மத்தியிலும் இருந்து வந்தனர்.

சீடர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே சென்றதால் அவர்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஏற்பாடுகளில் ஓஷோ இறங்கினார்.
ஓஷோவின் ஆன்மீகம், நிறுவனமயமாகத் தொடங்கியது மிகச்சரியாக இந்தக் காலக்கட்டத்தில்தான்.ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் சீடர்களை மொழிப் பிரச்னை காரணமாக உள்ளூர் சீடர்களால் சரிவர கவனிக்க முடியவில்லை. தென்னாப்பிரிக்காவைச் சார்ந்த சன்னியாசியான சுவாமி ஆனந்த் வீட்ராக் என்பவரை இவர்களுக்காக பிரத்யேகத் தலைவர் ஆக்கினார்.

மும்பையிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் ‘சமர்ப்பண்’ என்கிற மையமும், வான் கங்கா நதிக்கரையில் கைலாஷ் என்கிற ஆசிரமத்தையும் அமைத்தார்கள். இவற்றையெல்லாம் கவனித்துக் கொள்ள ஓஷோவின் நெருங்கிய சீடர்களுக்கு பொறுப்புகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன.

ஓஷோவுக்கு commune எனப்படும் சாதி, சமயம், மொழி, நாடு வேறுபாடுகள் இல்லாமல் அனைத்துத் தரப்பும் ஒரே சமூகமாக சேர்ந்து வாழும் அமைப்பு மிகவும் பிடிக்கும். அவர் தொடங்கிய மையங்களிலும், ஆசிரமங்களிலும் இந்த கம்யூன் முறையையே செயல்படுத்தினார். எல்லோருக்கும் ஒரே மாதிரி வாழ்விடங்கள்தான். எல்லோருக்குமே பணிகள் சரிசமமாக பங்கிட்டுத் தரப்படும். உலகின் பெரிய பணக்காரர்கள் கூட ஓஷோ ஆசிரமங்களில் கோடரி கொண்டு மரம் வெட்டிக் கொண்டிருப்பார்கள். சமையலறைகளில் காய்கறி வெட்டித் தருவார்கள். வயல்களில் உழுது கொண்டிருப்பார்கள்.

தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவார்கள். கடுமையான உடல் உழைப்பைச் செலுத்தி அலுத்தவர்கள், தியானம் மூலமாக தங்களைப் புத்துணர்வுக்கு உள்ளாக்கிக் கொள்வார்கள். ஆணவத்தைக்  கைவிடுவதே ஆன்மீகம் என்று ஓஷோ வலியுறுத்தினார்.

பொதுவாக ஓஷோவின் ஆசிரமங்களில் இருந்த நடைமுறை இதுதான். அனைவருமே அதிகாலை நான்கு மணிக்கு எழுந்துகொள்ள வேண்டும். தியானப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகு ஆசிரமப் பணிகளை காலை பத்து மணி வரை செய்ய வேண்டும். ஆற்றில் குளித்துவிட்டு, மதிய உணவுக்குப் பிறகு ஓய்வெடுக்கலாம். மீண்டும் நான்கு மணியிலிருந்து பணிகள் தொடங்கும். ஏழு மணி வரை கடுமையான உடல் உழைப்பைச் செலுத்தியவர்களுக்கு இரவு உணவு கிடைக்கும். அதன் பின்னர் நடனம், தியானமென்று களைகட்டும். அதன்பின் உறக்கம்.

இந்த வாழ்க்கை முறை பலருக்கு ஆனந்தத்தையும், சிலருக்கு அலுப்பையும் தந்தது. அலுத்தவர்கள் சீக்கிரமே ஆசிரமத்தை விட்டு விலகினார்கள். ஆனந்தத்தை உணர்ந்தவர்கள் ஓஷோவுக்கு மேலும் நெருக்கமானார்கள்.வெளிநாட்டு சீடர்கள் பெரும்பாலும் கைலாஷ் ஆசிரமத்தில் இருந்தார்கள். உள்நாட்டு சீடர்களை கீர்த்தன் மண்டலி என்கிற பெயரில் சிறியளவிலான குழுக்களாகப் பிரித்தார்கள். இவர்கள் நகரங்கள், ஊர்கள், கிராமங்களுக்கு எல்லாம் சென்று மக்களுக்கு தியானம் கற்றுத் தருவார்கள். ஓஷோவின் கருத்துகளை பிரச்சாரம் செய்வார்கள்.

இந்நிலையில் நாற்பது வயதைக் கடந்த ஓஷோவுக்கு சராசரியான உடல் உபாதைகள் ஏற்படத் தொடங்கின. சீடர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் அவரால் சரியான சமயங்களில் உணவு எடுத்துக்கொள்ள முடியவில்லை. போதிய ஓய்வும் கிடைக்காது. ஆஸ்துமா, சர்க்கரை நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டார்.

மும்பையிலிருந்து வேறொரு இயற்கைச்சூழல் வாய்ந்த இடத்தில் ஆசிரமம் அமைத்துக்கொண்டு தன் உடல்நலத்தை மேம்படுத்த வேண்டும் என்று எண்ணினார்.கட்டிவா என்றால் வெட்டிவரும் சீடர்கள், தங்கள் பகவானுக்காக மும்பையிலிருந்து 130 கி.மீ தொலைவில் புதிய மையம் ஒன்றை உருவாக்கினார்கள். பூனே நகரின் சந்தடிக்கு வெளியே, கோரகன் பூங்கா என்கிற இடத்தில் இயற்கை எழில் சூழ்ந்த வளாகத்தில் ரஜனீஷ் அறக்கட்டளை இப்படித்தான் உருவானது. அதுவே உலகப் புகழ்பெற்ற ரஜனீஷ் ஆசிரமம் ஆக உருவெடுத்தது.

(தரிசனம் தருவார்)

அணைந்தது தீ!

ஓஷோ, முற்றிலும் கனிந்தவராக 70களின் மத்தியில் மாறினார்.உச்சிவேளையில் சுட்டெரிக்கும் கதிரவனின் வெப்பம், படிப்படியாகக் குறைந்து மாலைவேளைகளில் தென்றல் வீசுவது மாதிரியான மனநிலைக்கு இப்போது, தான் வந்திருப்பதாக அவர் கூறினார். அதாவது இதுநாள் வரை தனக்குள் எரிந்துகொண்டிருந்த தீ அணைந்துவிட்டதாகவும், இனிமேல் எதிர்மறை கருத்துகள் கொண்டிருப்போரிடம் விவாதம் செய்யப் போவதில்லை என்றும் அறிவித்தார்.

மனிதனின் இயல்பான தமோகுணம், ரஜோகுணம் கடந்த சத்வகுணம் என்கிற புதிய பரிணாமத்துக்கு தான் உள்நுழைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பூனேவில் இருந்தபோதுதான் தன்னுடைய உரைகளை ஆங்கிலத்திலும் நிகழ்த்தத் தொடங்கினார். பகவத்கீதையின் உண்மைப்பொருளை பேருரைகளாகக் கொடுத்தார்.

உடல்நலம் குன்றிய நிலையில் தியான வகுப்புகளில் கலந்துகொள்வதையும் ஓஷோ குறைத்தார். அவருக்குப் பதிலாக அலங்கரிக்கப்பட்ட நாற்காலி ஒன்று மத்தியில் இருக்கும். அதில் ஓஷோ அமர்ந்திருப்பதாக, தியான வகுப்புகளில் கலந்துகொள்வோர் கருதி, தியானம் செய்வார்கள்.உடல் என்பது நிலையற்றது.

தன்னுடைய உடல் மறைந்தபிறகும் தனக்கான இருக்கை இருப்பதாக நினைத்து தன்னுடைய கருத்துகளைப் பின்பற்றவேண்டும். தியானமுறைகளைப் பின்பற்றி, மக்களிடமும் எடுத்துக்கூற வேண்டும் என்று சீடர்களிடம் அடிக்கடி சொல்ல ஆரம்பித்தார்.

தன்னுடைய சொந்த உடலைப் பரிசோதித்து, வேறு சில புதிய முறைகளையும் அறிமுகப்படுத்தினார். தியானம் மட்டும் போதாது, அனைவரும் தெரப்பி சிகிச்சைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இரண்டும் இணைந்தால்தான் போதுமான பலன் கிடைக்கும் என்றார்.ஓஷோவிடம் தெரப்பி சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்த சீடர்களும் இருந்தார்கள். அவர்கள் மூலமாக அனைவருக்கும் தெரப்பி வழங்கப்பட்டது.

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்