கருஞ்சிறுத்தைகள் இருக்கின்றன!



பிளாக் பேந்தர் எனப்படும் கருஞ்சிறுத்தைகள் உண்மையிலேயே இருக்கிறதா?
இருக்கிறது. ஆப்பிரிக்கக் கண்டத்தில் `பிளாக் பேந்தர்’ இருந்ததற்கான தெளிவான ஆதாரம் கடைசியாகக் கிடைக்கப்பெற்றது 1909ல்.இப்போது 100 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஆப்பிரிக்காவில் தெளிவாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது இந்த `பிளாக் பேந்தர்’! கென்யாவின் லைகீபியாவின் வனப் பகுதியில் (Laikipia Wilderness Camp) ஒரு கருஞ்சிறுத்தை தென்படுவதாக கடந்த ஆண்டே பலரும் சொல்லி வந்தனர்.

இதை அறிந்த வில் புரார்ட் லூகாஸ் என்னும் பிரிட்டிஷ் புகைப்படக் கலைஞர் அங்கு சென்றார். இவர், மறைந்திருக்கும் விலங்குகளைத் தனது கேமரா ட்ராப்கள் (camera trap) மூலம் படம் பிடிப்பதில் கெட்டிக்காரர். ஒருவகையில் பொறி வைத்து விலங்குகளைப் பிடிப்பதுபோல்தான் இதுவும் ரைட். எப்படி கருஞ்சிறுத்தையை புகைப்படம் எடுத்தார்?

வயர்லெஸ் மோஷன் சென்சார் உள்ளிட்ட பல கருவிகளை இதற்குப் பயன்படுத்தி இருக்கிறார். சிம்பிளாக இதையெல்லாம் எப்படிச் செய்யலாம் என யூடியூப்பில் வீடியோவாகவும் பதிவேற்றி இருக்கிறார்.

விஷயத்துக்கு வருவோம். வனப்பகுதி முகாமைச் சேர்ந்த ஸ்டீவ் மற்றும் லுயிசா அன்சிலொட்டோ ஆகிய இருவரின் உதவியோடு கருஞ்சிறுத்தையின் கால்தடங்களை வைத்து ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சுற்றி இந்த ட்ராப்புகளை செட் செய்திருக்கிறார் வில். அதாவது அது கருஞ்சிறுத்தையா இல்லை சாதாரண சிறுத்தையா என்பது கூட தெரியாமல் குத்துமதிப்பாக இதைச் செய்துவிட்டு காத்திருக்கத் தொடங்கினார்.

முதல் மூன்று இரவுகள் எந்த விலங்கும் தட்டுப்படவில்லை. கழுதைப் புலிகள் மட்டுமே கேமராவில் பதிவாகின. என்றாலும் மனம் தளராமல் நான்காவது இரவிலும் கேமராவை செட் செய்திருக்கிறார்.அதிசயம், ஆனால் உண்மை. இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் கருஞ்சிறுத்தையை அன்று அவர் கேமரா க்ளிக்கி இருக்கிறது! வாவ்... என துள்ளிக் குதித்தவர் அடுத்தடுத்த நாட்களிலும் அதைப் பின்தொடர்ந்து க்ளிக்கி இருக்கிறார்.இதன்மூலம், பல ஆண்டுகளாக வதந்தியாக மட்டுமே இருந்த ‘கருஞ்சிறுத்தை’ செய்தி உண்மையாகி இருக்கிறது!

தனது பயணத்தையும், பிளாக் பேந்தரை, தான் படம் பிடித்த விதத்தையும் யூ டியூப்பில் பதிவேற்றி இருக்கிறார் (https://www.youtube.com/watch?v=ncHaQ_jG9Xs). இதனைத் தொடர்ந்து இந்த வனப்பகுதியில் உள்ள சிறுத்தை ஆராய்ச்சியாளரான நிக்கோலஸ் பில்ஃபோல்ட், ``100 வருடங்களில் முதல் முறையாக ஆப்பிரிக்காவில் ஒரு கருஞ்சிறுத்தை புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது!’’ என மகிழ்ந்திருக்கிறார்.

உடனே சர்ச்சையும் வெடித்தது. ஏனெனில் 2013ம் ஆண்டு இதே போன்று ஒருவர் கருஞ்சிறுத்தையைப் புகைப்படம் எடுத்துள்ளார் என கென்ய நாளிதழ் ஒன்று எழுதியது.இதற்கு சிறுத்தை ஆராய்ச்சியாளரான நிக்கோலஸ் பில்ஃபோல்ட்டும், பிளாக் பேந்தரை புகைப்படம் எடுத்திருக்கும் வில் புரார்ட் லூகாஸு ம் உரிய விளக்கம் தந்துள்ளனர்.

``100 வருடங்களில் முதல் புகைப்படம் என்ற சொல்லைத் தவறாகப் பொருள் கொண்டுள்ளனர். 100 வருடங்களில் பிளாக் பேந்தரை உறுதிப்படுத்தக் கிடைத்த தெளிவான புகைப்படம் இதுதான் என்றே சொல்ல வந்தோம். ஏனெனில், இத்தனை ஆண்டுகளில் இந்தத் துல்லியத்துடன் வேறு யாருமே கருஞ்சிறுத்தையை போட்டோ எடுக்கவில்லை!’’  ஆக, கருஞ்சிறுத்தைகள் இருப்பது உண்மை!

காம்ஸ் பாப்பா