யார்கிட்ட உதவியாளரா இருந்தேனோ அவர்கிட்டயே முதல் படத்துக்கு அட்வான்ஸ் வாங்கினேன்!



நெகிழ்கிறார் ‘தில்லுக்கு துட்டு 2’ இயக்குநர்

‘தில்லுக்கு துட்டு 2’ வெற்றியால் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாகக் காட்சியளிக்கிறார் இயக்குநர் ராம்பாலா. ‘‘கண்ணாடியும், தொப்பியும் எனது அடையாளம். ‘பாலுமகேந்திரா சார் மாதிரியா’னு கேட்டுடாதீங்க...’’ என நமது புகைப்படக்காரரிடம் சின்ஸியராக சொன்னவர், ‘‘முடி இல்லை என்பது தப்பில்ல... ‘முடியல’னு சொன்னால்தான் தப்பா இருக்கும்!’’ என பன்ச் வைக்கிறார்!‘‘சின்ன வயசில இருந்தே நகைச்சுவையா பேசுவேன்.
என்னைச் சுத்தி இருக்கறவங்களை கலகலப்பா வச்சுக்க பிடிக்கும். எல்லாத்தையும் காமெடியா பார்த்தே பழகிட்டேன். சென்டிமென்ட், சீரியஸ் சீன்ஸ் எல்லாம் ரூம் போட்டு யோசிச்சாதான் வரும். காமெடி அப்படியில்ல. ஏன்னா, டிஸ்கஷன்னு உட்கார்ந்தா காமெடி வராது. ஃப்ரெண்ட்ஸ்கிட்ட கேஷுவலா பேசறப்ப காமெடி பன்ச் கொப்பளிக்கும்.

திடீர்னு ஒருத்தர் ‘பட்’னு ஏதாவது சொல்லுவார். கூட்டமே ‘கொல்லு’னு சத்தமா சிரிக்கும். அந்த ‘பட்’ டெலிவரிலதான் காமெடி ட்ரிக் இருக்கு!ஆக்சுவலா ஆக்‌ஷன் கதையைத்தான் என் முதல் படமா ரெடி பண்ணியிருந்தேன். தயாரிப்பாளர்கள்தான், ‘உங்ககிட்ட காமெடியை எதிர்பார்த்தோம்’னு சொல்லி திருப்பி அனுப்பினாங்க.

அப்பதான் பேயை கலாய்ச்சி ஒரு கதையை பண்ணினேன். ஸ்லாப்ஸ்டிக் காமெடி, முட்டாள்தனமான காமெடி, ஆக்‌ஷன்... எல்லாம் கலந்த கதையா ‘தில்லுக்கு துட்டு’ வெளியாகி, செம ஹிட்டாச்சு. இப்ப ‘தில்லுக்கு துட்டு 2’க்கும் நல்ல ரெஸ்பான்ஸ். ஆடியன்ஸ்ல இருந்து படத்தை வாங்கின விநியோகஸ்தர்கள் வரை அத்தனை பேரும் ஹேப்பி...’’ சந்தோஷத்தில் பூரிக்கிறார் ராம்பாலா.

‘‘பூர்வீகம் கோபிச்செட்டிபாளையம். பிஎஸ்சி பிசிக்ஸ் படிச்சிருக்கேன். எங்க குடும்பமே இசைக்குடும்பம். அண்ணன் வெள்ளியங்கிரி, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் சார் இசைக்குழுவில் இருந்தார். என் சினிமா கனவுகளை அண்ணன்கிட்ட சொன்னேன். அவர் சங்கர் கணேஷ் சார்கிட்ட அதை தெரியப்படுத்த அவர் என்னை ஒளிப்பதிவாளர் ஜே.பி.செல்வம் சார்கிட்ட சேர்த்துவிட்டார். மூணு படங்களுக்கு கேமரா அசிஸ்டென்ட்டா இருந்தேன்.
ஆனா, உள்ளூர இராம நாராயணன் சார்கிட்ட உதவியாளரா சேரணும்னு ஆசை இருந்தது. மெல்ல சங்கர் கணேஷ் சார்கிட்ட சொன்னேன். கோபப்படாம என்னை இராமநாராயணன் சார்கிட்ட சேர்த்துவிட்டார்.

நான்கைந்து படங்கள் அவர் கூட இருந்தேன். அவரோட ஸ்டோரி டிஸ்கஷன்ல ராமராஜனுக்குப் பிறகு கலந்துக்கிட்ட செட்ல நானும் ஒருத்தன். அப்புறம், பாக்யராஜ் சார்கிட்ட ஒர்க் பண்ண விரும்ப... சங்கர் கணேஷ் சார்தான் சேர்த்துவிட்டார்!

முன்னாடி இராம நாராயணன் சார்கிட்ட ஒர்க் பண்ணினதை பாக்யராஜ் சார்கிட்ட சொல்லிக்கல. ஃப்ரெஷ் அசிஸ்டென்ட்டா அவர்கிட்ட ‘அவசர போலீஸ்’, ‘இது நம்ம ஆளு’, ‘ஆராரோ ஆரிராரோ’ படங்கள்ல வேலை பார்த்தேன். அந்த மூணு படங்கள்லயும் சின்னச் சின்ன ரோல்ல நடிச்சிருக்கேன்.
‘அவசர போலீஸ்’ல சில்க் ஸ்மிதா பழக்கடை வைச்சிருப்பாங்க. அந்த சீன்ல நானும் நடிச்சிருக்கேன். ‘இது நம்ம ஆளு’ல ஐயர். ‘ஆராரோ ஆரிராரோ’ல பைத்தியம்!’’ வாய்விட்டுச் சிரிக்கும் ராம்பாலா இதன் பிறகு தனியாக படம் இயக்க முயற்சித்திருக்கிறார்.

‘‘அறிமுக இயக்குநருக்கு தயாரிப்பாளர் அமையறது வரம்! அப்ப எனக்கு அது அமையலை. சில தயாரிப்பாளர்கள் டிஸ்கஷனுக்கு ரூம் கொடுத்து சோறு போட்டாங்க. அதோட காணாமப் போயிட்டாங்க. இப்படி நிறைய அனுபவங்கள். வருடங்களும் ஓடிப்போச்சு. போராட்டக் காலங்கள்னா என்னனு அனுபவபூர்வமா உணர்ந்தேன்.

ஒரு கட்டத்துக்குப் பிறகு தனியார் சேனல்ல வேலைக்கு சேர்ந்தேன். தமிழ் சினிமாக்களின் க்ளீஷே காட்சிகளையும், படங்களையும் கலாய்ச்சி நான் எழுதின டிவி ஷோ செம ஹிட்டாச்சு. அதுல நடிச்ச பாலாஜி மூலமா சந்தானம் அறிமுகமானார். அவருக்கும் இயல்பாவே காமெடி நாலேஜ் அதிகம். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவரை வச்சு, ‘சகலை ரகளை’ பண்ணினேன். சினிமால நடிக்கிற ஐடியாலதான் சந்தானம் டிவி ஷோஸ்ல நடிச்சுட்டு இருந்தார்.

ஒருநாள், ‘சிம்பு என்னை ‘மன்மதன்’ல நடிக்கக் கூப்பிடறார். போகலாமாண்ணே’னு கேட்டார். ‘சினிமால ஓர் இடம் கிடைக்கிற வரை டிவி காமெடி நிகழ்ச்சியை விட்டுடாதீங்க’னு சொன்னேன். அதை மனசுல வச்சு, உழைச்சார். அவர் என்கூட  இருந்தகாலங்கள்ல ஸ்கிரிப்ட், சீன், டயலாக்னு எல்லாத்துலயும் பங்களிப்பு செய்தார். அப்ப எனக்கு சிஷ்யனா இருந்தார். இப்ப ஆன்மீகத்துல எனக்கு குருவா இருக்கார்!

என்ன அப்படிப் பார்க்கறீங்க..? சந்தானம் ஆன்மீகத்துல கரை கண்டவர் தெரியுமா? அதேமாதிரி அப்ப என்கிட்ட அசிஸ்டென்ட்டா இருந்த அத்தனை பேரையும் இப்ப இயக்குநராக்கி அழகு பார்க்கறார்! அவ்வளவு ஏன்... என்னை டைரக்டராக்கினதும் அவர்தான்!

ஒருநாள் கேஷுவலா பேய்களை கலாய்ச்சு பண்ணின கதையை என் குரு இராம நாராயணன் சார்கிட்ட சொன்னேன். உடனே பண்ணலாம்னு பச்சைக் கொடி காட்டினார். யார்கிட்ட உதவியாளரா இருந்தேனோ அவர்கிட்டயே முதல் படத்துக்கான அட்வான்ஸை வாங்கினேன். உடம்பெல்லாம் சிலிர்த்துடுச்சு.

சில காரணங்களால உடனடியா ‘தில்லுக்கு துட்டு’ டேக் ஆஃப் ஆகல. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ஷூட் போச்சு. அப்புறம் ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ தயாரிப்பு, சன் பிக்சர்ஸ் வெளியீடுனு ‘தில்லுக்கு துட்டு’ செம ரீச் ஆச்சு. இதோ இப்ப ‘தில்லுக்கு துட்டு 2’. இதோட ஷூட் வைசாக்ல நடந்தது. அப்பவே ‘நாம மூணாவது பார்ட்டும் தொடங்குவோம்’னு சந்தானம் சொன்னார்.

அவரது வாய் முகூர்த்தம் பலிச்சிடுச்சு! தேர்ட் பார்ட்டுக்கான பேச்சு வார்த்தை நடந்துட்டு இருக்கு! இதுக்கு இடைல ‘கயல்’ சந்திரன் நடிப்புல அவர் அண்ணன் ரகு தயாரிக்கிற ‘டாவ்’ படத்தை இயக்கிட்டிருக்கேன். யெஸ் பாஸ்! ‘தி து 2’ ஷூட் முடிஞ்ச மறுநாளே ‘டாவ்’ படப்பிடிப்பு தொடங்கிடுச்சு. இதுவும் காமெடி படம்தான்...’’ மலர்ச்சியுடன் சொல்கிறார் ராம்பாலா.  

மை.பாரதிராஜா

ஆ.வின்சென்ட் பால்