ஹலோ... ஸ்டில்ஸை பார்த்துட்டு சப்புக் கொட்டாதீங்க! இது அந்தமாதிரி படம் இல்ல!



செல்லமாக எச்சரிக்கிறார் பெண் இயக்குநர்

‘விசில்’ படத்தில் இடம்பெற்ற ‘அழகிய அசுரா...’ இன்றும் பலரது ரிங்டோன் ஆக இருக்கிறது. காரணம், அப்பாடலைப் பாடியவரின் குரல்.இக்குரலுக்கு சொந்தக்காரர் அனிதா உதீப். பாடகியான இவர் ‘குளிர் 100 டிகிரி’ படம் வழியே இயக்குநரானார். இப்போது பத்து வருட இடைவெளிக்குப் பின், ஓவியாவுடன் கைகோர்த்து ‘90 எம்.எல்.’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இப்படத்துக்கு இசையமைத்திருப்பவர் சிம்பு!

‘‘லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கேன்! ‘அழகிய அசுரா...’வுக்குப் பிறகு பாட்டுப் பாடச் சொல்லி நிறைய ஆஃபர்ஸ் வந்தது. ஹீரோயினா நடிக்கவும் கேட்டாங்க. டைரக்‌ஷன்ல ஆர்வம் இருந்ததால ‘குளிர் 100 டிகிரி’யை இயக்கினேன்.
அப்புறம் மேரேஜ் ஆகி ஃபேமிலி லைஃப்ல கவனம் செலுத்தினேன். அதேநேரம் சினிமாவையும் உன்னிப்பா கவனிச்சேன். எந்த ஜானர்ல எடுத்தாலும் அதை ரசிக்கும்படியா உருவாக்கினா மக்கள் ஏத்துக்க இப்ப தயாரா இருக்காங்க.

கன்டன்ட் நல்லா இருந்தா கண்டிப்பா அந்தப் படம் ஓடும்.இந்த ஆரோக்கியமான சூழல் கொடுத்த எனர்ஜிலதான் திரும்பவும் படம் இயக்கியிருக்கேன்!’’ அதே ஸ்வீட் வாய்ஸில் பேசுகிறார் அனிதா உதீப். செம மாடர்னா 5 பொண்ணுங்க இருக்காங்களே..?

ஹலோ... ஸ்டில்ஸை பார்த்துட்டு சப்புக்  கொட்டாதீங்க! இது அந்த மாதிரி படம் இல்ல! தமிழ் சினிமால இதுக்கு முன்னாடி வந்த அஞ்சு ஹீரோயின்ஸ் கதைகளை இதோடு கம்ப்பேர் பண்ணாதீங்க! இது கிளாமர் சப்ஜெக்ட் கிடையாது! பெண்ணியமும் பேசல! சிம்பிளா சொன்னா, எங்க ‘90 எம்.எல்.’ வழக்கமான கதை கிடையாது. வழக்கமான க்ளீஷே சீன்ஸ் இருக்காது. மெசேஜ் கிடையாது.

ஃப்ரெஷ்ஷான ஸ்கிரிப்ட். இன்றைய பெண்களை பிரதிபலிக்கிற கதை. ஒரு பையன் ஸ்கூல் படிக்கறான். அங்க அவனுக்கு ஃப்ரெண்ட்ஸ் கிடைக்கறாங்க. அவன் காலேஜ் போறான். அங்கயும் நட்பு வட்டம் இருக்குது. கல்யாணம் ஆகுது. அதன் பிறகும் ஃப்ரெண்ட்ஸுடன் பேசறான் பழகறான். நினைச்ச இடத்துக்கு ஊர் சுத்த கிளம்பறான்.

இதே மாதிரி ஒரு பெண்ணால தன் பழைய ஃப்ரெண்ட்ஸ் கூட பழக முடியுமா? டூர் அடிக்க முடியுமா? கல்யாணம் வரைக்கும்தான் பெண்களால இஷ்டப்பட்ட லைஃபை வாழமுடியுது. கணவன் - குழந்தைனு ஆனபிறகு தன் சந்தோஷத்தை குழி தோண்டி புதைச்சுடறாங்க. இப்படி நம்ம சமூகம் பெண்களை ஒரு வட்டத்துக்குள்ளதான் வைச்சிருக்கு.

இன்னொண்ணும் சொல்லிடறேன். படத்துல லிப் லாக் சீன்ஸும் இருக்கு! ஆனா, எதுவுமே இம்மாரலா இருக்காது. உணர்வுபூர்வமா ஒரு கதையை சொல்லியிருக்கேன்!

பொதுவா டைட்டில்ல நம்பர்ஸ் இருந்தா ஈசியா ரீச் ஆகும். அதனாலயே என் முதல் படத்துக்கு ‘குளிர் 100 டிகிரி’னு வச்சேன். இப்ப ‘90 எம்.எல்.’

‘குளிர்’ல ஒரு பாடலை சிம்பு பாடியிருந்தார். இந்தப் படத்துலயும் அவரை பாட வைக்கலாம்னு நினைச்சு சந்திச்சு சிச்சுவேஷனை சொன்னேன். ஆச்சர்யமாகி முழு கதையையும் கேட்டார். சொன்னேன். உடனே, ‘நானே மியூசிக் பண்றேன்’னு சொன்னார். பிரமாதமா சாங்ஸும் கொடுத்திருக்கார். பின்னணி இசை கண்டிப்பா பேசப்படும்.

படத்துல மெசேஜ் இல்லைனு சொல்லிட்டு நிறைய விஷயங்கள் சொல்றீங்களே..?!  
கடவுளே! என்ன கதைனு நேரடியா கேட்கலாமே! ஒரு அபார்ட்மென்ட்ல வசிக்கற அஞ்சு பெண்களைப் பத்தின கதை இது.

ஒருத்தி பியூட்டி பார்லர் நடத்துறா. இன்னொருத்தி குக்கிராமத்தை சேர்ந்தவ; வீட்டை விட்டு ஓடிவந்து கல்யாணம் செய்துகிட்டு சென்னைல வசிக்கிறவ. அடுத்து திருமணத்துல நம்பிக்கை இல்லாத ஐடி பெண். புதுசா திருமணமான பெண் அடுத்தவ. அப்புறம் தாதாவை மேரேஜ் செய்துகிட்டவ.

இப்படி வெவ்வேறு பின்புலத்தைச் சேர்ந்த அஞ்சு பெண்களும் ஒரே அபார்ட்மென்ட்டுல வசிக்கிறாங்க. எல்லாருமே 20 - 25 வயசுக்குள்ள இருக்கிறவங்க. இவங்களுக்குள்ள ஏற்படுற நட்புக்குப் பிறகு நடக்கும் விஷயங்களை சுவாரசியமா சொல்லியிருக்கேன்.
அழுது, புலம்பற சீன்ஸ் சத்தியமா படத்துல இல்ல. ‘காதல்ல கூட தோல்வி இருக்கும். ஆனா, ஃப்ரெண்ட்ஷிப்ல ஃபெயிலியர் கிடையாது’! இதுதான் ஒன்லைன். இதையேதான் கலகலனு சொல்லியிருக்கேன்.

ஓவியா தவிர மீதி ஹீரோயின்ஸான பொம்லு லட்சுமி, மாசூன் சங்கர், கோபிகா, மோனிஷா ஆகிய நாலு பேருமே புதுமுகங்கள். டெக்னிக்கல் டீம் பக்காவா அமைஞ்சிருக்கு. ‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அர்விந்த் கிருஷ்ணாதான் இந்தப் படத்தின் டிஓபி. மலையாளத்துல பிசியா இருந்தவரைக் கூட்டிட்டு வந்திருக்கோம். கதையின் தன்மை உணர்ந்து ஆண்டனி எடிட்டிங் செய்திருக்கார்.

ஓவியா என்ன சொல்றாங்க..?
எங்க இந்தக் கேள்வியை இன்னும் கேட்கலையேனு நினைச்சேன்! ஓவியா ரொம்ப தைரியமான பொண்ணு. ஸ்கிரிப்ட் கேட்டதுமே ‘என் ரியல் லைஃப் கேரக்டர் போல இருக்கு’னு சொன்னாங்க. ஸ்பாட்ல அவங்க இருந்தாலே அந்த இடம் கலகலப்பாகவும் இருக்கும்; தனிச்சும் தெரியும்!இருங்க... என்ன கேட்க வர்றீங்கனு தெரியுது. நானே சொல்லிடறேன்! ஆமா, தொடர்ந்து படம் இயக்கற ஐடியால இருக்கேன்! l

மை.பாரதிராஜா