ஒரு யானையை கும்கியாக மாற்றுவது எப்படி?



இன்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பு கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு எல்லைக் காடுகளை ஒட்டி சுமார் 20 பேரைப் பலிவாங்கியவன் மூர்த்தி. அவனை சுட்டுக்கொல்ல கேரள அரசு ஆணை பிறப்பித்துவிட்டது. மூர்த்தியின் நல்ல நேரம், அவன் நைசாக தமிழ்நாட்டு எல்லைக்குள் வந்துவிட்டான்.அங்கே ஓர் ஆளைத் தாக்கிவிட்டான். ஊர்மக்கள் போராட, தமிழக வனத்துறையினர் களமிறங்கினர்.

ஆமாம். மூர்த்தி ஒரு காட்டு யானை.அவனைச் சுட்டுக்கொல்வதெல்லாம் இல்லை. மயக்க ஊசி போட்டுப் பிடித்தார்கள். ஆனைமலை யானைகள் காப்பக முகாமுக்குக் கொண்டு வந்தனர். அங்கே கிராலில் அவன் அடைக்கப்பட்டான். கிரால் என்றால் அந்தமான் செல்லுலார் ஜெயில் இல்லை. பனிரெண்டுக்கு பனிரெண்டு அடி மரக்கூண்டு. அதில் அவன் பழக்கப்படுத்தப்பட்டான். இன்றைக்கு மூர்த்தியைப் போல் அன்பான, சாதுவான பிராணி ஆனைமலையில் இல்லை. புதியவர்கள் கூட அவனைக் கையாளலாம்.

மூர்த்தி ஒரு மெக்னா யானையும் கூட. அதாவது கொம்பில்லாத ஆண் யானை. இருபது பேரை இவன் கொன்றிருக்கிறான் என்றால் யாரும் நம்பவே மாட்டார்கள்.“கும்கி என்று சொல்வது கிட்டத்தட்ட மனிதர்களில் கமாண்டோ பயிற்சி பெற்றவர்களைச் சொல்வது போலத்தான். காட்டுயானைகள் ஊருக்குள் வந்து திரியும்போது அவைகளைக் கட்டுப்படுத்த, விரட்டி அடிக்க பயன்படுத்தப்படுகிறவை.

தன்னை விட பெரிய யானையாக இருந்தாலும் பயப்படாமல் அவற்றைச் சமாளிக்கும் பயிற்சி பெற்றவை...” என்று விளக்கம் தருகிறார் கால்நடைப் பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநரும் யானைகள் மருத்துவத்திலும் பராமரிப்பிலும் மிகுந்த அனுபவம் கொண்டவருமான மருத்துவர் மனோகரன்.

கலீம்… இந்த பேரைச் சொன்னாலே காட்டுயானைகள் கதறும். இவன்தான் தமிழ்நாட்டில் இருக்கும் ஐந்தாறு கும்கி யானைகளில் சிறந்தவன். மேலே சொன்ன மூர்த்தியெல்லாம் கும்கி யானை வரிசையில் வரமாட்டான். அவன் பழக்கப்படுத்தப்பட்ட சிறுசிறு வேலைகளைச் செய்யக்கூடியவன். அவனை லாரியில் ஏற்றி வந்து எங்குவேண்டுமானாலும் கொண்டுபோய் காட்டுயானைகளை விரட்டப் பயன்படுத்தமுடியாது.

ஆனால், கலீம் தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திரா,கர்நாடகம், கேரளம்,  ஏன் - மேற்கு வங்கம் வரைக்கும் போய் கூட வெற்றிக்கொடி நாட்டி இருக்கிறான். எந்த காட்டு யானையையும் சமாளித்து விரட்டி அடிப்பான். அந்த அளவுக்கு ஆதிக்க உணர்வு மிக்க ஆண் யானை அவன்.
1972ல் சத்தியமங்கலம் காட்டில் ஏழு வயது குறும்புக்காரனாகப் பிடிக்கப்பட்ட கலீமின் உடல்வாகு அவனை கும்கி யானை ஆக்கும் தகுதியுடன் இருந்தது.

இன்று 55 வயது நிரம்பிய அவன், இப்போது சின்னத்தம்பியை இன்னொரு கும்கியான மாரியப்பனின் உதவியுடன் சமாளித்துக் கொண்டிருக்கிறான். கலீம், சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை விரட்டி அடித்த அல்லது பிடித்த அனுபவம் மிக்கவன். இதில் விசேஷம் என்னவென்றால் பிற யானைகளை அடக்குவது அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று.

சரி. ஒரு யானையை கும்கி ஆக்குவது எப்படி?

எல்லா யானையும் கும்கி ஆகிவிடமுடியாது. ஆதிக்க உணர்வு கொண்ட யானைக்குத்தான் இப்படிப் பயிற்சி கொடுத்து கும்கி ஆக்கமுடியும். நல்ல உயரமும் அகன்ற வளைவில்லாத முதுகும் வேண்டும். கலீமின் எடை 5.5 டன். உயரமும் பிற யானைகளை விட அதிகம். அவனது பிரம்மாண்டமே பிற யானைகளை அச்சுறுத்தும்.

பாகனுடன் எப்படி பழகுகிறது என்பது இன்னொரு முக்கியமான அம்சம். அவனது கட்டளைகளைக் கேட்கப் பழக்கி இருந்தாலும் கலீமுக்கு இப்படி எதையும் சொல்லவேண்டிய அவசியம் இல்லையாம். பாகனுக்குச் சிரமம் தராமல் தானே எல்லாவற்றையும் செய்துவிடுவானாம்.

உதாரணத்துக்கு காட்டுக்குள் யானையை எதிர்நோக்கி நிற்கும்போது சில கும்கிகள் புதரில் இருந்து காட்டுப்பன்றி வந்தாலே அஞ்சி ஓட முனையும். அப்போது பாகன் கட்டளையிட்டு அசையாமல் நிற்க வைப்பார்.

ஆனால், கலீமுக்கு இதெல்லாம் தெரியும். சொல்லவேண்டியது இல்லை.சுமார் மூன்று மாதங்கள் வரைக்கும் பயிற்சி அளித்தால் எந்த யானையையும் கட்டுப்படுத்தி பழக்கவிடமுடியும்.இந்தியாவில் இப்படி யானைகளைப் பழக்க இரண்டு முறைகள் உள்ளன. வடகிழக்கு இந்தியப்பகுதிகளில் இளம் வயது யானைகளைத்தான் பழக்குவார்கள். அதற்காக கயிறுகளால் கால், உடல் என்று வரிந்து கட்டி இரவு பகலாக பயிற்சி அளிப்பர்.

இதற்காக பாடல்கள் உண்டு. அவற்றைப் பாடியவண்ணம், நெருப்புப் பந்தங்களைக் காட்டி மிரட்டி, முன்னோக்கியும் பின்னோக்கியும் கட்டளைகளுக்கு ஏற்ப நகரச் செய்து பழக்குவர். இதில் யானைக்கும் சரி, பாகன்களுக்கும் சரி காயம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் இதில் பாதுகாப்புக் குறைவு.

ஆனால், தமிழ்நாட்டில் கிரால் என்கிற பெரிய மரக்கூண்டில் அடைத்து வைத்து அவற்றைப் பழக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது இரு தரப்புக்குமே பாதுகாப்பானது. காலைத் தூக்குதல், கயிறை இழுத்தல், முன்னோக்கியும் பின்னோக்கியும் செல்லுதல் போன்ற பயிற்சிகளைக் கொடுப்பார்கள். இம்முறையில் வளர்ந்த காட்டு யானைகளைக் கூட பழக்கமுடியும்.

யானைகளை கிராலில் அடைத்து கொடுமைப்படுத்துகிறார்கள் என்ற கருத்து உள்ளது. இது யானைகளின் குணாதிசயங்களைப் பற்றித் தெரியாமல் சொல்லும் கருத்து.டால்பின்கள், யானைகள், குரங்குவகைகள் ஆகியவற்றின் மூளைகளின் உணர்வைக் கட்டுப்படுத்தும் பகுதி ஒரே மாதிரியானது.

உதாரணத்துக்கு, ஒரு காட்டுப் புலியைக் கட்டிப்போட்டால் அது இழுத்து இழுத்துச் செத்தே போகும். கூண்டில் அடைத்துவைத்தாலும் அதேபோல்தான். மோதிக்கொண்டே இருக்கும். நம்மால் முடியாது என்று சும்மா இருக்காது.

ஆனால், யானைகள் அப்படி அல்ல. காட்டில் பிடிக்கும் முரட்டு யானையைக் கூட சங்கிலியால் அங்கே ஒரு மரத்தில் ஏதோ காரணத்துக்காக கட்டினால் சில முறை இழுத்துப் பார்க்கும். பிறகு முடியாது என்று தெரிந்தவுடன் அமைதியாக நின்றுவிடும். இந்த உணர்வுதான் அவற்றைப் பழக்குவதிலும் பயன்படுகிறது. பாகனுக்கும் யானைக்கும் இடையே ஓர் உணர்வுபூர்வமான உறவு உண்டாகி விடுகிறது. பாகன் தனக்குப் பிடிக்காத எதையும் செய்தால் யானைகள் முறைக்கும். மறுக்கும். இப்படி ஒரு அன்பு, வெறுப்பு சார்ந்த உறவு உருவாகும்.

கிராலில் அடைத்துப் பழக்கப்படுத்தும் யானைகளும் முதலில் முரண்டுபிடித்தாலும் சிலநாட்களில் புரிந்துகொண்டு வழிக்கு வந்துவிடும். யானைகளைப் பழக்கப்படுத்துவது அவ்வளவு சிரமமானது அல்ல. அவை சமூகமாக இணைந்து வாழத் தெரிந்தவை. இல்லையெனில் இவ்வளவு கோயில்களில் யானைகளை வைத்திருக்க முடியுமா?

‘‘ஐந்து டன் எடையுள்ள யானைக்கு 30 கிலோ எடையுள்ள சங்கிலியால் கட்டப்படுவது பெரும் துன்பம் அல்ல...’’ என்கிறார் யானை மருத்துவர் ஒருவர்.முதுமலை, ஆனைமலை ஆகிய இடங்களில் இருக்கும் யானைக் காப்பகங்களில் சுமார் 50 யானைகள் உள்ளன. அவற்றில் பல அங்கேயே பிறந்து வளர்ந்தவை.

இவை கூண்டில் அடைத்து வளர்க்கப்படுவதாக பலர் நினைத்துக்கொண்டிருக்கலாம். அவை முகாமுக்கு காலை 9 மணிக்கும் மாலை 6 மணிக்குமே வரும். மற்றபடி அங்கிருக்கும் காட்டில் சுதந்திரமாக உலவிக் கொண்டிருக்கும். எனவே இந்த காப்பகங்களுக்கு யானையை அனுப்புவது என்பதற்கு யாரும் அஞ்சவேண்டியதில்லை. புத்துணர்வு முகாம்களுக்காக கோயில் யானைகள் இந்த காப்பகங்களுக்குத்தான் வருகின்றன.

முதுமலையில் விஜய், வசீம், ஆனைமலையில் கலீல், மாரியப்பன் ஆகியவை கும்கிகளாக இருக்கின்றன. இந்தர், முதுமலை என்ற பெயர்களைக் கொண்ட ஓய்வு பெற்ற கும்கிகளும் வாழ்கின்றன.சின்னத்தம்பியின் செயல்பாடுகள் அவன் காட்டை விட, ஊர்ப்புறங்களையே அதிகம் விரும்புவதாகக் காண்பிக்கின்றன. பெரியதம்பி யானையை வரகளியாறு பகுதியில் விட்டபோது, அவன் யானைகளின் தடத்தைப் பிடித்துக்கொண்டு காட்டுக்குள் போய்விட்டான். சிலநாட்களில் அவன் தென்பட்டபோது வனத்துறையினரை நிமிர்ந்து கூடப் பார்க்க விரும்பவில்லை. அவன் மீண்டும் காட்டு யானை ஆகிவிட்டான்.

ஆனால், அதே இடத்தில் சின்னத்தம்பியை விட்டபோது அவன் ஊர்ப்புறமாக வருவதை விரும்பினான். அவனைக் கண்காணிப்பதற்காக இரண்டு யானைக்காரர்கள் அருகே ஓரிடத்தில் தங்கியிருந்தபோது அவர்கள் சமையலுக்காக வைத்திருந்த பொருட்களைத் தேடி வந்து தின்றிருக்கிறான். கரும்பு, வாழை, அரிசி, கடலைமிட்டாய் என்று அவன் ஊர்ப்புற உணவையே விரும்புகிறான்.

‘‘காட்டுக்குள் அவனைச் செலுத்தும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவன் காட்டுக்கு வெளியே வாழ்வதற்கே தன்னை மாற்றிக்கொண்டுவிட்டதாகத் தெரிகிறது, எனவே, முகாம் வாழ்க்கையே அவனுக்கு உகந்தது...” என்று கருத்து தெரிவிக்கிறார் ஓய்வுபெற்ற வனவிலங்கு மருத்துவர் பன்னீர்செல்வம்.ஆனால், சின்னத்தம்பி கும்கி ஆகமுடியுமா?

“பிற யானைகள் மீது ஆதிக்கம் செலுத்தும் கூறுகள் அவனிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அவன் பழக்கப்படுத்தப்பட்ட யானையாக மாறலாம். இப்போதே அப்படித்தான் இருக்கிறான். ஒரு சில வாரங்களிலேயே அவன் பழகிவிடுவான். ஆனால், கும்கி என்கிற பட்டம் ஆதிக்க குணம் உடைய, அரிதிலும் அரிதான யானைகளுக்கே உரியது...” என்கிறார் பெயர் சொல்லவிரும்பாத ஒரு வனவிலங்கு நிபுணர்.

ஆக, சின்னத்தம்பி விஷயத்தில் உணர்ச்சிகளின் அடிப்படையில் அணுகுவதை விட அறிவியல் ரீதியாக அணுகுவதே தீர்வைத் தரும்.
(‘அந்திமழை’ மாதப் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராக இருக்கும் என்.அசோகன், அடிப்படையில் ஒரு கால்நடை மருத்துவர். சென்னை வெட்ரினரி காலேஜில் படித்துப் பட்டம் பெற்றவர்)                        

என்.அசோகன்