தில்லுக்கு துட்டு-2



சந்தானம், மாமா மொட்டை ராஜேந்திரனோடு கூடவே பேயை துணைக்கழைத்து செய்யும் ரகளை ராவடியே ‘தில்லுக்கு துட்டு 2’.
குறுகலான தெருவில், மாமா ராஜேந்திரனோடு இருக்கிறார் சந்தானம். இரவெல்லாம் குடித்துவிட்டு, எல்லோரின் தூக்கத்தையும் கெடுத்து, அனைவரின் எரிச்சலும் சந்தானத்தின் மீது கூடி நிற்கிறது. இவர்களின் அட்டகாசத்திற்கு முடிவு என்ன என ஆளாளுக்கு பரிதவிக்கிறார்கள். அந்தப்பகுதியில் வசிக்கும் டாக்டர் ஷிர்தா சிவதாஸ். அவரிடம் யார் ‘ஐ லவ் யூ’ சொன்னாலும் ஒரு பேய் அவர்களை எகிறி அடித்து, ஓட ஓட துரத்துகிறது.

சந்தானத்தை ஷிர்தாவிற்கு ‘ஐ லவ் யூ’ சொல்ல வைத்து அவரது தொல்லைகளிலிருந்து தப்பிக்க காலனிவாசிகள் முடிவு எடுக்கிறார்கள். காதல் வர, சந்தானத்திற்கும் அதே நிலைமைதான். சந்தானம் அண்ட் கோ பிரச்னைகளைத் தீர்க்க கேரளாவிற்கு பயணம் போகிறார்கள். அங்கே என்ன நடந்தது, சந்தானத்தின் காதல் கரையேறியதா என்பதே மீதிக்கதை.

சீனுக்கு சீன் சிரிக்க வைத்தால் போதும் என இறங்கி அடித்திருக்கிறார் இயக்குநர் ராம்பாலா. சந்தானத்தை எந்த அளவுக்கு, எந்த மாதிரி பயன்படுத்த வேண்டும் என பாடம் பயின்று தேறியிருக்கிறார். அவருக்கு சரியாக  மேட்ச் ஆகிற பன்ச்கள், ஏளனங்கள், வேடிக்கைகள் என இதைவிட சந்தானத்திற்கு கம்பேக் பிலிம் வேறு கிடையாது. பெரும்பாலும் கலாய் காமெடி டயலாக் டெலிவரிதான் நடிப்பு. ஹோம்கிரவுண்ட் ஆன காமெடி ஏரியாவில் அடித்து ஆடியிருக்கிறார்.

ஷிர்தா சிவதாஸ் சிறு தெய்வமாக நிற்பது அழகு. கேரளக் குளக்கரை சந்திப்பில் சந்தானத்தின் கை பிடித்து கொடுக்கும் பட்டாம்பூச்சி பவுன்சர் ரியாக்‌ஷன்… நச். அவர் வரும்போதெல்லாம் சந்தானத்தோடு சேர்ந்து நமக்கும் ஈர்ப்பு ஏற்படுகிறது.படத்தின் இன்னொரு அல்ல... இணை நாயகன் மொட்டை ராஜேந்திரனே! நடுவே போரடித்த ராஜேந்திரன் இதில் நல்ல ஃபார்மில் வந்துவிட்டார். மனிதர் சந்தானத்தோடு சேர்ந்து கலாய்க்கும்போதெல்லாம் சிரிப்பு  ரவுசு. ஆனாலும் அவ்வப்போது தெறிக்கும் ‘பச்சை’ ஒன்லைனர்களை ஒதுக்கியிருக்கலாம்.

டுபாக்கூர் மந்திரவாதியாக ஊர்வசி தனக்கேயான மேனரிசத்தில் மேஜிக் செய்கிறார்.தீபக்குமாரின் ஒளிப்பதிவில் திகிலும், காமெடியுடன் பயமும் சேர்ந்து கொள்கிறது. ஷபீரின் பின்னணி இசை கவன ஈர்ப்பு. ஆனால், அந்தளவு பாடல்களில் முனைப்பு காட்டவில்லை. எக்கச்சக்கமாக தாவும் லாஜிக்கும் உறுத்தவில்லை.

சந்தானத்தின் சேட்டை கலாட்டாக்களுக்கு பக்காவாக பக்கவாத்தியம் சுழற்றுகிறார்கள் ஊர்வசியும், ராஜேந்திரனும். எல்லா இக்கட்டு சூழ்நிலைகளையும் சிரிப்பு பன்ச்சில் முடிப்பது சிறப்பு.‘தில்லுக்கு துட்டு 2’ எப்படிப் பார்த்தாலும் காமெடி கொண்டாட்டமே!

குங்குமம் விமர்சனக் குழு