பட்ஜெட் அல்ல... தேர்தல் அறிக்கை!ஆளும் மத்திய பாஜக அரசு, தன் ஆட்சிக் காலத்தின் கடைசி பட்ஜெட்டினை பிப்ரவரி 1 அன்று சமர்ப்பித்தது. நிதியமைச்சர் அருண் ஜேட்லீ சிகிச்சைக்காக வெளிநாடு போயிருப்பதால், அந்தப் பொறுப்பை கூடுதலாக எடுத்திருக்கும் பியூஷ் கோயல், பட்ஜெட் அறிக்கையைப் படித்தார். ஆளும் அரசுகள், தேர்தலுக்கு முன்பான இறுதி பட்ஜெட்டினை ‘இடைக்கால பட்ஜெட்டாக’ அளிப்பது மரபு. ஆனால், மரபினை மீறி முழுமையான பட்ஜெட்டாக இது சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது.

முக்கிய அம்சங்கள்:

1) வருமான வரி உச்சவரம்பு 2,50,000லிருந்து 5,00,000-மாக சில தள்ளுபடிகளுடன் உயர்த்தப்பட்டு இருக்கிறது. 5,00,000 வரைக்குமான ஆண்டு வருமானம் இருப்பவர்களுக்கு இனி வருமான வரி கிடையாது. மற்ற படிநிலைகளில் எந்த மாற்றமும் இல்லை
2) வழமையான கழிவுகள் ரூ. 40,000லிருந்து 50,000-மாக அனைத்து வருமான வரி பிரிவினருக்கும் உயர்த்தப் பட்டு இருக்கிறது.
3) இரண்டு வீடு வைத்திருப்பவர்களுக்கான உத்தேச வாடகை நீக்கப்பட்டு, மூன்றாவது வீடு இருந்தால் மட்டுமே அமுலுக்கு வருகிறது
4) வரம்புக்கு உட்பட்ட விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவு திட்டம் என்கிற புதிய திட்டத்தின் மூலமாக வருடத்திற்கு ரூ.6,000 சில தவணைகளில் அளிக்கப்பட இருக்கிறது
5) இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயிகள், விவசாயக் கடன்களை ஒழுங்காக செலுத்தினால், 3% வட்டி தள்ளுபடி செய்யப்படும்
6) 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் ஒதுக்கீடு ரூ. 60,000 கோடியாக அதிகரிக்கப் பட்டு இருக்கிறது
7) மரபு சாரா வேலைவாய்ப்புகளில் இருக்கும் பிரிவினருக்கு, மாதம் ரூ. 100 மக்களிடமிருந்தும், ரூ. 100-னை அரசிடமிருந்தும் என இணைந்து, 60 வயதுக்குப் பின்பாக மாதத்திற்கு ரூ. 3,000 தரப்படும் புதிய பென்ஷன் திட்டம் உருவாக்கப் பட இருக்கிறது
8) ரயில்வே கட்டணங்களில் எந்த உயர்வும் இல்லை. அதிகப்படியாக 1.6 இலட்சம் கோடிகள் ஒதுக்கீடு தரப்பட்டு இருக்கிறது
9) ராணுவத்திற்கு அதிகப்படியாக 3 இலட்சம் கோடிகள் ஒதுக்கீடு தரப்பட்டு இருக்கிறது
10) புதிய வீடு வாங்குபவர்களுக்கு, வீட்டின் மீதான ஜி.எஸ்.டி குறைக்கப்படுவது பற்றி பரிசீலிக்கப்படும்பட்ஜெட்டிலேயே 3.4% என்கிற அளவுக்கு நிதிப் பற்றாக்குறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய வருவாய் ஆதாரங்கள் எவையும் உருவாக்கப்படவில்லை. மாநிலங்களின் மீதான நிதிச் சுமைகள் நீக்கப்படவில்லை.

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பார்ப்போம், இல்லையென்றால் புதியதாக வரும் ஆட்சியின் சிக்கல் இது என்கிற மனநிலையோடுதான் முழுமையான பட்ஜெட்டாகவே இடைக்கால பட்ஜெட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 2015ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கணக்கிடுதலில் மாற்றங்கள் செய்தார்கள். பழைய கணக்கிற்கும், புதிய கணக்கிற்கும் உள்ள இடைவெளி இரண்டு சதவீதம்.

அதாவது புதிய கணக்கீட்டில் 7% வளர்ச்சி என்றால், உண்மையில் பழைய கணக்கீட்டில் அது 5% வளர்ச்சிதான். நடுவில் மத்திய அமைச்சகம் புதிய மற்றும் பழைய கணக்குளில் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் முந்தைய மன்மோகன் சிங் ஆட்சியில் 10% மேலான வளர்ச்சி என்று வந்தவுடன், அந்த அறிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது! மீண்டும் தங்களுக்கு தோதாக காங்கிரஸ் ஆட்சியில் குறைவாகவும், பாஜக ஆட்சியில் அதிகமாகவும் உள்ள ஒரு அறிக்கையை வெளியிட்டது.

பிரதமர் மோடி ஆட்சியேற்ற முதல் மூன்று வருடங்களில் பல நாடுகளோடு போடப்பட்ட அன்னிய முதலீடு ஒப்பந்தங்களில் 30% கூட இந்த ஐந்தாண்டு காலத்தில் முழுமையாக வரவில்லை என்பதுதான் நிதர்சனம். கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவிற்கு மரபு சாரா வேலை வாய்ப்பின்மை 2014 - 18 காலத்தில் அதிகரித்து இருக்கிறது என்பதும், பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் குறைந்து போய் இருக்கின்றன என்பதையும் சொன்ன தேசிய புள்ளி விவர அலுவலகத்தின் அறிக்கையினை, வேக வேகமாக மறுத்து, புதிய வேலை வாய்ப்பு பொய் அறிக்கையை விரைவில் வெளியாக்கும் முனைப்பில் இருக்கிறது.

பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாக உயர்ந்திருக்கிறது என்பது லேட்டஸ்டாக வந்திருக்கக்கூடிய பொய் அறிக்கை!ஆக, ஐந்தாண்டு காலத்தில் வளர்ச்சியாலும் முன்னேற்றத்தினாலும் சாதிக்க முடியாதவற்றை வெறுமனே புள்ளி விவரங்களையும், எண்களையும், பார்வைகளையும் மாற்றி சாதித்து பிரசாரம் செய்யலாம் என்று ஆளும் பாஜக அரசு முடிவு செய்து விட்டது.

இந்த மாதிரியான பொய்ப் பிரசாரங்களும், போலி அரசு அறிக்கைகளும், நிதிப் பற்றாக்குறையினை சமாளிக்க முடியாமல் பட்ஜெட்டிற்கு வெளியே தள்ளும் யுக்திகளும், பெருகி வரும் வேலை வாய்ப்பின்மையும் சர்வதேச அரங்கிலும், இந்தியாவிற்கு உள்ளேயும் முணுமுணுப்பினை உருவாக்கத் துவங்கி விட்டன.

உலகளாவிய பொருளாதார ரேட்டிங் நிறுவனங்கள் இந்தியாவின் ஸ்திரத்தன்மையை கேள்விக்குறியோடு அணுகுகின்றன என்பதே இந்த மோசடி அறிக்கைகளின் தராதரத்தினை விளக்கும். மூன்று மாநில தேர்தல் தோல்விகள், மிடில் கிளாஸ் வாக்கு வங்கியின் புறக்கணிப்பு, விவசாயிகளின் கோபங்கள் என எதிராகத் திரும்பி இருக்கும் அத்தனை வகுப்புகளையும் பட்ஜெட்டின் மூலம் சாந்தப் படுத்த முயற்சித்திருக்கிறார் நிதி அமைச்சர்.

பட்ஜெட் வழியாக பாஜகவின் தேர்தல் அறிக்கைதான் வெளிப்பட்டு இருக்கிறதே ஒழிய, நாட்டிற்கான முன்னேற்றம் என்பது துளியுமில்லை. மக்கள் மயங்கி வாக்களிப்பார்களா அல்லது அரசினை மாற்றி அமைப்பார்களா என்பதை மே 2019 விளக்கும்.        

செனகா