நான் இயக்கறதா இருந்த அஜித் படம் பூஜையோடு நின்னுடுச்சு...தன் பயணத்தை விவரிக்கிறார் ரைட்டர் கம் டைரக்டரான சுகி.மூர்த்தி

தூர்தர்ஷன் பரபரப்பு வீசிய காலங்களிலிருந்தே சீரியல், சினிமா என இரண்டிலும் சவாரி செய்தவர் சுகி.மூர்த்தி. மேடை நாடகத்திலிருந்து ஆரம்பித்து ரைட்டர், டைரக்டர், கிரியேட்டிவ் ஹெட் என பல உயரங்களைத் தொட்டவர். தமிழில் ‘அஸ்திவாரம்’, ‘பந்தம்’, ‘சித்தார்த்தன்’ ‘சௌபர்ணிகா’, ‘ஸ்ரீராமன் ஸ்ரீதேவி’, ‘வம்சம்’ தவிர கன்னடத்தில் ‘மாங்கல்யா’, ‘மேகா மந்த்ரா’, ‘லட்சுமி’ என சுகி இயக்கிய சீரியல்களின் பட்டியல் நீளமானது.

 ‘நந்தினி’யின் (கன்னட வெர்ஷன்) எபிசோட் இயக்குநர்களில் ஒருவராகவும், ‘சந்திரகுமாரி’யின் கிரியேட்டிவ் ஹெட் ஆகவும் இருந்தவர் இவர்.  
பெரியதிரையில் இயக்குநர்கள் செல்வா, சுந்தர்.சி.யின் படங்களுக்கு ரைட்டராகவும் அசோசியேட் ஆகவும் இருந்ததோடு ‘கும்மாளம்’, ‘ஊதாரி’ ஆகிய படங்களை தனியாக இயக்கவும் செய்திருக்கிறார்.

‘‘என் முழுப்பேரு சுப்ராயலு கிருஷ்ணமூர்த்தி. அப்பா சுப்ராயலு, சென்னை பச்சையப்பன் கல்லூரில லேப் டெக்னீஷியனா இருந்தவர். அம்மா யோகலட்சுமி, ஹவுஸ் ஒய்ஃப். அப்பாவோட பூர்வீகம் திண்டிவனம். அம்மா, பக்கா சென்னை. வீட்டுக்கு நான் ஒரே பையன். பச்சையப்பன் கல்லூரில பி.எஸ்சி. கணிதம் முடிச்சேன்.

கல்லூரி நாட்கள்ல கவிதை, கட்டுரைகள் எழுதுவேன். கவியரங்கங்கள்ல கலந்துகிட்டிருக்கேன். கவிப்பேரரசு வைரமுத்து எனக்கு காலேஜ் சீனியர். கவியரங்கங்கள்ல அவர் கலக்குவதைப் பார்த்துதான் நானும் கவிதை எழுத ஆரம்பிச்சேன்.

‘இளங்குயில்களின் இனிய பூபாளம்’னு ஒரு தொகுப்பும் வெளியிட்டிருக்கேன். இயக்குநர் செல்வா, எனக்கு கல்லூரிலதான் நண்பரானார்.  ரெண்டு பேர் எண்ணங்களும் ஒரே மாதிரி இருந்ததால சட்டுனு ஒட்டிக்கிட்டோம். சினிமா பத்தி நாங்க நிறைய பேசுவோம். காமெடி எழுத்து என் பலம்.

படிப்பு முடிஞ்சதும் சினிமா இயக்க செல்வா போயிட்டார். எனக்கும் டைரக்‌ஷன் ஆசை இருந்தது. வீட்ல தடுத்தாங்க. எங்க அப்பா சினிமாவுக்கு எதிரியில்ல. சொல்லப்போனா சினிமால முயற்சி செஞ்சு தோத்தவர். இந்த விஷயம் தெரிஞ்சதும் எப்படியாவது நாம ஜெயிச்சேஆகணும்னு முடிவு பண்ணினேன்...’’ என தன் ஃப்ளாஷ்பேக்கை சுருக்கமாகச் சொல்லும் சுகி மூர்த்தியை சின்னத்திரை பக்கம் அழைத்து வந்தவர் இயக்குநர் செல்வாதான்.

‘‘அமெச்சூர் நாடகங்கள்ல நான் கவனம் செலுத்திட்டிருந்தப்பதான் செல்வா சீரியல் இயக்குநரானார். தூர்தர்ஷனுக்காக அவர் ‘சித்திரப்பாவை’யை இயக்கினப்ப அதுக்கு டயலாக் எழுத என்னைக் கூப்பிட்டார். போனவன் அப்படியே அவருக்கு அசோசியேட்டா ஒர்க் பண்ணினேன்.

இதுக்கு அப்புறம் தொடர்ந்து அவர் கூட பயணம் செஞ்சேன். இந்தக் காலகட்டத்துலதான் என் திருமணமும் நடந்தது. மனைவி தனலட்சுமி. அவங்க சமீபத்தில்தான் காலமானாங்க...’’ சில நிமிடங்கள் அமைதியா இருந்தவர் பின் தொடர்ந்தார்.

‘‘இதுக்கு அப்புறம் ‘நீலா மாலா’ பண்ணினோம். சீரியல்கள்ல அது டிரெண்ட் செட்டரா அமைஞ்சது. சன் டிவி ஏறக்குறைய இதேநேரத்துலதான் லான்ச் ஆச்சு. அங்க செல்வா ‘நந்தவனம்’ இயக்கினார். நான் வழக்கம்போல அதிலும் ரைட்டர் கம் அசோசியேட்.
அப்புறம் தூர்தர்ஷன்ல இப்போதைய திமுக தலைவர் ஸ்டாலின் சார் நடிச்ச ‘குறிஞ்சிமலர்’ தொடரை செல்வா இயக்கறப்ப ஸ்கிரிப்ட் எழுதினேன். மறுபடியும் ஸ்டாலின் சார் நடிச்ச ‘சூர்யா’ல டயலாக் எழுதினேன்.

ஆக ,ரொம்ப வருஷங்களாவே சன் டிவியோடு பயணிக்கறேன். முதல் மெகா தொடரான ‘சக்தி’க்கு திரைக்கதை எழுதினேன். 1996ல முதன்முதலா இயக்கின சீரியல் ‘அஸ்திவாரம்’. அப்புறம் ‘பந்தம்’, ‘சௌபர்ணிகா’னு மெகா தொடர்கள் இயக்கினேன். தொடர்ந்து ‘நீதி’, ‘அவள்’, ‘பயணம்’ சீரியல்களுக்கு ஸ்கிரிப்ட் ஒர்க் போச்சு.

கூட்டிக்கழிச்சுப் பார்த்தா மூவாயிரம் எபிசோடுகளுக்கு மேல ஒர்க் பண்ணியிருப்பேன்...’’ அடக்கத்துடன் சொல்லும் சுகி மூர்த்தியின் திரையுலகப் பயணமும் அவர் நண்பர் செல்வாவால் நிகழ்ந்ததுதான். ‘‘அவரை எப்பவும் டைரக்டராகவோ நண்பராகவோ பார்த்ததில்ல. குருவாதான் கருதறேன். ஸ்கிரிப்ட்டுல எப்பவும் அவர் ஸ்ட்ராங். எங்க காலேஜ்ல நடந்த விஷயங்களை வைச்சு அவர் ‘தலைவாசல்’ இயக்கினார். அதிலும் என்னை ரைட்டர்,
அசோசியேட்டா அழகுபார்த்தார்.

அந்தப் படத்துல ‘அடேவுடே உட்டான் பாரு...’னு ஒரு கானா பாட்டை எழுதி பாடலாசிரியரா ஆனேன்! தொடர்ந்தது. ‘அமராவதி’, ‘ரோஜாவனம்’, ‘பூவேலி’, ‘உன்னருகே நானிருந்தால்’னு செல்வா கூட எட்டு படங்கள் வரை வேலை பார்த்தேன்.சுந்தர்.சி. சார் நட்பு கிடைச்சது. ‘உன்னைத்தேடி’, ‘அழகர்சாமி’ல அவர் கூட ஒர்க் பண்ணினேன். அப்புறம் சினிமால கொஞ்சம் இடைவெளி. சீரியல் வாய்ப்பு கதவைத் தட்டுச்சு. தென்னிந்திய மொழிகள் அத்தனையிலும் சீரியல் பண்ணிட்டேன். அதுலயே நாலஞ்சு மொழிகள் கத்துக்கிட்டது என் லக்!

‘மெட்டிஒலி’ கன்னட ரீமேக்கை இயக்கினது என் வாழ்க்கைல திருப்புமுனை. கிட்டத்தட்ட 1500 எபிசோடை பண்ணியிருப்பேன். தொடர்ந்து 12 வருஷங்கள் கன்னடத்துலயே பிசியா இருந்தேன். நடுவுலசுந்தர்.சி. சாரை வைச்சு படம் இயக்கும் வாய்ப்பும் கிடைச்சது. ‘அமராவதி’ல அஜித் சார் தோழமை கிடைச்சிருந்ததால அவரை டைரக்ட் பண்ற சான்ஸும் வந்தது.

அஜித்தின் ‘காதல் மன்னன்’ பட பூஜையப்ப என் ‘காதலிசம்’ படத்துக்கும் பூஜை போடப்பட்டது. சில சூழல்களால அஜித் படம் பூஜையோடு நின்னுடுச்சு. சுந்தர்.சி.யை இயக்கும் வாய்ப்பும் தள்ளிப்போச்சு. ‘ஐந்தாம் படை’ல டயலாக் எழுத வைச்சார். ‘கலகலப்பு’ல ஸ்கிரிப்ட் ஒர்க் பண்ணினேன்.

சுந்தர்.சி.கிட்ட பிடிச்சதே அவர் தைரியம்தான். கதையை மட்டும் ரெடி பண்ணிட்டு, ஷூட்டிங் கிளம்பிடுவார். ‘எப்படி சார் சாத்தியம்’னு கேட்டா, ‘அட வாங்க சார்... ஸ்பாட்டுல போய் பார்த்துக்கலாம்’னுநமக்கும் நம்பிக்கை கொடுத்து கூட்டிப்போவார்! அதேமாதிரி ஷூட்டிங்கையும் எளிதா முடிச்சுடுவார்...’’ என்ற சுகி மூர்த்தி ‘கும்மாளம்’, ‘ஊதாரி’ படங்களை டைரக்ட் செய்திருக்கிறார்.

‘‘மேடை நாடகத்துல ஆரம்பிச்ச என் கேரியர் இப்ப வெப் சீரீஸ் வரை தொடருது. அடுத்து சுரேஷ் கிருஷ்ணா சாரின் மெகா புராஜெக்ட்ல கிரியேட்டிவ் ஹெட்டா கமிட் ஆகியிருக்கேன்.என் கனவு, ஆசை, லட்சியம் எல்லாமே டிஜிட்டல் ஸ்டேஜ் ஷோ நடத்தறதுதான். அதுக்கான ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணிட்டு இருக்கேன். மேடை நாடகத்தோட அடுத்த கட்டமா இது இருக்கும்...’’ என்று சொல்லும் சுகி மூர்த்தி தன் மகன் ஹேமந்த் மற்றும் மகள் ஜனனியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

மை.பாரதிராஜா

ஆ.வின்சென்ட் பால்